Saturday, November 8, 2014

இடைவேளை தாகம்



அண்மையில் ‘கத்தி’ திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாய நிலங்களை மலடாக்கும் சமகாலப் பிரச்சினையைக் கவனப்படுத்தும் கதை. குக்கிராமங்கள் வரை வேர் பிடித்து, பெட்டிக் கடைகளிலும், கலர்ஃபுல்லாகத் தொங்கும் பன்னாட்டுக் குளிர்பான கம்பெனிகளின் கொள்ளை முயற்சியில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலத்தடி நீர் வளத்தைக் காக்கும் போராட்டங்களின் தேவையை முன்வைப்பது பாராட்டிற்குரியது.

உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் வாழும் காலம் எல்லாம் போராட்டக் களங்களில் நின்று சத்தமாகப் பேசிப் பேசி, கத்திக் கத்தி காதுகள் செவிடாகிப் போன பொதுவுடைமைத் தோழர் ஜீவானந்தத்தின் பெயரைக் ‘கத்தி’ படத்தின் போராட்ட நாயகனுக்குச் சூட்டி இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

எல்லாம் சரி கோக், பெப்சிக்களின் நுரை பொங்கலில், குமுறும் விவசாயிகளின் கவலையைப் படம் பார்ப்போர் உள்வாங்கிக் கொண்டனரா?

படத்தின் இடைவேளையில் கோக், பெப்சி வகையறாக்களின் வியாபாரம் அதிகமாகவே நடந்தது. கோக், பெப்சியில் தாகம் தணிந்து, புத்துணர்ச்சியுடன் படத்தின் பிற்பகுதியை ரசிக்கத் தயாரானது கூட்டம்.

திரைப்படங்கள் பிரச்சினையை முன் வைப்பது ரசிப்பதற்கு மட்டுமா? அல்லது உணர்வுபூர்வமாக உள்வாங்கி, பிரச்சினைக்கு எதிரான மனநிலையை வளர்த்துக் கொள்வதற்கா?

‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்றொரு ஆங்கிலப் படம். சூரியனையே திருப்பிச் சுடும் அரேபியா பாலைவனத்தையும், சிக்கிக்கொள்பவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் மணற்புயலையும், அதன் வெப்பத் தகிப்பையும் யதார்த்தமாகச் சித்திரித்த படம். மேலை நாடுகளில் இத்திரைப்படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் இடைவேளை நேரத்தில் குளிர்பானங்களை வாங்கி அருந்துவோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாம். ஏசி தியேட்டரில், அதுவும் ஒரு கும்பலுக்கே தாகம் எடுக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தாகம் குடித்துத் தீர்த்த குளிர்பான பாட்டில்கள் அதிகம் என்பது உண்மை.

‘படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் தாகம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. திரைப்படத்தில் ஒருவருக்குப் பாம்பு கடித்து விட்டால், அதை லயித்துப் பார்ப்பவர்களுக்கும் விஷம் ஏறுமா என்ன? ஆனாலும் அங்கே தாகம் எடுத்தது உண்மை. காரணம், படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்கள் மனதளவில் அரேபியப் பாலைவனத்துக்கே சென்றுவிட்டனர். அதன் தகிப்பையும், வறட்சியையும் அனுபவித்து விட்டனர். அவர்களின் உடல்கள் தியேட்டரில் அமர்ந்திருந்தன. மனத்தின் நாக்குகளோ பாலைவன தாகத்தால் வறண்டன. அதுதான் உண்மை. இத்தகவலை ‘அடுத்த விநாடி’ என்ற நூலில் நாகூர் ரூமி சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால், ‘கத்தி’ படம் பார்த்த பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு மேற்கண்ட நிகழ்வுக்கு எதிர்நிலையில் மனம் இயங்கி இருக்க வேண்டாமா? நம் மனதிற்கு ஏன் வறண்ட விவசாய மண்ணின் தாகம் உணரப்படவில்லை? விவசாயி களின் பரிதாப நிலைகண்டு கசிவு ஏற்படவில்லை? பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டல் கண்டு ஏன் கோபம் வரவில்லை?

கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம், கே.பாலசந்தரால் கால் நூற்றாண்டுக்கு முன் திரைப்பட மாக வந்தபோது, “ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து, தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும் வரை, கண்ணான கண்மணியே கண்ணுறங்கு சூரியனே” என்று படத்தில் வரும் தாலாட்டுப் பாடல், படம் பார்த்த என்னை அன்றிரவு முழுக்கத் தூங்க விடாமல் செய்தது.

குடிதண்ணீருக்காக அப்படம் எழுப்பிய உணர்வுகளும், உறுத்தல்களும் படம் பார்த்தோர் மனங்களில் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தின் மனசாட்சி யையும் உலுக்கியது. மாவட்ட நிர்வாகத்தைக் கரிசல்பட்டி வட்டாரத்தை நோக்கிப் படையெடுக்க வைத்ததும், குடிதண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வைத்ததும் தமிழகத்தில் நிகழ்ந்தது நிதர்சனம்.

இன்றோ, ‘கத்தி’ திரைப்படம் இடைவேளையில் கோக், பெப்சி அருந்திவிட்டு, மீண்டும் பிரச்சினையை ரசிக்கும் மேம்போக்கு மனநிலை கொண்ட பார்வையாளர்களுக்கான பொழுதுபோக்குத்தன்மை கூடிய கூர்மை குறைந்த படமாக இருக்கிறது. என்றாலும் ‘கத்தி’யின் முனைப்பைத் தங்கள் புத்தியில் ஏற்றிக்கொள்ளப் பார்வையாளர்கள் தவறியதற்கு யாரைக் குற்றம் சொல்வது? முக்கியப் பிரச்சினையைப் பேசும் படத்தைப் பொழுதுபோக்கு படமாகத்தான் எடுப்பேன் என்று அடம்பிடிக்கும் இயக்குநரையா? அல்லது தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதோடு தன் கடமை முடிந்துவிட்டது எனக் கருதும் அரசாங்கத்தையா? அல்லது எதையுமே மழையில் நனைவதுபோல் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பார்வையாளர்களையா? வெற்றிப்பட வரிசையில் வந்துவிட்டது ‘கத்தி’! அடுத்த படத்தில் இன்னும் அதிக கோடிகளுக்கான வாய்ப்பில் நடிகரும், இயக்குநரும். வழக்கம் போல் தாகம் தணிக்க கோக், பெப்சி! எப்போதும் போல் தாகத்துடன் தமிழர்கள்!

கட்டுரையாளர் உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024