சிம்பிளாக ஆரம்பிப்போம்... 'ஐடியா' என்றால் என்ன?
'ஐடியான்னா ஐடியாதான்! அதை எதுக்கு விளக்கணும்?' என்கிறீர்களா? சூப்பர்!
அந்த அளவுக்கு யோசிக்கத்தான் நமது மூளை பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு ஐடியா இல்லை என்றால், சிக்கிமுக்கிக் கல்லில் இருந்து நெருப்பு தோன்றி இருக் காது; கோணல்மாணலான பாறை சக்கர வடிவம் எடுத்திருக்காது; இட்லி ஆவியில் வெந்திருக்காது; வழுவழு தாளில் அச்சிடப் பட்டு இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டு இருக்காது. ஐடியாக்கள் தான் இந்த உலகை இயக்குகின்றன!
நீங்கள் பள்ளி-கல்லூரி மாணவர், ஊழியர், வணிகர், இல்லத் தலைவி,அரசியல் வாதி, வெட்டி ஆபீஸர் என வாழ்வின் எந்தப் படிமத்தில் இருந்தாலும், உங்க ளுக்குள் உதிக்கும் 'ஐடியா'தான் உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். ஜாக் ஃபாஸ்டரின் 'HOW TO GET IDEAS' என்கிற புத்தகத்தைப் படிக்கப் படிக்க மூளைக்குள் பளிச் பளிச் பல்ப்.
அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர் களுக்குப் பல்லாண்டுகள் பயிற்சி அளித்த ஜாக், 'மாத்தி யோசி' டிராக்கில் பயணிக்கவைக்கிறார். இனி, புத்தகத்தில் இருந்து...
சிந்திக்க வேண்டாம், சங்கடம்!
நம்மவர்களிடம் உள்ள பெரிய சிக்கலேநம் மனத் தடைதான். ஒரு காரியம் பிராக்டிகலாகச் சாத்தியமா என்று சிந்திப்பதிலேயே நமது சக்தியைச் செலவிட்டுச் சோர்ந்துவிடுகிறோம். அட்லீஸ்ட், சிந்தனை அல்லது கற்பனைகளையாவது குறுக்கிக்கொள்ளாமல் பிரமாண் டப் பந்தல் விரிப்போமே!
இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள். உயரமான இரண்டு கட்டடங்கள் எதிரெதிரே அமைந்து இருக்கின்றன. இரண்டுக்கும் நடுவே நீளமான பலகை ஒன்று கிடத்தப்பட்டு இருக்கிறது.
நீங்கள் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்ட டத்துக்கு அந்தப் பலகை மீது நடந்து செல்ல வேண் டும். கீழே விழாமல் சென்றால், உங்களுக்கு ஊக்கத் தொகை 1,000 ரூபாய். கீழே விழுந்தால், உங்கள் சிதறல்களை ஒரு கோணிக்குள் அடக்கிவிடலாம்.
'அடப் போங்கப்பா! 1,000 ரூபாய்க்காக எந்த மடையனாவது ஆயுளையே அடகுவைப்பானா?' என்று நினைத்து, நீங்கள் அடுத்த சிப் சிந்தனைக்குக்கூட உங்கள் கற்பனையை நகர்த்த மறுத்துவிடுவீர்கள். ஆனால், மறு முனையில் உங்கள் காதலியை வில்லன் கடத்திவைத்திருக்கிறான்; நீங்கள் பலகையில் நடந்து மறுபுறம் வரவில்லை என்றால், அவளை அவன் அந்த அபார உயரத்தில் இருந்து 'தொப்'பெனக் கீழே போட்டு விடுவான். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ('போட்டா போட்டுக்கட்டும்... வேற பார்ட்னர் தேடிக்குவேன்' என்பது 'ஐயகோ ஐடியா!' அது வேண்டாம்!)
துணையைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்கள் சிந்தனை பரபரவென்று அந்தப் பலகையில் நடந்து கடக்கும் சாத்தியங்களை அலசி ஆராய்வதில் பயணிக் கத் தொடங்கும். பேலன்ஸுக்குக் கையில் ஒரு கம்பு எடுத்துக்கொள்ளலாமா, கீழே குனிந்து பார்க்காமல் நடந்தால் தலை சுற்றாது, செருப்பைக் கழற்றிவிட்டு நடப்போம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்குவீர்கள். இப்போது உங்கள் கவனம் எல்லாம் உங்கள் துணை யைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே.
ஆக, இப்போது உங்கள் லட்சியத்தை அடைவதற்கான வழிகளைச் சிந்திக்கும் வேளையில், உங்களுக்குள் புதுப்புது ஐடியாக்கள் முளைத்துக் கிளம்பும். எந்தப்பிரச் னையை எதிர்கொள்ளும்போதும் இந்த மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். இறுதி இலக்கை நோக்கித் தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்!
ஒரு சின்ன டெஸ்ட்!
கிட்டத்தட்ட கோவா போல, அமெரிக்காவின் பிரபல கடற்கரை சுற்றுலாத் தலம் அது. சுற்றுலா மட்டுமே அங்கு ஒரே பிரதான வருமானம். வார இறுதி நாட்களில் அங்கு குவியும் கல்லூரி இளைஞர்களின் அட்டகாசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனது. அவர்களை அடக்க வேறு வழி தெரியாமல், துடுக்குத்தனம் செய்யும் இளைஞர்களைக் கைது செய்து ஓர் இரவு மட்டும் சிறையில் அடைத்துவைக்க முடிவு செய்தார் காவல் துறை உயர் அதிகாரி.
புரொஃபஷனல் குற்றவாளிகள் இல்லை என்பதால், கைது செய்யப்படும் இளைஞர்களுக்கு ஜெயிலில் சிக்கன் உணவு வழங்கப்பட்டது. நாளடைவில் ஜெயிலுக்குச் செல்வது அவமானம் என்ற நிலை மாறி, ஜெயில் சிக்கன் உணவு சாப்பிடுவது இளமையின் அடையாளம் என்பதாக மாறியது. அதுவரை தப்புத்தண்டா செய்ய வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர்கள்கூட 'ஜெயில் சிக்கன் கௌரவம்' தேடி 'நானும் ரௌடிதான்' என போலீஸோடு மோதி விளையாட ஆரம்பித்தார்கள். சிறைக்கு வெளியே 'ஜெயில்ஃபுல்' போர்டு மாட்டும் அளவுக்கு நெரிசல்.
'இளைஞர்களை அடக்கி ஒடுக்க, இருக்கும் போலீஸ் ஃபோர்ஸ் போதாது!' என்று புலம்பி, டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி செய்தார் உயர் அதிகாரி.
புதிதாக வந்த உயர் அதிகாரி நிலைமையை ஆராய்ந் தார். ஒரே ஒரு மாற்றம்தான் செய்தார். அதன் பின் இளைஞர்கள் அடங்கி ஒடுங்கி, போலீஸைப் பார்த்த துமே வாலைச் சுருட்டிக்கொண்டு பதுங்கினர்.
மாற்றம்?
ஜெயிலில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிக்கன் சாப்பாட்டை நிறுத்திவிட்டு, பிறந்த குழந்தை களுக்கு வழங்கப்படும் செரிலாக், பவுடர் பால் போன்ற பச்சப் புள்ள உணவுகளை வழங்கச் சொன்னார்.
இந்த 'கைப்புள்ள ட்ரீட்மென்ட்'டில் வெட்கம் பிடுங்கித் தள்ள, இளைஞர்கள் தாங்களாக மனம்திருந்தி னார்கள்.
அந்த மகா மாற்றத்துக்குக் காரணம் ஒரு சின்ன 'ஐடியா'.
உங்களுக்குள் எப்போது நிகழும் அந்த மகா மாற்றம்?!
- கி.கார்த்திகேயன்
No comments:
Post a Comment