‘ஒருமுறை தேள் கொட்டிவிட்டால், அவர்களுக்கு ஆயுள் முழுவதும் இதயம் தொடர்பான பாதிப்புகள் எதுவும் வராது’ என்று 2008ல், இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு ஆச்சரியம் கிளப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து தேளின் விஷத்தில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து தயாரித்ததாக ஒரு ரஷ்ய மருந்து நிறுவனம் அறிவித்தது. இப்போது அமெரிக்காவில் உள்ள சியாட்டில் புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் தேள் விஷத்திலிருந்து மூளைப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார்கள். புற்றுநோயிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற இது பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, மனிதர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
முதல்முறையாக இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனமான ‘எஃப்.டி.ஏ’. அத்துடன், இந்த மருந்தை மூளைப் புற்றுநோயாளிகளுக்குப் பரிசோதித்துப் பார்க்கவும் எஃப்.டி.ஏ. அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதாக அறிவித்திருந்ததை எஃப்.டி.ஏ. ஏற்றுக்கொள்ளவில்லை. ‘ட்யூமர் பெயின்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மருந்து, முதல் கட்டமாக மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் புற்றுநோய் செல்களை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் அகற்ற முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ட்யூமர் பெயின்ட் மருந்தை, இஸ்ரேலில் காணப்படும் ‘டெத் ஸ்டாக்கர்’ என்ற கடும் விஷம் கொண்ட தேளின் விஷத்திலுள்ள புரதத்தில் இருந்து உருவாக்கியிருக்கிறார்கள். சியாட்டிலை சேர்ந்த பேராசிரியரும் புற்றுநோய் சிறப்பு மருத்துவருமான ஜிம் ஆல்ஸன் தயாரிப்பு இது. ஏற்கெனவே சுண்டெலிகளுக்கும் நாய்களுக்கும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது.
80 லட்சம் அமெரிக்க டாலர் செலவான இந்த ஆய்வு வெற்றி பெற்றிருப்பதால், இப்போது தேளின் விஷத்தை இயற்கை மூலக் கூறுகளில் இருந்து தயாரிக்க முடியுமா என்றும் செயற்கையாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆலோசனையில் இருக்கிறார்கள். அப்புறம், ஒவ்வொரு முறையும் தேளைத் தேடிப் போய் கொட்டு வாங்க முடியாதில்லையா?
No comments:
Post a Comment