இந்தியாவில் இனி யாரையுமே கடைக்கு போக விடமாட்டோம் என்று கூறும் அளவுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. அமேசானின் மிஷன் மார்ஸ், ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேயை தொடர்ந்து தற்போது களமிறங்கியுள்ள ஸ்னாப்டீல் இன்று சேவிங்ஸ் டே என ஆஃபர் தினத்தை அறிவித்துள்ளது. இன்றைய ஆஃபர்கள் ஃப்ளிப்கார்ட் சந்தித்தது போல சொதப்பல்களை சந்திக்குமா? அதனை சரி செய்ய முயற்சிக்குமா? என்பதை பார்ப்போம்.
இன்று காலை 7 மணிக்கு ஆஃபர்கள் துவங்கின. ஸ்னாப்டீல் ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே போல் தனித்தனி பிரிவுகளில் விற்பனை செய்யாமல் ஒரே ஆஃபராக ''ஹவர்லி ஆஃபர்ஸ்'' என்ற பெயரில் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கும் 50-60 சதவிகித ஆஃபர்களில் விற்பனை செய்கிறது. இதில் குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ்,பேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் தான் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை போல சிறிது நேரத்தில் குறைந்த விலைக்கு அதிக ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டன. மணி நேரத்தை அடிப்படையாக கொண்டு ஸ்னாப்டீல் ஆஃபர்களை வெளியிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இது தான் குறைந்த விலையா? இல்லை இன்னமும் குறையுமா என்ற குழப்பத்தில் இருப்பதாக சமூக வலைதலங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த ஆஃபர்களில் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
ஏற்றி இறக்கும் ஆஃபர்!
இ-காமர்ஸில் பொருள் வாங்குபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது, விலையைத்தான். சமீபத்தில் பிரபல இ-காமர்ஸ் இணையதளம் ஒன்று ஃபாலோ செய்த டெக்னிக் திகைக்க வைத்தது. ஒரு குறிப்பிட்ட விலையைப் பொருளின் விலையாக நிர்ணயித்துவிட்டு, அதில் 60% ஆஃபரை வழங்கியது. ஆனால், அந்த இணையதளம் காட்சிக்கு வைத்த பொருளின் புகைப்படத்தில் அதிகப்பட்ச விற்பனை விலை (MRP) குறைவாகத்தான் அச்சிடப்பட்டிருந்தது. உண்மையில் ஒப்பிட்டுப்பார்த்தால், ஆஃபர் விலையானது அச்சிடப்பட்ட விலையைவிட அதிகம். இப்படி விலையை உயர்த்தி, பின்னர் அதில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன ஆன்லைன் நிறுவனங்கள். ஆக, ஒரு பொருளின் விலை நேரடியாக விற்கப்படும் கடைகளில் எவ்வளவு என நன்கு விசாரித்து, ஆன்லைனில் நிஜமாகவே குறைவாக இருந்தால் மட்டுமே வாங்கலாம்.
நிதானம் முக்கியம்!
இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆஃபர் என ஆன்லைனில் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்துநீங்கள் அவசரப்பட வேண்டாம். காரணம், பொருள்களை வாங்கும்முன், அந்தப் பொருளின் விலை எப்படியெல்லாம் மாறி தற்போது இந்த விலையில் இருக்கிறது என்பதை வரைபடமாக வழங்கும் அளவிலான தொழில் நுட்பத்தைக் கூகுள் வழங்கியுள்ளது. உங்கள் கூகுள் க்ரோம் ப்ரெளஸரில் ‘கம்பேர் ஹாட்கே’ (Compare Hatke) எனும் இணைப்பை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், நீங்கள் எந்த இ-காமர்ஸ் இணையதளத்தில் எந்தப் பொருளைத் தேடினாலும், அதன் முந்தைய விலையை வரைபடமாக தந்துவிடும். இதற்கு அதிகபட்சம் இரண்டு நிமிடம்கூட ஆகாது. இந்த இரண்டு நிமிடத்துக்கு அவசரப்பட்டால் குறைந்த விலையில் வர்த்தகமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.
உத்தரவாதம் உண்டா?
நிஜமான தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குகிற அதேநேரத்தில், அந்தப் பொருளுக்கான கேரன்டி சர்ட்டிஃபிகேட்டைப் பார்த்து வாங்கு வதும் முக்கியம். எந்த ஒரு பொருளுக்கு கீழேயும் தரப்பட்டிருக்கும் விவரங்களை நம்மில் பலரும் படித்துப் பார்ப்பதே இல்லை. அதில், இதனை வழங்கும் சப்ளையர் உத்தரவாதமானவரா என்பதை அறிய ‘செக்யூர் ஷாப்பிங் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். அப்படி வழங்கப்பட்ட பொருள்களுக்குத் தான் ஏதாவது தவறு நடந்தால், இழப்பீடோ அல்லது சர்வீஸோ திரும்பக் கேட்க முடியும். சான்றிதழ் பெறாதப் பொருள்கள் ரிஸ்க் நிறைந்தவையே!
ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment