Thursday, November 6, 2014

கதவுகள் இல்லாத கிராமம்! கூரை இல்லாத ஆலயம்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமத்தில் அமைந்திருக் கிறது ஒரு கோயில். இந்தக் கோயிலின் விசேஷமே, கோயிலுக்குக் கதவுகள் இல்லை என்பதுதான்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்த மக்கள், பஞ்சத்தின் காரணமாக ஊரை விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது, அதுவரை அவர்கள் வழிபட்டு வந்த முனியப்ப சுவாமி கோயிலில் இருந்து ஓர் அசரீரி, ''என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்'' என்று ஒலித்ததாம். அப்படியே முனியப்ப சுவாமியையும் தங்களுடன் எடுத்துக்கொண்டு புறப்பட்ட மக்கள் வந்து சேர்ந்த இடம்தான் இந்த பாப்பனம் கிராமம்.
பாப்பனம் கிராமத்துக்கு வந்ததும் மக்கள் செய்த முதல் வேலையே, தாங்கள் வழிபட்டு வரும் முனியப்ப சுவாமிக்கு ஒரு கோயில் கட்டியதுதான். கோயிலைக் கட்டி முடித்துக் கதவு வைக்க இருந்தபோது மறுபடியும் ஓர் அசரீரி, ''என் கோயிலுக்கு கதவு வைக்க வேண்டுமானால் தங்கத்தில்தான் வைக்க வேண்டும்'' என்பதாகக் கேட்டது. கோயிலுக்குத் தங்கத்தில் கதவு வைக்க யாரால் முடியும்? எனவே, கோயிலுக்குக் கதவுகள் வைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். சுவாமியின் கோயிலுக்கே கதவு இல்லாதபோது தங்களுடைய வீட்டுக்கு மட்டும் கதவு எதற்கு என்று நினைத்த மக்கள், தங்கள் வீடுகளுக்கும் கதவுகள் வைக்காமலேயே விட்டுவிட்டனர். இருந்தும், எந்த அசம்பாவிதமும் இங்கே நிகழாமல் காத்து வருகிறார் முனியப்பசாமி.
இந்தக் கிராமத்து மக்கள் யாரும் கட்டிலில் உறங்குவது இல்லை. மண் தரையில்தான் உறங்குகிறார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த ஊருக்கு வந்தால், அவர்களும் தரையில்தான் உறங்கவேண்டும்.
அறுவடைக் காலத்தில், முதலில் கொஞ்சம் அறுவடை செய்து முனியப்ப சுவாமிக்குக் காணிக்கை செலுத்திய பிறகே அறுவடையைத் தொடர்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.
வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்துகொண்டு முனியப்ப சுவாமியை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடுவதாகவும் பரவசத்துடன் கூறுகிறார்கள்.
முனியப்ப சுவாமி கோயிலுக்கு அருகிலேயே  அரியநாச்சிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு கூரை இல்லை. மக்கள் பலமுறை இந்தக் கோயிலுக்கு கூரை அமைத்தும், கூரை இடிந்து விழுந்துகொண்டே இருந்தது. அதனாலேயே இன்று வரை அக்கோயில் கூரை இல்லாமல்தான் இருக்கிறது. இந்த அரியநாச்சி அம்மனுக்கு மார்கழி மாதம் பொங்கல் வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024