டாக்டர் கனவு... குடிகார அப்பா... தற்கொலை... தினேஷின் 1024 மார்க் யாருக்காக?
அப்பாவின்
குடிப்பழக்கத்தால் மனம் சோர்ந்த தினேஷ், ஒரு வைகறைப்பொழுதில் ஊர் பார்க்க
தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டான். இரண்டு வாரங்களுக்கு முன்னர்
நடந்த இந்த நிகழ்வு, நமக்கு நினைவிருக்கலாம். 'எப்படியும் டாக்டர் ஆகிவிட
வேண்டும்!' என்ற அவனுடைய லட்சியக் கனவுகளை, அப்பாவின் மது எரித்துக்
கொன்றது. தினேஷ் இறந்தபோது, அவன் அப்பாவையும் குடும்பத்தையும்
சந்திப்பதற்காக திருநெல்வேலியில் உள்ள அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.
தற்போது
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கும் சமயத்தில்
தினேஷின் தங்கை தனுஸ்ரீ கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ``அண்ணேன்
பன்னிரண்டாவது பரீட்சை எழுதிட்டு வீட்ல இருந்த சமயத்துலதான் இப்படிப்
பண்ணிக்கிட்டது. அப்போ ஊர்க்காரங்க எல்லாம் `என்னடா தினேஷ் பாஸ்
ஆகிடுவியா?'னு கேப்பாங்க. `என்ன பாஸா... ஆயிரத்துக்குமேல மார்க்
நிச்சயம்'னு" எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்கும்" என்றாள்.
அவன்
வார்த்தைகள் பொய்யாகவில்லை. தினேஷ், சொன்னதை நிரூபித்துவிட்டான். தற்போது
வெளிவந்திருக்கும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அவன் எடுத்த மதிப்பெண்
1,024.
தமிழ் - 194
ஆங்கிலம் - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல் - 129
கணிதம் - 194
மொத்தம் - 1,024
ஆனால்,
இதைக் கண்டு ரசிக்க, தன் உழைப்பின் பலனைக் கண்டு ஆனந்தப்பட இன்று அவன்
உயிரோடு இல்லை. தங்களின் கலங்கரை விளக்கம் அணைந்துபோன துயரத்தில்
திசையற்றுக் கிடந்த அந்தத் தம்பி-தங்கை, தற்போது அண்ணனின் மதிப்பெண்
பார்க்கும்போது அழுவார்களா... ஆனந்தப்படுவார்களா? அந்த மழலைகளின் முகம் என்
நினைவுக்கு வருகிறது.
ஊருக்குச்
சென்றபோது தினேஷின் தம்பி பாலச்சந்தரிடம் அண்ணனைப் பற்றிக் கேட்டபோது "எங்க
அண்ணன் பத்தாவதுல 468 மார்க். இங்கிலீஷ்லாம் சூப்பரா படிக்கும். எனக்கும்
நிறைய சொல்லிக்கொடுக்கும். அதுக்கு டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதோட,
எல்லா நோட்டுபுக்லயும் 'தினேஷ் நல்லசிவன் எம்.பி.பி.எஸ்'னு
எழுதிவெச்சிருக்கும். ப்ளஸ் டூ-வுல நிச்சயமா ஆயிரத்துக்கு மேலதான்
வாங்கும்" என்றவன் தன் தங்கை தனுஸ்ரீயைப் பார்த்து ``பாப்பா, அண்ணனோட அந்த
நோட்டை எடுத்துட்டு வாயேன்" என அவன் சொன்னதுதான் தாமதம், அண்ணன் இறந்துபோன
துக்கத்தையும் மீறி அவன் எழுதிவைத்திருப்பதைப் பெருமிதமாகக் கொண்டுவந்து
காண்பித்த அந்தக் குழந்தைத்தனம், தினேஷுடைய இழப்பின் கனத்தை இன்னும்
கூட்டியது. இந்தப் பிள்ளைகளுக்குத் தாயாக இருந்து வழிகாட்டியவன் எப்படி
தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான் என்ற கேள்வியும் என்னை அரித்தது. அவன்
மனம் வெறுத்துப்போகும் அளவுக்கு தந்தையின் குடிப்பழக்கம் தினேஷை
அவமானப்படுத்தியிருக்கிறது.
பேச்சுக்குப்
பேச்சு `அண்ணா' என்றழைக்கும் அந்தப் பிள்ளைகளை விட்டுவர மனம் இல்லாமல்,
தயக்கத்துடன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற நேர்ந்தது.
அக்கம்பக்கத்தில்
உள்ள கிராமவாசிகளிடம் பேசினேன் ``நல்லா துடியான பய, கிடைக்கிற
நேரத்திலெல்லாம் வேலைக்குப் போயிடுவான். பெயின்ட் அடிக்க, மரம் ஏர்ற,
காத்தாடி ஆலைக்குன்னு எந்த வேலைக்குன்னாலும் போவான். கொடுத்த வேலைகளைத்
திருத்தமா செய்வான். அவன் சம்பாதிச்சு கொண்டுவர பணத்தையெல்லாம்
சண்டைபோட்டுப் புடுங்கி, குடிக்க ஆரம்பிச்சார் அவங்க அப்பா. பையன்
சலிச்சுப்போயி ரோஷப்பட்டுட்டான். ஆனா, இப்போ யாருக்கு நஷ்டம். அந்த ஆளு
குத்துக்கல்லு மாதிரியில்ல உக்காந்திருக்கான். அந்தப் பிள்ளைங்களைப்
பார்த்தீங்களா..?” என்றார் ஊர்க்காரர் ஒருவர்.
பாளையங்கோட்டையில்
உள்ள ஒரு பள்ளியில், தினேஷ் நீட் தேர்வு எழுதுவதாக இருந்தது. தேர்வில்
வெற்றி பெறுவோமா என்ற பயம், சித்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, அப்பா தினமும்
குடிப்பதால் ஏற்படும் மனஉளைச்சல் என எல்லாம் சேர்ந்து அவனை
அழுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டிலிருந்து
வெளியேறி ஓர் அதிகாலைப் பொழுதில் பாளையங்கோட்டை ரயில்வே பாலத்தின் மீதேறி
நைலான் கயிற்றின் உதவியுடன் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டான் அந்த
மாணவன்.
தான்
இறப்பதற்கு முக்கியக் காரணமாக அவன் நினைத்தது, அப்பாவின் குடிப்பழக்கம்.
அதற்குக் காரணம், டாஸ்மாக். இனி யாருடைய மரணத்துக்கும் மதுப்பழக்கம்
காரணமாகிவிடக் கூடாது என்று தற்கொலை செய்துகொள்வதற்கு 'மது ஒழிய வேண்டும்'
என மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தொண்டை எலும்புகள் முறிய
அந்தரத்தில் தொங்கியிருக்கிறான் தினேஷ்.
எத்தனையோ
மரணங்களுக்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக்கும் அதை ஏற்று நடத்தும்
அரசாங்கமும் இந்தச் சாராய வியாபாரத்தை நிறுத்திக்கொள்ளப்போகிறதா அல்லது
குடிக்கும் அப்பாக்களும், கணவன்களும், அண்ணன்களும், தம்பிகளும்
திருந்திவிடப்போகிறார்களா?
மதுப்பழக்கத்தை கைவிடுவதற்கு, நம் வீட்டிலும் ஒரு தற்கொலைக்காக நாம் காத்திருக்கப்போகிறோமா..?
No comments:
Post a Comment