Thursday, May 17, 2018

ஆர்டரைப் படிக்காமல் அவசர கதியில் கைதி விடுதலை: கையைப் பிசைந்து நிற்கும் புழல் சிறை அதிகாரிகள்

Published : 17 May 2018 19:56 IST

சென்னை

 

சிறை, கைதி சித்தரிப்புப் படம்

சிறையில் அடைக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்தி வந்த நீதிமன்ற உத்தரவை விடுதலை உத்தரவு என நினைத்து குற்றவாளியை விடுவித்த புழல் சிறை அதிகாரிகள் தற்போது கையைப் பிசைந்து நிற்கின்றனர். இந்த விவகாரத்தில் ஒரு காவலரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) ரவிச்சந்திரன் (எ) மாங்கா ரவி (26). ஜீவா என்பவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பின்னர் ரவி உட்பட கூட்டாளிகள் உட்பட 14 பேரை கடந்த டிச.23 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து ரவி தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

கடந்த சிலவாரங்களுக்கு முன் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த சிலவாரங்களுக்கு முன் அவரது முறையீட்டை தள்ளுபடி செய்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து தீர்ப்பாயத்தின் உத்தரவு புழல் சிறைக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவை அவசர கதியில் படித்த அதிகாரிகள் ரவியை விடுதலை செய்ய உத்தரவு வந்திருப்பதாக நினைத்து அவரை விடுதலை செய்து வெளியே அனுப்பினர். ’தன்னை தீர்ப்பாயம் வெளியே விடவில்லையே பின் எப்படி இவர்கள் விடுதலை செய்கிறார்கள்?’ என்று மனதுக்குள் கேள்வி எழுப்பிய ரவி சந்தோஷத்துடன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வீட்டுக்குச் சென்ற அவர் ஜாலியாக இருக்கலானார். ரவி வெளியே சுற்றி வருவதைப் பார்த்த கொலையான ஜீவாவின் உறவினர்கள் சிறையில் இருக்க வேண்டிய நபர் எப்படி வெளியில் வந்தார் என்று யோசித்தனர். தப்பி ஓடி வந்துவிட்டாரா? என்று விசாரித்தனர். ஆனால் ரவி கூறிய பதில் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“நீங்க என்னடா என்னை உள்ளே தள்ளுவது, கமிஷனர் என்னடா குண்டர் சட்டத்தில் உள்ளே வைப்பது? மேலே இருக்கிறவன் அடிச்சான் பாருடா ரிலீஸ் ஆர்டரு. என்னைப்பற்றி மேலே இருக்கிறவனுக்கு தெரியும் ரிலீஸ் பண்ணச் சொன்னான், ரிலீஸ் பண்ணிட்டானுவ” என்று வடிவேல் பாணியில் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவாவின் உறவினர்கள் தங்களது வழக்கறிஞரிடம் சென்று விஷயத்தைக் கூறியுள்ளனர். 'அவர் அப்படி வெளியே வர வாய்ப்பில்லையே, நான் விசாரிக்கிறேன்' என்று கூறி தீர்ப்பாயத்தில் விசாரித்துள்ளார். அங்கு ரவியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லும் என்று உத்தரவிடப்பட்டு அது சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் நபரை எந்த அடிப்படையில் விடுதலை செய்தார்கள் எனக் கேட்டு ஜீவா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஏற்ற நீதிமன்றம் விளக்கம் கேட்டு சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப அப்போதுதான் தங்கள் தவறு சிறைத்துறைக்கு தெரிந்துள்ளது.

குண்டர் சட்டம் செல்லும் என்று வந்த உத்தரவை தவறாக விடுதலை உத்தரவு என நினைத்து ரவியை விடுதலை செய்து அனுப்பியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பதறிப்போன அதிகாரிகள் ரவியைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக பிரதீப் என்ற காவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறைத்துறை சூப்பிரண்ட் தமிழ்ச்செல்வனிடம் இது குறித்துக் கேட்க தொடர்பு கொண்டபோது அவர் இணைப்பில் வரவில்லை. மேலும் சூப்பிரண்ட் மற்றும் ஜெயிலர் இதற்கு பொறுப்பு என்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரவியைப் பிடிக்கும் முயற்சியும் நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...