Friday, August 3, 2018

15 ஆயிரம் ரூபாய்க்கு ‘ஆப்பிள் ஐபோன்’: சோப்புக்கட்டியைக் கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய நபர்கள்

Published : 01 Aug 2018 21:56 IST

சென்னை

 

ஏமாற்றிய நபர், சோப்புக்கட்டி, ஐபோன்

குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் கிடைக்கிறதே என்று ஏமாந்து சோப்புக்கட்டியை வாங்கிய வங்கி மேலாளர் மயிலாப்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூர், நடுத்தெருவில் வசிப்பவர் ரமேஷ் (36). இவர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார்.

வங்கியின் வழக்கமான பணிகள் முடிந்த பின்னர் தனது அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ரமேஷ். அப்போது இரண்டு பேர் அவரைப் பார்க்க வந்திருப்பதாக செக்யூரிட்டி சொல்ல, உள்ளே வரச்சொல்லி தனது அறையில் அமர வைத்திருக்கிறார்.

'அவர்களிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். 'சார், நாங்கள் ஐபோன் கம்பெனியில் பணியாற்றுபவர்கள், எங்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஐபோன் கிடைக்கும், அதை முக்கியமான நபர்களுக்கு அதே விலையில் விற்றுவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

அவர்களை சந்தேகத்துடன் பார்த்த ரமேஷ், 'எனக்கு செல்போன் எல்லாம் வேண்டாம்' என்று கூறியுள்ளார். 'சார், அப்படிச் சொல்லாதீர்கள். இது பல வசதிகள் கொண்ட ஐபோன். போனால் கிடைக்காது' என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 'என்ன விலைக்கு தருவீர்கள்? உங்களை எப்படி நம்புவது?' என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் புத்தம் புதிய ஐபோன் டப்பாவை எடுத்துக் காட்டியுள்ளனர். அதனுள்ளே புத்தம் புது ஐபோன் இருந்தது. அதை எடுத்து ஆன் செய்து காட்டியுள்ளனர். அதில் உள்ள அம்சங்களைப் பார்த்தவுடன் ரமேஷுக்கும் ஆசை வந்துள்ளது. 'எவ்வளவு விலை?' என்று கேட்டுள்ளார். 'வெறும் 15 ஆயிரம் மட்டும்தான் சார்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

'அவ்வளவு குறைவாக ஏன் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'அதான் சொன்னோமே சார், நாங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதால் எங்களுக்கு குறைந்த விலைக்கு கிடைக்கும். அதை நாங்கள் விற்றுவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

மிகுந்த தயக்கத்துடன் 15 ஆயிரம் கொடுத்து செல்போனை வாங்கியுள்ளார். செல்போனை பழையபடி அட்டைப்பெட்டியில் போட்டு அவரிடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கி டேபிள் மீது வைத்துள்ளார்.

’சார் வேறு யாருக்காவது வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் சார், அடுத்த வாரம் வருகிறோம்' என்று கூறி அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். ஐந்து நிமிடங்கள் கழித்து ஆவலோடு ஆப்பிள் ஐபோனைப் பிரித்துப் பார்த்துள்ளார்.

அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அட்டைப்பெட்டிக்குள் ஆப்பிள் ஐபோனுக்குப் பதில் பிரபல கம்பெனியின் சோப்புக்கட்டி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அறையைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். அதற்குள் அந்த நபர்கள் மாயமாகிவிட்டனர்.

வேறு வழியில்லாமல் சோப்புக்கட்டியை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார், 'சார் எங்காவது ஆப்பிள் ஐபோன் 15 ஆயிரத்துக்கு கிடைக்குமா? அதை விற்பவன் வங்கி உள்ளே வந்துதான் விற்க வேண்டுமா?' என்று கேட்டு புகாரை வாங்கியுள்ளனர்.

பின்னர் வங்கியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை எடுத்துள்ளனர். அதில் இரண்டுபேர் முதுகில் பையை மாட்டியபடி நிற்பதும், வங்கி மேலாளருடன் பேசுவதும் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad  Amisha.Rajani@timesofindia.com 22.09.2024  Hyder...