Saturday, August 11, 2018

மாவட்ட செய்திகள்

3 கி.மீ. தூரத்துக்கு செல்லலாம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டாக்சி, ஷேர்–ஆட்டோ சேவை




குறிப்பிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. தூரம் உள்ள பகுதிகளுக்கு டாக்சி, ஷேர்–ஆட்டோ சேவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 04:30 AM
சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில் ஷேர்–ஆட்டோ மற்றும் டாக்சி சேவை 11–ந்தேதி (இன்று) முதல் தொடங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்த சேவைகள் 6 மாத காலத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, சின்னமலை, நந்தனம், திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் டவர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் ஷேர்–ஆட்டோ சேவைகள் இயக்குவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேபோல கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏஜி–டி.எம்.எஸ். மற்றும் வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டாக்சி சேவை இயக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து, ஷேர்–ஆட்டோ மற்றும் டாக்சி சேவை 3 கி.மீ. தூரத்திலான சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இயக்கப்படும்.

ஷேர்–ஆட்டோவில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.10–ம், டாக்சி சேவைக்கு ரூ.15–ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வி.ஆர்.மால், பாடி மேம்பாலம், சரவணா ஸ்டோர்ஸ், திருமங்கலம் வரையிலும், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தாமரை ஐ.டி.பார்க், ‘சிபெட்’ தலைமை அலுவலகம், கிண்டி பஸ் நிறுத்தம் வரையிலும், அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிலான பகுதிக்கும் டாக்சி சேவை இயக்கப்படும்.

இதேபோல ஏஜி–டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை, போஸ்ச் அலுவலகம், செம்மொழி பூங்கா வரையிலும், வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சிம்ஸ் ஆஸ்பத்திரி, முருகன் கோவில், மேனகா கார்ட்ஸ் வரையிலும் இயக்கப்படும்.

அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பு, செக்டர்–9, 10, ஆர்.டி.ஓ. மைதானம், செக்டர்–12, அண்ணாநகர் சாலை வரையிலும், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பட் சாலை, சென்னை வர்த்தக மையம், மியாட் ஆஸ்பத்திரி, செயின்ட் பாட்ரிக்ஸ் தேவாலயம் வரையிலும், ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி பஸ் நிலையம், திரு.வி.க.நகர் தொழிற்பேட்டை வரையிலும் ஷேர்–ஆட்டோ சேவை இயக்கப்படும்.

கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, விஜயநகர் சந்திப்பு, வேளச்சேரி வரையிலும், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பாடிகுப்பம், முகப்பேர் தொழிற்பேட்டை, ஜே.ஜே.நகர், முகப்பேர் மேற்கு, எம்.ஜி.ஆர். கல்லூரி, டேனியல் தாமஸ் பள்ளி வரையிலும், பரங்கிமலையில் இருந்து மேடவாக்கம் மெயின்ரோடு, ஐ.ஆர்.ஆர். வரையிலும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிலான தூரத்துக்கும் ஷேர்–ஆட்டோ சேவை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024