Saturday, August 11, 2018

தேசிய செய்திகள்

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ள சேதம்





கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 05:45 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை பார்வையிடுகிறார்.

இடுக்கி,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3-வது மதகில் மட்டும் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீதமுள்ள 4 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் 5 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன.

மூணாறை அடுத்த பள்ளிவாசல் என்ற மலைப்பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. பலத்த மழையால் இந்த விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த விடுதிக்கு செல்லும் பாதை மண்ணால் மூடியது. அங்கு தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 61 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

இதையடுத்து மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள சுற்றுலா துறை அறிவுறுத்தி உள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் இன்று (சனிக்கிழமை) இடுக்கி வர உள்ளனர். அவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

கொச்சி சர்வதேச விமான நிலைய பகுதியில் தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் இல்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். மேலும் இன்று (சனிக்கிழமை) மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட உள்ளார்.

ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்டு வருவது திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

கேரள கவர்னர் சதாசிவம், சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார். மேலும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

இதேபோல் மக்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், நிவாரண பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கவர்னர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணன்தானம், மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள், வெள்ளத்தால் கேரள மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசு நிவாரண நிதியை உடனடியாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், ‘கேரள மாநில வெள்ள பாதிப்புக்கு உதவ மத்திய அரசு அனைத்துவிதத்திலும் தயாராக உள்ளது’ என்றார். மேலும் வெள்ள பாதிப்பை பார்வையிட தான், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கேரளா செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தார். அப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...