Thursday, August 2, 2018

லண்டன் டாக்டர் வருகை கருணாநிதிக்கு சிகிச்சை

Added : ஆக 01, 2018 23:20


சென்னை/: கருணாநிதியின் உடல் நலம் விசாரிப்பதற்காக, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நேற்றும் மருத்துவமனை வந்து சென்றனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, ஜூலை, 27ம் தேதி நள்ளிரவு, 1:30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், இன்னும் சில தினங்கள், அவர் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும், மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, தினமும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவருமான, அஜித் சிங், மருத்துவமனைக்கு வந்தார். தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் விவேக், தொழில் அதிபர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீத் அன்சாரி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ் ஆகியோர், தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, கருணாநிதி யின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

லண்டன் டாக்டர் : முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில், லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற, தொற்று நோய் சிகிச்சை நிபுணர், நேற்று காவேரி மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், கருணாநிதியின் உடலை பரிசோதித்தார்; சிகிச்சை ஆவணங்களை பார்த்தார். பின், 'கருணாநிதியின் வயது முதிர்வால், அவருக்கு தற்போது அளித்து வரும் மருத்துவ சிகிச்சை போதுமானது' என, தெரிவித்தார். மேலும், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். 

நொறுக்கு தீனி, 'மாஜி' : கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், பக்கோடா, மிக்சர், முறுக்கு, காரசேவ் போன்ற நொறுக்கு தீனிகளை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, இரண்டு எழுத்து முன்னாள் அமைச்சர் ஒருவர், அடிக்கடி வரவழைத்து சாப்பிடுவது வழக்கம். அதை, காவேரி மருத்துமனையிலும் அவர் விட்டு வைக்கவில்லை. அங்கேயும், தன் அறைக்கு, நொறுக்கு தீனிகளை கொண்டு வர வேண்டும் என, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்பு, மருத்துவமனை பாதுகாப்பு தாண்டி, அந்த, 'மாஜி'க்கு நொறுக்கு தீனி எடுத்து செல்லப்படுகிறதுகருணாநிதியை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை, கருணாநிதியின் சார்பில், உதவியாளர் சண்முகநாதனும், ஸ்டாலின் சார்பில், நவீன் உள்ளிட்ட இரு இளைஞர்களும், பதிவு செய்கின்றனர். அவர்களிடம், இரண்டு எழுத்து மாஜி, 'அழகிரியை சந்திக்க வரும் பிரமுகர்களின் பெயர்களை குறிப்பு எடுக்க வேண்டாம்' என, கூறியதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.09.2024