Saturday, August 4, 2018

தலையங்கம்

முதிர்வயதில் பராமரிப்பு



முதுமை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை உயிர்களுக்கும் துயர்தருவது. நெற்றியில் சுருக்கங்களும், உடலில் உபாதைகளும், நடையில் தளர்ச்சியும் ஏற்படும் நேரம்.

ஆகஸ்ட் 04 2018, 03:00

முதுமை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை உயிர்களுக்கும் துயர்தருவது. நெற்றியில் சுருக்கங்களும், உடலில் உபாதைகளும், நடையில் தளர்ச்சியும் ஏற்படும் நேரம். இந்தநேரத்தில் ஆலமரம் கீழே விழுந்துவிடாமல் இருக்க விழுதுகள் தாங்குவது போல, முதிர்வயதில் அவர்களை பெற்ற பிள்ளைகள் காப்பாற்றுவது கடமையாகும். அரசு பணிகளில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாந்திர பென்‌ஷன் வரும், தங்கள் காலில் தாங்களே நிற்கமுடியும். தனியார் நிறுவனங்களில் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு ஓய்வுபெறும் நேரத்தில் பணிக்கொடை, ‘பிராவிடண்ட் பண்டு’ என்று பணம் வரும். ஆனால் அன்றாடங் காய்ச்சிகளுக்கு தினமும் சாப்பிட செலவழிப்பதற்குத் தான், தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்று பணம் இருக்குமேதவிர, சேமிப்புக்கு பணம் இருக்காது. பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருப்பார்கள். ஆனால் படித்தவர்களோ, படிக்காதவர்களோ, பணம் படைத்தவர்களோ–பாமரர்களோ தங்களை பெற்ற பெற்றோரை முதிர்வயதில் கவனிக்காத சூழ்நிலை பல இடங்களில் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம், மன வேதனையுடன் பார்த்து வருகிற ஒரு பிரச்சினைக்கு, அசாம் மாநிலம் தீர்வுகாண முயன்று இருக்கிறது. முதிர்வயதில், தம் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் (வாடும்) பெரியவர்களுக்கு மன ஆறுதலைத் தருகிறவகையில், ‘பிரணாம்’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அசாம் மாநில அரசு ஊழியர்கள், தமது பெற்றோரிடம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான வழிமுறைகள் சட்டம் 2017 (சுருக்கமாக ‘பிரணாம்’ சட்டம்) வருகிற அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் அமலுக்கு வருகிறது. இப்போதைக்கு இந்தச் சட்டம், மாநில அரசு ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். நாளடைவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று, அசாம் அரசின், அதிகாரபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பெற்றோர், தம் பிள்ளைகளுக்கு எதிராகப் புகார் அளிக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. அதன் மீது, உரிய அலுவலரால் விசாரணை நடத்தப்படும். பிள்ளைகளின் மாத சம்பளத்தில், 10 முதல் 15 சதவீத சம்பளத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோர் அல்லது மாற்றுத் திறன் கொண்ட அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப் படும். இந்தியாவிலேயே முதன்முறையாக, அசாம் மாநிலத்தில்தான் இது அறிமுகம் ஆகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்கிற பெற்றோர், வேறு ஏதும் வருமானம் அல்லது ஓய்வூதியம் பெறுகிறவராக இருத்தல் கூடாது. அத்தகைய பெற்றோருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.


அசாம் மாநிலத்தின் இந்தச் சட்டம் மூலம், சுமார் 4 லட்சம் பெற்றோர் உடனடியாகப் பலன் பெறுவார்கள். சுமார் 3 கோடி மக்கள் வாழும் அசாம் மாநிலத்திலேயே இத்தனை பேர் பயன் பெறுவார்கள் என்றால், 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட, பட்டி தொட்டிகளில்கூட, அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில், மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தங்கள் பெற்றோரை கவனிக்கும்வகையில் இந்த சட்டம் கொண்டுவந்தால் பயன் பெறுகிறவர்கள் எத்தனை கோடி இருப்பார்கள்? ஆகவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், அமலாக்குவதில் இந்தியாவுக்கே வழி காட்டுகிற நிலையில் உள்ள தமிழகம், உடனடியாக ‘பிரணாம்’ சட்டத்தை தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற முடியுமா? என்று பரிசீலிக்க வேண்டும். பெற்றோர் இன்றி, அறிவேது? உயர்வேது? வாழ்வேது? வேர் இன்றி, தண்டு ஏது? கிளை ஏது? பழம்தான் ஏது..?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024