Sunday, August 5, 2018

அண்ணா பல்கலை விடைத்தாள் மோசடி: முறைகேட்டில் மிக மோசமான விஷயம் இதுதான்!

By DIN | Published on : 04th August 2018 05:49 PM |




சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேட்டை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த 2017 ஏப்ரல், மே மாதங்களில் பருவத் தேர்வில், 3.02 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார்: இந்நிலையில் மறுமதிப்பீடு தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வரத் தொடங்கின.

அதிக மதிப்பெண் பெற தகுதியிருந்தும், குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதி இல்லாத மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றிருப்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் இருந்து இப்புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், மறுமதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்களை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினர். அதில் அதிக மதிப்பெண்கள் பெற தகுதி இருந்தும் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதில் முறைகேடு நடந்தது ஏனோ தனோவென்று இல்லாமல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு மாணவன் தேர்வில் 10 மதிப்பெண்கள்தான் எடுத்துள்ளான். அதனை 99 மதிப்பெண்களாக எப்படி மாற்ற முடியும். ஒரே சுற்றில் மாற்ற முடியாதல்லவா?

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு விதிகளில், மறு மதிப்பீட்டில் ஒரு விடைத்தாளுக்கு 15 மதிப்பெண்களுக்கு மேல் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டால் இரண்டாவது முறையாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும். இரண்டாவது முறையிலும் 15 மதிப்பெண்களுக்குக் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டால், அது இரண்டிலும் எது அதிக மதிப்பெண்ணோ அதையே வழங்க வேண்டும் என்று உள்ளது.

அதன்படி, ஒரு 10 மதிப்பெண் எடுத்த மாணவனின் விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்குச் செல்லும் போது அதனை முதல் முறை மறுமதிப்பீடு செய்பவர் 50 மதிப்பெண் வழங்குவார். விதிப்படி இந்த விடைத்தாள் 2வது முறை மறு மதிப்பீட்டுக்குச் செல்ல வேண்டும். அதன்படி 2வது முறை மறுமதிப்பீடு செய்பவர் 99 மதிப்பெண்களை வழங்குவார். விதிப்படி அந்த விடைத்தாளுக்கு 99 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதால் யாராலும் அவ்வளவு எளிதில் முறைகேட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்று பல்கலையின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், அந்த விடைத்தாளை முதல் முறை திருத்தியவர் (10 மதிப்பெண் அளித்தவர்), விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார். எந்த குற்றமும் செய்யாத ஒருநபர், இந்த முறைகேட்டால் குற்றவாளியாக்கப்படுவார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களில் முதல்கட்டமாக 100 பேரின் விடைத்தாள்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் தகுதியற்ற விடைகளுக்கும் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் உறுதி செய்தனர்.

10 பேர் மீது வழக்கு: அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முறைகேடு நடைபெறும்போது அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பேராசிரியர் பி.விஜயகுமார், உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் உள்பட 10 பேர் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் ஒரு விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு, கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது தெரியவந்தது.

வீடுகள், அலுவலகங்களில் சோதனை: அதைத் தொடர்ந்து வழக்குத் தொடர்பான சோதனையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள உமாவின் அறை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீடு, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் உமா, வீட்டில் இருந்து சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.

லஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் விசாரணை: விடைத்தாள் மோசடி தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை தயார் செய்யும் வகையில் மறுமதிப்பீட்டின்போது லஞ்சம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்றதாக முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட 100 மாணவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களில் 50 பேரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து மறுமதிப்பீடு பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...