Saturday, August 11, 2018


இளைஞர்களிடையே மாற்றம்


By வை. இராமச்சந்திரன் | Published on : 10th August 2018 11:00 AM



இளைஞர்கள் என்றாலே நாள் முழுவதும் முகநூல், கட்செவி அஞ்சலில் மூழ்கிக் கிடப்பவர்கள், சினிமா நடிகர்கள் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்பவர்கள், திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்காவது இருக்குமானால், தயவுசெய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான இன்றைய இளைஞர்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட சிலரை ரோல் மாடலாக வைத்து, சமூகப் பணியில் அக்கறை செலுத்துகின்றனர். வாரத்தில் ஆறு நாள் சொந்தப் பணி. ஒரு நாள் சமூகப் பணி என கருதி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்து வருகின்றனர்.

அதோடு இப்பணி, தங்களோடு நின்றுவிடக் கூடாது எனக் கருதி, வளர்ந்து வரும் மாணவர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சமூகத்தில், இளைஞர்களிடையே மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

முன்பெல்லாம் ரத்த தானம் என்றாலே பலரும் ஓடி ஒளிவார்கள். ஆனால், தற்போது ரத்த தானம், உடல் தானம் போன்ற விழிப்புணர்வுகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. அதோடு இலவச கண் சிகிச்சை முகாம், ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவி புரிதல், டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் பணிகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, சமூக நலன் கொண்ட இளைஞர்களை திரட்டி, சமூகப் பணிகளை செய்கின்றனர். இப்பணி திறம்பட நடைபெறவும், தொடரவும் வெளியூரில் பணியில் இருக்கும் அந்தந்த ஊர் இளைஞர்கள் பொருளாதார உதவிகளை செய்து ஊக்கப்படுத்துகின்றனர்.
மேலும், குளங்களை தூர்வாருதல், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகளில் சுகாதாரம் பேணுதல், வழிபாட்டுத் தலங்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிகளின் தேவைக்கு ஏற்ப இளைஞர்கள் பணி செய்வதை சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் காண முடிகிறது. குறிப்பாக மரக்கன்று வைத்து பராமரிக்கும் பணி, குளத்துக் கரைகளில் பனங்கொட்டைகள் முளைக்க வைத்தல் போன்ற பணிகளை, ஏதோ கடமைக்கு என செய்யாமல், ஆத்மார்த்தமாக இன்றைய இளைஞர்கள் செய்கின்றனர்.

அதில் சிறு உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் பல்வேறு தொழில்கள் புரியும் சுமார் 20 இளைஞர்கள் இணைந்து, பசுமை இயக்கம்' எனும் பெயரில், கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மரக்கன்று வைத்து பராமரித்தலை முதன்மைப் பணியாக மேற்கொண்டாலும், நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் துப்புரவுப் பணி, நகர் பகுதியில் டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சலை தடுக்கும் வகையில் அனைத்து வார்டுகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரப் பணி உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இவர்களின் பணியிலேயே மிகவும் உச்சமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நீர் நிலைகளில் துப்புரவுப் பணி, தற்போது நடைபெறும் திருவிழாவையொட்டி பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வும், தவிர்க்கமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை, பயன்படுத்தியபின் வனத்தில் வீசாமல் இருக்க குப்பைத் தொட்டிகள் உருவாக்கியும் பணி செய்தது பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது.

இதே போன்று, அருகே உள்ள குறிப்பன் குளம் என்னும் கிராமத்தில், சாலையோரம், குளத்துக் கரையோரம் என ஊரைச் சுற்றிலும், அப்பகுதியைச் சேர்ந்த இளந்தளிர்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் 610 மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 35 வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், நாம் நேரில் சென்று பார்க்கும்போது, நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் வருகிறார்கள் என்றால், 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். கிரிக்கெட் மட்டைகளை தூக்கிச் செல்வதை தவிர்த்து இப்பணியில் அவர்கள் பங்கேற்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம் பணியைத் தொடங்கி, பிற்பகல் 2.30 மணி வரை பணியை தொடருகின்றனர்.
தற்போது ஆலங்குச்சிகளை சேகரித்து, நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வரும் இந்த அமைப்பினர், ஆலங்குளம் பகுதியில் நாற்கரச் சாலையால் மரங்கள் வெட்டப்படும் பகுதிகளில், பின்னாளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு ஏற்படும் செலவினங்களுக்கு வாரந்தோறும் யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அப்பகுதியில் பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடும் சிலர் இவர்களின் ஒரு நாள் பணிக்கான செலவை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதே போன்று, சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருவது, சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள் முழுமையாக அகற்றப்படும் பட்சத்தில், அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் எழுந்து, குழுவாக சேர்ந்து இப்பணிகளை மேற்கொண்டால், இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தமிழக சாலையோரம் முழுதும் பசுமையாகிவிடும்.

இக்குழுக்களை புதிதாக உருவாக்குதல் கடினம் எனக் கருதினால், ஒவ்வொரு ஊரிலும் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக் குழுக்கள் உள்ளன. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் நபர்கள் கிடைத்து விட்டால் போதும், இந்த பசுமைத் திட்டம் மிக எளிதாக அமைந்துவிடும்.
இந்த இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் ஒருங்கிணைக்க, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் வெற்றி காணலாம்.

No comments:

Post a Comment

EWS TODAY 18.11.2024