Sunday, September 23, 2018

"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..!" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2


விகடன் விமர்சனக்குழு

'சாமி 2' திரை விமர்சனம்



'ஓல்டு இஸ் கோல்டு' என்பார்கள். உண்மைதான். சில பழைய விஷயங்களை திரும்ப தூசி தட்டி மீட்டெடுக்கவே கூடாது. காரணம், சில சமயங்களில் அப்படி தூர்வாரி தூசிதட்டும்போது தங்கம் துருப்பிடித்த தகரமாகிவிடும் வாய்ப்புகளுண்டு - இந்த டயலாக்கிற்கும் இந்த பட விமர்சனத்திற்கும் சாமியின் மேலிருக்கும் ஸ்கொயர் சத்தியமாக தொடர்பில்லை. (தூர்... தூசு... துரு... - அதாவது நாங்க ஹரி படம் பார்த்துட்டு வந்துருக்கோம்.) 'சாமி 2' படம் எப்படி?



திருநெல்வேலியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெருமாள் பிச்சையை போட்டுத் தள்ளியதிலிருந்து தொடங்குகிறது சாமி ஸ்கொயரின் வேட்டை. ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான பாபி சிம்ஹா. அவர் பெயர் ராவண பிச்சை, அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தரின் பெயர் மகேந்திர பிச்சை, இரண்டாவது அண்ணனின் பெயர் தேவேந்திர பிச்சை. (படிக்கவே தலை சுத்துதா?... அப்போ இதை எல்லாம் ஹரி ஸ்டைல் ஃபாஸ்ட் பார்வேர்ட்ல பாத்த எங்களுக்கு எப்படி இருக்கும்?)

ஆடியன்ஸ் தவிர மீதி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பெருமாள்பிச்சை பற்றிய தங்கமலை ரகசியத்தை தரையிறங்கிய இரண்டே நாட்களில் தெரிந்துகொள்கிறார், ராவண பிச்சை. அதன்பின் அவருக்கும் விக்ரமுக்குமான மோதல் சூடுபிடிக்கும் என நினைத்தால் அங்குதான் வெச்சுருக்காங்க ட்விஸ்ட். சடசடவென 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகி, 2031-ல்(???) நடக்கிறது கதை. அங்கும் ஒரு விக்ரம் இருக்கிறார். ஒரு பாபி சிம்ஹா இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் யார்?. ஆறுச்சாமிக்கு என்னாச்சு என்பதை சொல்லும் கதைதான் சாமி ஸ்கொயர்.

ஆறுச்சாமியாக விக்ரம். 2031-ல் இல்லை, நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும்கூட மனிதர் அப்படியேதான் இருப்பார் போல. 'சாமி' முதல் பாகத்தில் பார்த்த அதே விக்ரம். எடையைத் தவிர எதுவும் மாறவில்லை. நடிப்பும் அதே எனர்ஜி மற்றும் துள்ளலோடு! ஆனால் விக்ரம் 'சாமி' முதல் பாகத்திற்குப் பின் நடிப்பில் வெவ்வேறு உயரங்களைத் தொட்டுவிட்டதால் அதே பழைய ஃபார்மெட் கதை அவருக்கேற்ற தீனியைத் தராதது போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறது.



'இவருக்குப் பதில் இனி இவர்' என்ற மெகாசீரியல் கான்செப்ட்டை சீக்வல் சினிமாக்களுக்கு கொண்டு வந்திருக்கிறார், ஹரி. ஆனால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது பொருத்தமில்லாத சாய்ஸாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு இயல்பாகவே அழகாக இருக்கும் அவரை மெனக்கெட்டு வெள்ளையாக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். மற்றொரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ் மற்ற ஹரி பட ஹீரோயின்களைப் போலவே வருகிறார்... விழுகிறார்... விரட்டுகிறார்... விரட்டப்படுகிறார்!

காமெடியில் இது சூரிக்கு அடுத்த லெவல் படம். முன்பெல்லாம் கோபம் வருவதுபோல காமெடி செய்தவர், இதில் ஒருபடி மேலேறி கடுப்பைக் கிளப்பும் காமெடிகள் செய்திருக்கிறார். எரிச்சலில் ஆடியன்ஸ் கொடுக்கும் கவுன்ட்டர்களே பலமடங்கு பெட்டர். 1432-வது முறையாக சொல்கிறோம் சூரி! உங்களது ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!

மற்ற அனைவரும் அடக்கிவாசிப்பதால் தனியாகத் தெரிகிறார், பாபி சிம்ஹா. அதே 'ஹே... ஏய்... ஏலேய்..' டைப் வில்லன்தான். ஆனாலும் ஆங்காங்கே அசால்ட் சேது தெரிவதால் ரசிக்க முடிகிறது. பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா - படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.



டி.எஸ்.பி இசை - நோ கமென்ட்ஸ். ஒரே கருவியை உருட்டி உருட்டி சவுண்ட் ரெக்கார்டிங் முடித்திருப்பார் போல. பழைய சாமியின் பி.ஜி.எம் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. ஆனால், அதில் ஒரு சதவீதம்கூட புது பேக்ரவுண்ட் ஸ்கோரில் இல்லை. பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். அதைவிடக் கொடுமை அவை இடம்பெற்றிருக்கும் இடங்கள். ப்ரியனும் அவருக்குப் பின் வெங்கடேஷ் அங்குராஜும் செய்திருக்கும் ஒளிப்பதிவுதான் படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது.

சூரியைப் போல ஹரியும் அடுத்த லெவல் பயணித்திருக்கிறார். முன்பெல்லாம் சீன்களில்தான் ஃபாஸ்ட் பார்வேர்டு மோடில் இருக்கும். இப்போதெல்லாம் கதையே 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகிறது. முதல் பாகத்தையும் இதையும் கனெக்ட் செய்யும் இடங்கள் எல்லாம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

சின்னச் சின்ன 'அட' ட்விஸ்ட்கள்தான் ஹரி ஸ்பெஷல். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான காட்சிகள் எதுவுமே இல்லை. முதல்பாதி முழுக்க இழுஇழுவென இழுத்தடிக்கும் திரைக்கதை. இரண்டாம் பாதியில்தான் ஹரியின் சாயல் தெரிகிறது. ஆனால் அதுவும் மிகப்பழைய சாயல். ஒரு கட்டத்தில் இது ஆக்‌ஷன் படமா, பேய்ப்படமா இல்லை டைம் ட்ராவல் படமா என்ற சந்தேகம் வேறு மூளைக்குள் வட்டமடிக்கிறது.

படம் முழுக்க யாராவது யாரையாவது அறைந்துகொண்டே இருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் பட்ஜெட்டைவிட எண்ணிக்கையில் தாண்டும் போல. போதாக்குறைக்கு விக்ரமும் 'இப்போது கையைத் தூக்கியடிப்பது உங்கள் விக்ரம்' என விடாமல் ஸ்க்ரோல் போடுமளவிற்கு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வசனங்கள். 'ஐ.ஏ.எஸ் மூளை.. ஐ.பி.எஸ் வேலை', நடந்தா ஒருவாரத்துல சாவ, ஓடுனா ஒரே நாள்ல சாவ' என அநியாயத்துக்கு அவுட்டேட்டட் வசனங்கள் காதைக் குடைகின்றன.



ஹரி படத்தில் லாஜிக் பார்ப்பது தெய்வக்குத்தம்தான். ஆனால் இந்தியாவின் ஜனாதிபதி நாட்டின் கடைக்கோடி குடிமகனோடு 'ஹாய் டூட், நைட் என்ன டின்னர்?' ரேஞ்சுக்கு சாட் செய்வதெல்லாம் ஹரி படத்தில் மட்டுமே சாத்தியம்! 'எங்ககிட்டயும் கிராஃபிக்ஸ் பண்ண ஆளிருக்கு' எனக் காட்டுவதற்காகவே சி.ஜியை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒய் பாஸ்?

ஓரிடத்தில் 'இன்னுமா ஜாதி எல்லாம் பார்க்குறாங்க?' எனக் கேட்கிறார் விக்ரம். அதற்கு சில காட்சிகள் முன்னதாக, 'உன்னை நான் இந்த அடையாளத்தோட வளர்த்தேன்' என தொட்டுக் காண்பிக்கிறார் டெல்லி கணேஷ். ஓப்பனிங் காட்சியில் பெண்களை எப்படியெல்லாம் நடத்தவேண்டும் என பாடமெடுக்கிறார் ஹரி. நல்லது! ஆனால் விக்ரம் பளீர் பளீரென கீர்த்தி சுரேஷை அறைவது மட்டும் எப்படி ஹீரோயிசத்தில் வரும்? சாமி முதல் பாகம் வந்தபோது ஹீரோயின்களுக்கு படங்களில்கூட பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவது பாகம் வரும் நேரத்தில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என பெண்கள் ஷீரோக்களாக படம் பண்ணி லாபம் பார்க்கும் வகையில் மார்க்கெட்டில் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் எத்தனை காலத்திற்கு பொண்ணுங்க இப்படி இருக்கணும், பசங்க அப்படி இருக்கணும் என்ற பாடம்?

'நான் பொறந்த ஊருல எதுவும் இன்னும் மாறல' என ஆதங்கமாக பாட்டும் வசனமும் வைப்பதெல்லாம் சரிதான். அந்த மாற்றத்தை ரசிகர்கள் உங்களிடமும் எதிர்பார்ப்பார்கள்தானே! கதையிலும் கருத்திலும் உங்களிடம் அந்த மாற்றம் எப்போது வரும்?

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024