Sunday, September 23, 2018

Technology

நுகர்வோருக்கு லாபம்!

By ஆசிரியர்  |   Published on : 21st September 2018 01:52 AM  

கடந்த 2017 மார்ச் மாதம் வோடஃபோன் குழுமத்தின் இந்தியப் பிரிவும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைவது என்று எடுத்த முடிவு, கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையின் ஒப்புதலைப் பெற்றது.
இடைப்பட்ட 16 மாதங்களில் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 கோடியிலிருந்தது, இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி 113 கோடியாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, இரண்டு இலக்க எண்ணிக்கையில் காணப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த இணைப்புக்குப் பிறகு நான்காகக் குறைந்திருக்கிறது. அதில், பி.எஸ்.என்.எல். அரசுத்துறை நிறுவனம். ஏனைய மூன்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள். 

வோடஃபோன் இந்தியாவும், ஐடியா செல்லுலாரும் இணைந்து வோடஃபோன் - ஐடியாவாக மாறியதைத் தொடர்ந்து, இது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியிருக்கிறது. உலகின் 2-ஆவது மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சந்தையான இந்தியாவின் மொத்த வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தப் புதிய நிறுவனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 
வோடஃபோன் - ஐடியாவில் மொத்த வாடிக்கையாளர் இணைப்புகள் 43 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பார்தி ஏர்டெல்' நிறுவனம் 35 கோடி இணைப்புகளுடனும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 25.1 கோடி இணைப்புகளுடனும் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து செயல்பட்டாலும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவது மட்டுமல்லாமல், மூன்று தனியார் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் கார்ப்பரேட் யுத்தத்திலிருந்து அது விலகியே இருக்கிறது. இனிவரும் காலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே வலிமையான தொலைத்தொடர்பு நிறுவனங்களாகச் செயல்படும் என்று கூறலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கியது முதல், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியது. 2016 வரையில் இலவசச் சேவை வழங்கி, அதைத் தொடர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் இணையதளம் உள்ளிட்ட சேவைகளை ஜியோ வழங்கத் தொடங்கியபோது, அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் செய்வதறியாது திகைத்தன. ரிலையன்ஸ் ஜியோ இப்போது 4 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஜியோ செல்லிடப் பேசிகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவரும் நிலையில், எல்லா நிறுவனங்களும் தங்களது உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய 4 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையின் மூலம் ஒன்றரை ஆண்டு காலத்தில் 21.5 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது. இதை எதிர்கொள்ள, ஏனைய நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றன. இணைப்புக்குப் பிறகு வோடஃபோன்-ஐடியா நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு, வாடிக்கையாளர் தொடர்பான சேவைகளுக்குத் தரும் ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்கி இருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான போராட்டம் மேலும் அதிகரிக்கும்போது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தாற்போல என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையை மொத்தமாகத் தனது கைப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ள முடியாமல் இருந்ததால்தான் வோடஃபோன் இந்தியாவும் ஐடியா செல்லுலாரும் தனித்தனியாக செயல்படாமல் இணையும் முடிவுக்கே வந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

சந்தைப் பொருளாதாரம் என்பது போட்டியின் அடிப்படையிலானது. அதிகரித்துவரும் தொலைத்தொடர்பு சேவைக்கான சந்தையில் மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியில் இறங்கியிருக்கும் நிலையில், கட்டணக் குறைப்பு யுத்தம் தொடங்கக்கூடும். அது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், இணையதள வேகமும், தரமான சேவையும், குறைந்த கட்டணத்தில் எந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் சேவைக்கு மாறிக்கொள்ளும் வசதியை தொலைத்தொடர்பு இடமாற்றம் (போர்ட்டபிலிடி) வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இனிமேல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அழைப்பு முறிவை (கால் டிராப்) அசட்டையாக ஒதுக்கிவிட முடியாது. 
வோடஃபோன் இந்தியாவும் ஐடியா செல்லுலாரும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த இணைப்பின் விளைவாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்திருக்கின்றன. இணைப்பின் பயனாக இந்த நிறுவனத்திடம் 3 ஜி, 4 ஜி தொழில்நுட்பக் கருவிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதும், அழைப்புக் கோபுரங்களின் (டவர்) எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வாடிக்கையாளர்களுக்கான சேவை மேம்பாட்டை உறுதிப்படுத்துவதுடன் புதிய பகுதிகளைத் தங்களது தொடர்புக்குள் கொண்டு வரவும் உதவும்.

3.5 லட்சம் அகண்ட அலைவரிசை (பிராட்பாண்ட்) இணைப்புகளையும், 17 லட்சம் சில்லறை விற்பனையாளர்களையும், 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அது எப்படி ரிலையன்ஸ் ஜியோவின் அதிகரித்துவரும் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தப் போகிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024