Sunday, September 23, 2018

ஆன்மீகம்

அழிவிலும் ஓர் ஆதாயம்!

By ஆசிரியர்  |   Published on : 20th September 2018 01:54 AM  

சபரிமலையில் மண்டல, மகர விளக்குப் புனித யாத்திரைக்கான காலம் தொடங்கியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் சரண கோஷங்களுடன் சபரிமலை சந்நிதானத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழும இருக்கிறார்கள். நவம்பர் முதல் ஜனவரி வரையிலுள்ள மூன்று மாத காலத்தில் சபரிமலைக்கு வரவிருக்கும் அந்த லட்சக்கணக்கான ஐயப்பன்மார்களை எதிர்கொள்ளும்படியான முன்னேற்பாடுகள் அங்கே இருக்கின்றனவா என்கிற ஐயப்பாடு பரவலாகவே காணப்படுகிறது.

கடந்த மாதம் கேரளத்தைத் தாக்கிய பிரளயம் போன்ற அடைமழையும், பெருவெள்ளமும் சபரிமலையைச் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. சபரிமலைக்குச் செல்வதற்கு நுழைவாயிலாக இருக்கும் பம்பையில் மழைவெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளைச் சொல்லி மாளாது. 
ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டிருந்த கழிப்பறைகள் இருந்த இடம் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. பம்பையையொட்டி அமைந்த 4,000 பேருக்கு மேல் ஓய்வெடுக்க வசதியாக இருந்த ராமமூர்த்தி மண்டபம் இப்போது இல்லை. மூன்று மாடிக் கட்டடமான அன்னதான மண்டபம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. மின் கம்பிகளும், மின்மாற்றிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. பம்பையில் இருந்த இரண்டு மாடிக் கட்டடமான அரசு மருத்துவமனை இடிபாடுகளுடன் காணப்படுகிறது. பம்பையிலும் சரி, திரிவேணியிலும் சரி, சுமார் 25 மீட்டர் உயரத்தில் மண் சரிந்து விழுந்து குவிந்து கிடக்கிறது. 

வடசேரிக் கரையிலிருந்து பம்பை வரையிலுள்ள சாலையில் மூன்று இடங்களில் சாலை அடித்துச் செல்லப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலையில் பல இடங்கள் மலைச்சரிவினால் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. மரங்கள் மட்டும்தான் இதுவரை முழுமையாக அகற்றப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு சோதனைக்குப் பிறகுதான் சாலைகளையும், கட்டடங்களையும் பயன்படுத்த முடியும் என்கிற நிலைதான் காணப்படுகிறது. 

இதுவரை பம்பை வரை அனுமதிக்கப்பட்ட போக்குவரத்தை இனிமேல் நிலக்கல்' என்கிற இடத்துடன் நிறுத்தி, அதை சபரிமலை புனித யாத்திரையின் தொடக்கமாக்க எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. பக்தர்களுக்குப் போதிய வசதிகளைச் செய்து கொடுக்க நிலக்கல்லில் தாராளமான இடவசதி உண்டு என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கில் வரும் வாகனங்களை நிறுத்தவும் இடமுண்டு. நிலக்கல்லிலிருந்து பம்பைக்குக் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து பேருந்துகளை இயக்குவது என்கிற ஆலோசனையும் வரவேற்புக்குரியது. 
தனியார் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுவதும், நிலக்கல் பகுதியை முற்றிலுமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கையகப்படுத்தி, அங்கே ஐயப்பன்மார்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் சாத்தியம். பெருவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களைக் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 
நிலக்கல்லில் தொடங்கி சபரிமலை சந்நிதானம் வரையில் கழிப்பறைகளை ஏற்படுத்துவது, குளியலறைகளை ஏற்படுத்துவது, ஆங்காங்கே குடிதண்ணீர் குழாய்களை நிறுவுவது என்பது மிகப்பெரிய பணி. கடந்த 70 ஆண்டுகளில் படிப்படியாக செய்யப்பட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் கட்டமைப்பு வசதிகளும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அவற்றையெல்லாம் மீண்டும் உருவாக்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத அசாதாரண சவால். போதாக்குறைக்கு மின் கம்பங்களை நிறுவி, மின்சார வசதியையும் ஏற்படுத்தியாக வேண்டும். இவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பம்பையில் பாலம் கட்டும் பணி தொடங்கியிருக்கிறது. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிப்பு ஏற்படாமல் பம்பையைக் கடக்கும் வசதியிலான பாலம் ஒன்றைக் கட்டுவதுதான் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் இலக்கு. இதற்கான நிதி ஆதாரத்தைக் கேரள அரசு வழங்கியிருக்கிறது. 
பம்பையில் மட்டுமே ரூ.2,000 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறுகிறது. பம்பையிலும் நிலக்கல்லிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாநில அரசு பணம் ஒதுக்கித் தருவதாக இதுவரை உறுதியளிக்கவில்லை. உடனடியாக இதுகுறித்த நல்ல முடிவை கேரள அரசு எடுத்தாக வேண்டும். 

கேரள அரசு மட்டுமல்லாமல், தங்கள் மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வதால், சபரிமலையின் மேம்பாட்டுக்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் சபரிமலையின் மறு சீரமைப்புக்கு உதவ வேண்டும். இதற்காக, தனியாக ஒரு நிதியை ஏற்படுத்தி, பக்தர்களிடமிருந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு நன்கொடை வசூலித்தாலும் தவறில்லை. 
சபரிமலைக்கென்று தனியாக ஒரு தேவசம் போர்டை ஏற்படுத்தி, அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பங்குபெறும் நிலைமை ஏற்பட்டால், சபரிமலையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், சபரிமலையிலிருந்து கிடைக்கும் வருவாயை சபரிமலைக்கு மட்டுமே செலவிடுவதும் உறுதிப்படுத்தப்படும். அந்தந்த மாநிலங்களிலிருந்து வரும் ஐயப்பன்மார்களின் நலமும் வசதிகளும் பேணப்படும்.
ஜாதி, மத, இனப் பாகுபாடு இல்லாமல் பக்தர்கள் வருகின்ற தேசியப் புனிதத் தலம் சபரிமலை'. இது முற்றிலுமாக அழிந்திருக்கும் நிலையில், தெளிவாகத் திட்டமிட்டு சபரிமலையின் கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அழிவிலும் கூட ஓர் ஆதாயம் இருக்கிறது என்பதைக் கேரள அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
 

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...