சொந்த ஊர் செல்ல அனுமதி அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Added : ஜூலை 17, 2020 00:02
சென்னை : சென்னையை விட்டு சொந்த ஊர் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் பி.சேசுபாலன் ராஜா தாக்கல் செய்த மனு:ஊரடங்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டும், இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை. பெரும்பாலோர், அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு, பெரும் நிதி நெருக்கடி உள்ளது.தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள், வேலை இழந்து நிற்கின்றனர். அவர்களால், உணவு, தங்குமிட செலவை எதிர்கொள்ள முடியவில்லை. தங்கும் வசதிசொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர்.
வாடகைக்கு இருப்பவர்கள், தற்போது வாடகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. முடியாதவர்கள், வீட்டை காலி செய்து விட்டு, சொந்த ஊர் செல்ல வேண்டும்.சென்னையை விட்டு, சொந்த ஊர் செல்ல விரும்புவர்களுக்கு, 'இ - பாஸ்' கிடைப்பது இல்லை. திருமணம், மரணம், மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே, பாஸ் வழங்கப்படுகிறது. அதனால், பாஸ் இல்லாமல், சொந்த ஊர் செல்ல முயற்சிக்கின்றனர். வழியிலே தடுக்கப்பட்டு, சென்னைக்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர்.உணவு, தங்கும் வசதி கிடைக்காமல் தான், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர்.
அவர்களை அதிகாரிகள் தடுப்பது, எந்த விதத்தில் நியாயம். உணவு, தங்குமிடம் அளித்தால், சென்னையை விட்டு செல்வதை தடுக்கும் உரிமை, அரசுக்கு உள்ளது. மக்கள் நலன்களை பாதுகாக்காமல், அவர்களை தடுப்பதற்கு, அரசுக்கு உரிமை இல்லை.சொந்த ஊரில் தனிமைப்படுத்தி இருந்து கொள்ள வசதிகள் இருப்பவர்களை, அரசு அனுமதிக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்கள், தாலுகாக்களில், தனிமைப்படுத்தி கொள்ள வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சொந்த ஊர் செல்வதால், சென்னையில் நெருக்கடி குறையும்.
தள்ளி வைப்பு
எனவே, சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு, உரிய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு நீதிபதி கள் தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment