Thursday, March 1, 2018

பாஸ்போர்ட்டை முடக்கலாமா? வழிமுறைகளை பிறப்பித்தது ஐகோர்ட்

Added : மார் 01, 2018 03:41 | 



லண்டன் செல்ல, டாக்டருக்குரிய பாஸ்போர்ட்டை வழங்கும்படி, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, முடநீக்கியல் மருத்துவர், சி.ரமேஷ்பாபு. இவருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ், வழக்குப் பதிவு செய்தது. பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

லண்டனில் இருக்கும் மகனை பார்க்க செல்வதால், பாஸ்போர்ட் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில், டாக்டர் ரமேஷ்பாபு மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், ஆர்.சி.பால்கனகராஜ், ''புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பாஸ்போர்ட்டை, நீதிமன்றம் முடக்கி வைக்க முடியாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:

ஒருவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை, பாஸ்போர்ட் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய, போலீசாருக்கு அதிகாரம் இருந்தாலும், அதை முடக்கும் அதிகாரம் இல்லை. பாஸ்போர்ட்டை நீதிமன்றம் முடக்கி வைக்க முடியாது. போலீசாருக்கும், கீழமை நீதிமன்றங்களுக்கும் உதவும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை பிறப்பிக்கிறேன்.

 பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த உடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில், காலதாமதமின்றி, போலீசார் ஒப்படைக்க வேண்டும்

 பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க, நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை. முடக்கம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, பாஸ்போர்ட் அதிகாரிக்கு தான், உத்தரவிட வேண்டும்

 பாஸ்போர்ட் யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்

 வழக்கின் தன்மை, சூழ்நிலையை பரிசீலித்து, எந்த முடிவையும், பாஸ்போர்ட் அதிகாரி எடுக்கலாம். அதற்கான விரிவான காரணங்களை கூற வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, எழும்பூர் நீதிமன்ற உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரிடம் உத்தரவாதம் பெற்று, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி, எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படுகிறது.

லண்டன் சென்று திரும்பிய பின், பாஸ்போர்ட்டை ஒப்படைத்த பின், அதை, பாஸ்போர்ட் அதிகாரி வசம் வைத்திருக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...