Thursday, March 1, 2018

ஜெயேந்திரர் வாழ்க்கை குறிப்பு

ஜெயேந்திரர் வாழ்க்கை குறிப்பு
 
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ அய்யர். 
 
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கோட்டூருக்கு அருகே உள்ள இருள்நீக்கி என்ற கிராமத்தில் 1935–ம் ஆண்டு ஜூலை மாதம் 18–ந்தேதி பிறந்தார்.

இவரது பெற்றோர் மகாதேவ அய்யர்–சரஸ்வதி அம்மாள். ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ அய்யர்.

ஜெயேந்திரரின் தந்தை தெற்கு ரெயில்வேயில் பணியாற்றினார். அவர் விழுப்புரத்தில் பணியாற்றியதால் ஜெயேந்திரரின் இளமைப்பருவமும் அங்கேயே கழிந்தது. இவருக்கு வீட்டிலேயே கல்விப்பயிற்சி தொடங்கி நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பில் உள்ள பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார்.

19 வயதில் நியமனம்

சுப்பிரமணியம், பள்ளியில் முதல் மாணவராக திகழ்ந்ததால் அவரது ஆசிரியர் அவர் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார். ‘ஊரும், உலகும் புகழும் பிள்ளையாக பின்னாளில் வருவான்’ என அப்போதே அவர் சுப்பிரமணியத்தின் பெற்றோரிடம் கூறுவார்.

சுப்பிரமணியம் கல்வியில் புலமை பெற்றதுடன், சிறுவயதிலேயே புரோகித தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இந்து சமய பெரியவர்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார்.

எனவே இவர் 1954–ம் ஆண்டு மார்ச் 22–ந்தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் 69–வது ஆச்சார்யராக தனது 19–வது வயதிலேயே நியமிக்கப்பட்டார்.

மடாதிபதி ஆனார்

உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் ‘மகா பெரியவாள்’, ‘ஸ்ரீ பரமாச்சாரியாள்’ என போற்றி வணக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த நியமனத்தை செய்ததுடன், அவருக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றும் பெயர்சூட்டி இளைய மடாதிபதியாக அறிமுகம் செய்தார்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தன்னை ‘இச்சாசக்தி’ என்றும், ஜெயேந்திரரை ‘கிரியாசக்தி’ என்றும் வர்ணித்திருக்கிறார்.

1987–ம் ஆண்டு ஆகஸ்டு 22–ந்தேதி ஜெயேந்திரர் திடீரென மேற்கொண்ட ஆன்மிக பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 17 நாட்களுக்கு பிறகு அவர் மடத்திற்கு திரும்பினார். பின்னர் அவர் ஜன கல்யாண் என்ற அமைப்பை தொடங்கினார்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவை தொடர்ந்து 1994–ம் ஆண்டில் ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின் முதன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார்.

கும்பாபிஷேக பணிகள்

இவர் பீடாதிபதியாக இருந்த காலத்தில் நாடு முழுவதும் யாத்திரை செய்து பல்வேறு ஆன்மிக பணிகளையும், அறப்பணிகளையும் செய்துள்ளார். பல திருக்கோவில்களில் கும்பாபிஷேகங்களையும் நடத்தி இருக்கிறார்.

குறிப்பாக 2000–ம் ஆண்டு வங்காளதேசம் சென்றிருந்த ஜெயேந்திரர் டாக்காவில் உள்ள தகேஸ்வரி கோவிலுக்கு நுழைவாயில் அமைத்துக் கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

1998–ம் ஆண்டு கைலாய மலை மற்றும் மானசரோவருக்கு சென்றதுடன், அங்கு ஆதிசங்கரருக்கு சிலை நிறுவி வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். ஆதிசங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற பெருமையையும் ஜெயேந்திரர் பெற்றார்.

அயோத்தி பிரச்சினை தீருவதற்காக பலமுறை முயற்சிகளை மேற்கொண்டார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

சங்கரராமன் கொலை வழக்கு

ஆன்மிகப்பணிகள் தவிர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஜெயேந்திரர். பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி ஏழை–எளிய மக்களுக்கு பல வகைகளிலும் சேவை செய்துள்ள ஜெயேந்திரர், சேரிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் ஆன்மிக உணர்வை பரப்பியது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 2004–ஆம் ஆண்டு நவம்பர் 11–ந்தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2005–ம் ஆண்டு ஜனவரி 10–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இருந்து, கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் 27–ந்தேதி ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...