Thursday, March 1, 2018

மரணம் அடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் உடல் அடக்கம் இன்று நடைபெறுகிறது.

மார்ச் 01, 2018, 05:45 AM

காஞ்சீபுரம்,

மரணம் அடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம்

2,520 வருடங்களுக்கு முன்பு ஆதி சங்கரரால் தொடங்கப்பட்டது காஞ்சி சங்கர மடம்.

காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள்.

82 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவ்வப்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற போதும் ஜெயேந்திரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஜெயேந்திரரின் அறையில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

பின்னர் ஜெயேந்திரர் இரவு 8 மணி அளவில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு கருவறையில் அம்மனுக்கு அவர் தீபாராதனை காட்டினார்.

அப்போது அங்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஜெயேந்திரர் ஆசி வழங்கினார். அதன் பின்னர் ஜெயேந்திரர், காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பினார்.

நேற்று அதிகாலை ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளுக்கு திடீரென உடல் சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை, மடத்தில் இருந்தவர்கள் உடனடியாக காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 8.10 மணி அளவில் ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்.

பின்னர் ஜெயேந்திரரின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து காஞ்சி சங்கரமடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் வழக்கமாக ஜெயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றி நிறைய விபூதி பூசப்பட்டு, குங்கும பொட்டு வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயேந்திரரின் உடலுக்கு துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திரர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் அவரது உடல் அருகில் நின்று விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை பக்தி பரவசத்துடன் பாடினார்கள்.

தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஜெயேந்திரரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


ஜெயேந்திரரின் மறைவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மேலும் காஞ்சி சங்கரமடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஞ்சீபுரம் ஏனாத்தூரில் இயங்கும் சங்கரா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஜெயேந்திரரின் உடல் இன்று (வியாழக்கிழமை) காஞ்சி சங்கர மடத்தில் உள்ள பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதியின் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜெயேந்திரரின் விருப்பப்படியே அந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஜெயேந்திரரின் உடல் சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பிரம்பு கூடையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

வேத முறைப்படி ‘பிருந்தாவன பிரவேச காரிய கிரமம்’ என்று அழைக்கப்படும் இறுதிச்சடங்கு காலை 8 மணிக்கு தொடங்கும் என்று காஞ்சி சங்கர மடம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024