Monday, April 2, 2018

மாணவர் மனம் நலமா? 14: தனிமை எனும் கொடுமையை அகற்ற…

Published : 27 Mar 2018 13:39 IST
 
டாக்டர் டி.வி. அசோகன்

THE HINDU TAMIL



சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறேன். நான் தங்கியிருக்கும் விடுதியில் வசதிகளுக்கு ஏதும் குறைவில்லை. நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். ஆனாலும் தனிமை என்னை வாட்டுகிறது. என்னைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. இதனால், படிப்பில் சரிவரக் கவனம் செலுத்த முடியவில்லை.


- ராம் குமார், சென்னை.

எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசத் தெரியாதவர்கள், அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் இல்லாதவர்கள் மட்டும்தான் தனிமையில் வாடுவார்கள் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது.

ஆனால், புறக் காரணங்களான நட்பு குழாம் அல்லது ஒருவரின் தொடர்பாற்றலோடு தொடர்புடையது அல்ல தனிமை. அது தனிமனித மனம் சார்ந்தது. “மனதின் உணர்வுகள்தாம் தனிமையைத் தீர்மானிக்கின்றன” என்கிறார் மனநல நிபுணர் லீராய் ஜென்கின்ஸ்.

ஃபேஸ்புக்கில் நூற்றுக்கணக்கான நண்பர்களை வைத்துக்கொண்டு, வகுப்பில் எல்லா மாணவர்களோடு பேசிக்கொண்டு இருப்பவர்கள், மனதளவில் திருப்தி இல்லாமல் தனிமைப்பட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

மறுபுறம் ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே உடையவர்கள்கூடத் தனிமையை உணராமல் திருப்தியாக இருக்க வாய்ப்புள்ளது. மன அமைதிக்காக மற்றவர்களுடைய தொடர்பிலிருந்து விலகியிருப்பவர்களும் உண்டு. அத்தகைய தனிமை விரும்பிகள் தனிமையில் வாட வாய்ப்பில்லை. இப்படித் தனிமை என்ற கருத்தைச் சுற்றிலும் பல அம்சங்கள் இருக்கின்றன.

அதேநேரம் தனிமைக்கும் வருத்தத்துக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் இருக்கின்றன. வெறுமை, பயம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தனிநபரின் மனநிலையைத் தனிமை சீர்குலைத்துவிடுவதுண்டு. தனிமையால் பாதிக்கப்படுகிறவர்கள் மிகுந்த மனவருத்தத்துக்கு எளிதில் ஆளாகிறார்கள்.

தனிமை ஏழு நிலைகளில் ஏற்படுகிறது:


1. புதிய சூழல்

“நான் இந்த இடத்துக்குப் புதியவன். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. இனி என்ன செய்யப்போகிறேன்” என்ற தொடர் எண்ணங்களால் தனிமை ஏற்படலாம்.


2. அந்நியமாதல்

ஆரம்ப காலத்தில் ஒரு புதிய சூழ்நிலையோடு ஒத்துப்போகாத தன்மை ஏற்படுவது எல்லோருக்கும் இயல்பானதே. சூழ்நிலைக்கேற்ப, நம்மை மாற்றிக்கொள்ளாதபோது, அந்தச் சூழ்நிலை நமக்கு அந்நியமாகிவிடுகிறது. இதனாலேயே பலர் தனிமையாக உணர்கிறார்கள்.


3. புரிந்துகொண்டவர் இல்லாத நிலை

“என்னைப் புரிந்துகொண்ட நண்பர்கள், யாரும் இங்கில்லை. பெற்றோரும் உடன் இல்லை. இங்கிருப்பவர்கள் எல்லாம், பெயருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்” என்று நினைப்பதுகூடத் தனிமையை ஏற்படுத்திவிடும்.


4. கடந்த கால நினைவுகள்

சிலர் தங்களின் சொந்த ஊர், வீடு ஆகியவற்றை நினைத்து ஏங்குவார்கள். அந்தச் சூழல் மாயமாகிப்போனது சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.


5. நண்பர்களின் போக்கில் மாறுதல்கள்

சிலர் எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்கப் பழகியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நண்பர்களைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகப் பிரிய நேரிடும்போது தனிமை தங்களைப் பிடித்தாட்டுவதாக நினைத்து வருந்துவார்கள்.


6. சூழ்நிலை மாறும்போது

மாறுபட்ட சூழ்நிலைகளில், நண்பர்களைச் சந்தேகிக்க நேரிடும்போது, வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் தனிமை உணரப்படுகிறது.

உடம்பில் வலி ஏற்படும்போது, மனித மூளையில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகிறதோ, அத்தனையும் தனிமையை உணரும்போதும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையில் இருந்தவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளைக் கொடுத்தபோது பலன் இருந்ததாகவும் தெரியவருகிறது.

தனிமைப்படுத்துவதில், கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கிறது. சமூக வலைத்தளங்களில் மிகுந்த நேரத்தைச் செலவழிப்பதால், நிஜ உலகத் தொடர்பில் இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

1980-களில் அமெரிக்காவில் 20 சதவீதத்தினர் தனிமையை அவ்வப்போது உணர்ந்ததாகத் தெரிவித்திருந்தனர். 2010-க்குப் பிறகு, 40 சதவீதத்தினர், தனிமையுற்றதாகச் சொல்லியதைப் பார்க்கும்போது, சில உண்மைகள் தெரியவருகின்றன. சமூக ஊடகங்களில் கூடுமானவரை குறைந்த நேரத்தைச் செலவிடுவது, தனிமை, வருத்தம் ஆகிய மனநிலைகளைத் தவிர்க்க உதவும்.


தனிமையால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள்

1. அமைதியாக உறங்க முடியாமல் தூக்கமின்மை ஏற்படுவதால் பகல் பொழுதில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

2. குழப்பமான மனநிலை குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஆகியவற்றுக்குள் அமிழ்த்திவிடுவதுண்டு.

3. பொது இடங்களில் இயல்பாக நடந்துகொள்ள முடியாமல் தடுமாறுவது.

4. காரணம் இல்லாமல் ஆத்திரம், வன்முறை உணர்வுகள், களவாடும் மனப்போக்கு உண்டாகலாம்.

5. நாள்பட்ட தனிமையில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, கொழுப்புச்சத்து மிகுந்திருத்தல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.

தனிமையைப் போக்குவது எப்படி?

1. புதியவர்களிடம் பேசுங்கள்

ரயில் பயணங்களில்,பொது இடங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களோடு பேசுங்கள். அரட்டை மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

2. பிடித்தவர்களோடு அடிக்கடி உரையாடுங்கள்

மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்முடைய மூளைத் திசுக்களில், ‘எண்டார்ஃபின்’ என்ற ரசாயனப் பொருள் மிகுந்து, ‘வென்ட்ரல் டெக்மெண்டல் பகுதி’ துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விடுதி அறையில் உங்களுடன் தங்கியிருப்பவர்களோடு தினமும்உரையாடுங்கள்.

3. புத்திசாலித்தனமாகச் சமூக ஊடகங்களைக் கையாளுதல்

முதலாவதாக, நீங்கள் பதிவேற்றும் தகவல்களுக்கு எத்தனை ‘லைக்ஸ்’ கிடைக்கிறது என்பதைக் கணக்கிடுவதைக் கைவிடுங்கள். ஆன்லைனிலும் அர்த்தமுள்ள நட்பு வட்டங்களை உருவாக்குங்கள். நல்ல செய்திகளைப் பதிவேற்றுங்கள். சிரித்த முகத்துடன் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை உங்களுடைய ‘புரொஃபைல் படமாக’ வைத்துக்கொள்ளுங்கள்.

4. பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது

பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதுபுதியவர்களை நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.

5. படைப்பாற்றலை மேம்படுத்துங்கள்

மேடைப் பேச்சாற்றல், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், கதை-கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும்போது உங்களுடைய ஆளுமைத் திறனும் மேம்பட்டு உங்களுக்குத் தனிமை எண்ணம்ஏற்படுவதைத் தவிர்க்கும்.

6. பகிர்ந்தால் பாரம் குறையும்

அர்த்தமுள்ள உறவுகள் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள். நம்மைப் புரிந்துகொண்டவர்களிடம், நம் தனிமையை வெளிப்படுத்தும்போது, அதற்குரிய தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

7. மனநல மருத்துவரை அணுகுதல் பிரச்சினைகள் எல்லை மீறும்போது மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். சூழ்நிலையால் உண்டாகும் தனிமையை நம் எண்ணத்தால் வெல்லலாம்.

‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024