Saturday, April 7, 2018

பெற்ற தாயின் உடலை 2 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்திருந்த பயங்கரம்; கணவரும் உடந்தை: போலீஸுக்கே புரியாத புதிர்

Published : 05 Apr 2018 19:08 IST



படம். | ட்விட்டர் ஏ.என்.ஐ.

கொல்கத்தாவில் இறந்த 84 வயது மூதாட்டியின் உடலை மகனும், கணவனும் சேர்ந்து குளிர்ப்பதனப் பெட்டியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்பதில் போலீஸாரும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

துப்பு கிடைத்ததன் அடிப்படையில் பெஹாலாவில் உள்ள வீட்டுக்கு போலீஸார் ரெய்டு மேற்கொள்ள அங்கு ஃப்ரிட்ஜில் மூதாட்டியின் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக 46 வயது மகன் ஷுபபிரதா மஜூம்தார் வயதான தந்தை கோபால் மஜூம்தார் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது, ஆனாலும் தந்தையும் மகனும் இறந்த உடலை ஏன் இப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதன் காரணத்தை அறிய போலீஸார் போராடி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கும் புரியாத புதிராக இது இருந்து வருகிறது.

மூதாட்டி பினா மஜூம்தார் 2015 ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாநந்தா மருத்துவமனையில் இறந்து போனார், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு கடுமையாகக் குறைய இறந்து போயுள்ளார். குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்து சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது சரியாக ஒருவருக்கும் விளங்கவில்லை. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களின் படி அக்கம்பக்கத்தினர் பினா மஜூம்தாருக்கு என்னவானது என்று கூறும்போது, பிணக்கிடங்கில் இருப்பதாகவும், “அமைதிச் சொர்க்கத்தில்’ அவர் இருப்பதாகவும் மகன் கூறிவந்திருக்கிறார்.

இந்நிலையில் போலீசார் கைப்பற்றிய பினா மஜூம்தார் உடல் கிழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. அது எதற்காக என்பது பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே தெரியும் என்கின்றனர் போலீசார். மேலும் வீட்டில் புரியாத வகையில், வடிவங்களில் சில கண்டெய்னர்களும் காணப்பட்டுள்ளன. இவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மகன் தோல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பாளர், இவர் தாயின் உடலிலிருந்து குடல்களை அப்புறப்படுத்தி பிறகு உடலை பதனப்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது குறித்த முதற்கட்ட விசாரணையில், தாய் பினா மஜும்தார் இந்திய உணவுக்கார்ப்பரேஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவருக்கு மாத பென்ஷனே ரூ.50,000 என்று கூறப்படுகிறது, தாய் இறந்த பிறகும் அவரது டெபிட் கார்டு மூலம் பென்ஷன் தொகையை மகன் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. தாய் உயிருடன் இருப்பதாக சான்றிதழ் அளித்திருப்பதும் புரியாத புதிராக இருந்து வருகிறது.

தந்தையும் மகனும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இதனால் இறந்தவரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த வழக்கை எப்படிக்கொண்டு செல்வது என்பதில் கொல்கத்தா போலீஸாருக்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024