Monday, April 23, 2018

மூலிகையே மருந்து 2: நோய்களைப் பதறவைக்கும் ‘குப்பை!

Published : 21 Apr 2018 10:20 IST


டாக்டர் வி. விக்ரம் குமார்





குப்பை என்றாலே யாருக்கும் பயன்படாது என்பதை மையமாக வைத்து, ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’, ‘நீ செல்லாத காசு. உன்னைக் குப்பையிலதான் போடணும்’ என்பன போன்ற சொலவடைகள் நமக்குப் பரிச்சயமானவை. அந்த வகையில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத ‘குப்பைமேனி’ எனும் தாவரம், பல்வேறு நோய்களை விரட்டும் வல்லமை படைத்தது.

மழைக் காலத்தில் சர்வ சாதாரணமாக குப்பைமேனியைப் பார்க்க முடியும். பல மருத்துவக் குணங்கள் கொண்ட குப்பைமேனி, அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது! இதைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு.

பெயர்க் காரணம்:

குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha indica. குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது. மேனியில் உண்டாகும் நோய்களை விரட்டுவதாலேயே, ‘மேனி’ என்ற பெயரும் உண்டு!

அது மட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான தென்கிழக்கு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் குப்பைமேனி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘தந்தமூலப்பிணிதீத் தந்திடுபுண்… குன்மம்… வாதம்… தினவு சுவாசம்…’ என நீளும் சித்த மருத்துவப் பாடல், பல்நோய்கள், மூலம், வாத நோய்கள், கப நோய்கள் போன்றவைற்றுக்கு குப்பைமேனி எப்படிப் பயன்படுகிறது என்பதைக் குறித்து விளக்குகிறது.

மருந்தாக:

Acalyphine, Clitorin, Acalyphamide, Aurantiamide, Succinimide போன்ற வேதிப்பொருட்கள் குப்பைமேனியின் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன.

குப்பைமேனி இலைச் சாறு, ஆடுதீண்டாப்பாளை இலைச்சாறு, நல்லெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயை, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர ‘சைனஸைடிஸ்’ பிரச்சினைகள் குறையும். Bacillus subtilis, Escherichia coli, Pseudomonas aeruginosa போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து, குப்பைமேனியின் உட்பொருட்கள் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் இலைச் சாறு 200 மி.லி.யோடு, 100 மி.லி. தேங்காய் எண்ணெய் சேர்த்து, நீர் வற்றும்வரை கொதிக்க வைத்து, கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு (Urticaria) தடவலாம். மூட்டு வலிகளுக்கும் துயரடக்கி செய்கையுடைய இந்த எண்ணெய்யைப் பூசி ஒத்தடம் கொடுக்கலாம்.


வீட்டு மருத்துவம்:

விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு, தொடை இடுக்குகளில் ஏற்படும் படர்தாமரை போன்றவற்றுக்கு குப்பைமேனி இலையை அரைத்துப் போட விரைவில் குணமாகும்.

கோழையை இளக்கி வெளியேற்றும் செய்கைகொண்ட குப்பைமேனி இலைகளைக் காயவைத்துப் பொடி செய்துகொண்டு, ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க இருமல் குணமாகும். இலையை அரைத்து நீரேற்றத்தால் ஏற்பட்ட தலைபாரத்துக்கு நெற்றியில் பற்றுப்போட, பாரம் இறங்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும் துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுக்கலாம்.

மலக்கட்டுப் பிரச்சினை தீர, குப்பைமேனி இலைச்சாறு அரை ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து கொடுக்க, மலத்தை நன்றாக இளக்குவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும்.

உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதானவர்களுக்குக் கால் மூட்டுக்களில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.

குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி சிறுநெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட, உடலில் தோன்றும் வாயுக்கோளாறுகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பத்து குப்பைமேனி இலைகள், இரண்டு சின்ன வெங்காயம், சிறிது வாழைப்பூ சேர்த்து அரைத்து, சிறுநெல்லி அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட, மூல நோயில் வடியும் குருதி நிற்கும்.

குப்பைமேனியை மருந்தாக மேற்சொன்ன அளவுகளில் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் வாந்தி, கழிச்சல் உண்டாகும் ஆபத்து உண்டு.

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024