Wednesday, April 11, 2018

காற்றில் கரையாத நினைவுகள் 7: கிணறு வெட்டிப் பார்!
Published : 10 Apr 2018 08:52 IST

வெ.இறையன்பு

THE HINDU TAMIL 



அப்போதெல்லாம் வீடு கட்டுவதற்கு முன்பே தொடங்கிவிடும் கிணறு வெட்டும் படலம். எங்கு நீர் இருக்கிறது என்பதை விஞ்ஞானப்படி அறிவதெற்கெல்லாம் அத்துபடியாகாத மக்கள். உள்ளூரில் ஒருவர் வாழைத்தண்டை கைகளில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்து ‘இங்குதான் கங்கை இருக்கிறது’ என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். அங்கு பூஜையோடு எல்லைகள் வரையறுக்கப்படும். கிணறு வெட்டுவதற்கென்றே பிரத்தியேகமாக தொழில்நுட்பம் தெரிந்த குடும்பங்கள் அன்றைக்கு இருந்தது.

இரண்டு பேர் கோவணத்துடன் தோண்ட ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று அடிகள் மண் தொடர்ந்து வந்ததும், இப்படியே இறுதிவரை இருக்கும் என்று எண்ணி உரிமையாளர் நெஞ்சம் மகிழ்வதுண்டு. அடுத்து வருவது மொரம்பு. அதற்குப் பின்னர் பாறை தட்டுப்படுமசின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு கிணறு தோண்ட வந்தவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் பித்தளைத் தூக்கில் கூழ் கொண்டுவருவார்கள். அப்போது பித்தளை மலிவு. மதியம் மரத்தடியில் அமர்ந்து அதைக் குடிப்பார்கள். நம்மிடம் வெங்காயம், பச்சைமிளகாய் மட்டும் இரவல் பெற்று, கூழைக் குடித்துவிட்டு கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் இறங்குவார்கள்.

அவர்கள் பிடிப்பது கயிறு அல்ல; உயிரு என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

கடப்பாரையை வைத்து சம்மட்டியால் பாறையில் துளைபோட வேண்டும். பிறகு வெடிமருந்தை அதில் திணித்து நூலைப் பொருத்தி எடுத்துச் செல்ல வேண்டும். நான்கைந்து துளைகளை இவ்வாறு நிரப்பிய பிறகு, அவர்கள் மேலே வந்து கிணற்றை மூங் கில் படலால் மூடுவார்கள். வெடிக்கிற கற்கள் வெளியே தெறிக்காமல் இருக்க படலின் மீது கற்களை வைப்பார்கள். மறுமுனையில் தீ வைத்துவிட்டு ‘வேட்டுவேட்டு’ என்று கத்தியவாறே ஓடுவர்.

அப்பக்கம் வருகிறவர்களெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு வேட்டு வெடிக்கும் வரை காத்திருப்பார்கள். ஒவ்வொரு வேட்டாக வெடிக்கும். நான்கு வேட்டுகளும் வெடித்த பிறகு, மக்கள் நகர பச்சைக்கொடி காட்டப் படும்.

புகை அடங்க பத்து நிமிடம் ஆகும். அதற்குப் பிறகு இறங்கி இடிபாடுகளின் உதவியோடு உளியைக்கொண்டு அனைத்தையும் சமமாக்குவார்கள். மாலையில் அயர்ந்து மேலே வந்து வேட்டிக்கு மாறி, முகத்தைக் கழுவிக்கொண்டு கிளம்புவார்கள். அவர்கள் வாழ்க்கை சோகச் சித்திரமாகவே இருக்கும்.

கடப்பாரைகளை சாணை பிடிக்க கொதிக்கும் கரித்துண்டுகளின் நடுவே காற்றை அனுப்பி சிவக்கக் காய்ச்சி அவற்றை சம்மட்டியால் அடித்து கூர்மைப்படுத்துவார்கள். பல நேரங்களில் காற்றடிக்கப் பயன்படுகின்ற (துருத்திப் பெட்டி) கருவியை யார் இயக்குவது என்று எனக் கும் அண்ணனுக்கும் ஒரு போட்டியே நடக்கும்.

கொய்யா மரங்களுக்கு வழிந்தோடி...

திடீரென பெய்கிற மழையில் கிணறு நனைந்ததும் வெட்டு கிற வேள்வி நிறுத்தப்படும். எட்டு மாதங்கள் கிணறு பெரிய தொட்டியாகப் பயன்படும். வாளி கிணற்றில் அறுந்து விழுந்தால் அதை எடுக்க பாதாளசோளி (பாதாளக் கரண்டி) என்ற கருவி உண்டு.

சிக்கனமாக நீரைச் செலவழிக்கக் கற்றுக்கொண்டது அப்பருவத்தில்தான். செடிகள் வாடாமல் இருக்க ஆளுக்கொரு செடியில் பல் துலக்குவோம். குளிக்கிற நீரெல்லாம் கொய்யா மரங்களுக்கு வழிந்தோட வாய்க்கால். எப்படி எச்சரிக்கையாக இருந்தாலும் நிலத்தடி நீர் இறங்கும்போது கிணறு வறண்டுவிடும். வெட்டும் படலம் தொடரும்.

அடியூற்று வராதா என்கிற ஆர்வமே காரணம். நான்கு மாதங்களுக்கு வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். பரணில் இருந்த கொப்பரைகளும், குடங்களும் கீழே இறங்கும். மரங்களின் அருகில் துணிகள் துவைக்கப்படும்.

கிணறு வெட்ட குறைந்த ஒப்பந்தம் பேசி குடும்பத்தோடு தினமும் வந்தார் ஒருவர். அவர் மகனுக்கு என் வயது. அவரது மகனைப் பார்க்கும்போது ‘இப்படி இருந்திருந்தால் படித்துத் தொலைக்கவும், பரீட்சை எழுதவும் தேவையில்லையே’ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றும். முன்பணம் வாங்கிவிட்டு பாதியிலேயே கம்பி நீட்டிவிட்டார் அவர்.

இன்னொரு ஜோடி. அதில் ஒருவர் 60 வயதான முதியவர். அவ்வளவு சுறுசுறுப்பாக சம்மட்டி அடிப்பார். மற்றவர் அவர் மருமகன். தேக்குப்போன்ற தேகம்.

ஆனால் மந்தம். பெரியவர் நம் வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டார். அவ்வளவு சாங்கியம். திடீரென கனவில் வெள்ளைப் புடவை உடுத்தி அழகான தேவதை கிணற்றில் படுத்துக்கொண்டதாகவும், அது கங்கைதான் என்றும் அப்பாவுக்கு நம்பிக்கையூட்ட அவரும் அப்பாவியாக கேட்பார்.

கடைசிவரை அடியூற்று வராமலேயே போய்விட்டது. எந்தக் கிணறைப் பார்த்தாலும் எட்டிப் பார்க்கும் பழக்கம் அப்போது ஏற்பட்டது.

கிணறு தோண்டுபவர்...

பக்கத்து மனையினர் கிணறு தோண்டியபோது, முத்தியால் எனக்கு அறிமுகமானார். எட்டாம் வகுப்பு படித்தவர். எங்கள் வீட்டு செய்தித்தாளை வாங்கி ஆர்வமுடன் படிப்பார்.

ஆறு மாதங்கள் கடுமையான பணி. மதியம் திரைப்படங்களின் கதைகளையெல்லாம் சொல்வார். ‘கடவுள் ஏன் கல்லானான்’ என்ற பாட்டுக்கு படத்தில் வருவதுபோலவே, மண்வெட்டியைப் பிடித்துக்கொண்டு நடித்துக் காண்பிப்பார்.

அந்தப் பாட்டு அவருக்கே அதிகம் பொருந்தும் என்பது அப்போது எங்களுக்கும் தெரியவில்லை, எங்கள் வேப்ப மரத்தடியில்தான் சாப்பாடு. வேட்டு விடும்போது கூடுதலாக கற்கள் சிதற ‘தோட்டா’ என்கிற வெடிமருந் தைப் பயன்படுத்துவார்.

ஒரு முறை மூங்கில் படலை உடைத்துக்கொண்டு சீறிய சிறுகல் அவர் மண்டையில் விழுந்தது. சின்னக் காயம்தான். எங்கள் வீட்டில் இருந்த மருந் தைப் போட்டோம்.

அடுத்த நாளே முத்தியால் பணிக்கு வந்துவிட்டார். துளியும் நிச்சயமற்ற வாழ்க்கையில், பூமி வறண்டுபோகும் போது மட்டுமே வேலை கிடைக்கும் சூழலில் கயிற்றின் மேல் நடக்கும் அபாயத்துடன் அவர்கள் வாழ்க்கை அன்றி ருந்தது.

ஒரு நாள் பாறையைத் துளையிடும் போது கல் சிதறி கண்களில் விழுந்தது. மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லை. பார்வை குறையத் தொடங்கியது.

அதற்குப் பிறகும் முத்தியால் பணி யில் தொடர்ந்தார். எங்களிடம் ‘வயிறு இருக்கிறதே, என்ன செய்ய!’ என்று கேட்டார். அதுதான் அவருடைய அதிகபட்ச புலம்பல். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவர்களாகவே ஏழைகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள்.

அந்த நாற்காலியில்...

காஞ்சிபுரத்தில் நான் பணியாற்றும்போது முகாம் அலுவலகத்துக்கு ஒருவர் வந்திருப்பதாகவும், சின்ன வயதில் இருந்தே என்னைத் தெரியுமென பார்க்க வற்புறுத்துவதாகவும் உதவியாளர் சொல்ல, அனுமதித்தேன். சற்று முதுமையடைந்த எளிய மனிதர். ‘‘அன்பு, என்னைத் தெரியலையா? நான்தான் முத்தியால்’’ என்றார். எங்கோ பேப்பரில் பார்த்துவிட்டு தேடி வந்திருக்கிறார். தேநீர் கொடுத்தேன். இரண்டு மூன்று சால்வைகளை அளித்தேன். ‘‘என்ன வேண்டும்?’’ என்றேன். ‘‘உன்னை இந்த நாற்காலியில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அவ்வளவுதான்!’’ என்றார். வணங்கியபடியே சென்றுவிட்டார்.

இன்றிருக்கிற ஆழ்குழாய் கிணறு யுகத்தில் கிணறு வெட்டும் அனுபவங் கள் பலருக்கு இருக்க வாய்ப்பு இல்லை. முகம் தெரியாத மனிதர்கள் மூன்றே நாட்களில் முடித்துவிடுகிறார்கள். அன்று கிணற்றடியில் துணி துவைக்கப்படும், பாத்திரம் அலம்பப் படும். படக் கதைகள் பரிமாறப்படும்.

அண்மையில் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக தர்மபுரி சென்றிருந்தேன். பட்டமளிப்பு உடையில் ஒரு மாணவர் என் னைப் பார்க்க தீவிரம் காட்டினார்.

அருகில் அழைத்து ‘‘என்ன தம்பி?’’ என்றேன்.

‘‘நான் முத்தியால் தாத்தா பேரன். எப்போதும் உங்களைப் பற்றி தாத்தா பேசுவார். நாங்கள் நம்ப வேண்டும் என்று தான் காஞ்சிபுரம் வந்தார். நீங்கள் கொடுத்த சால்வையைத்தான் எப்போ தும் போர்த்திக்கொண்டிருப்பார்’’ என் றார்.

‘‘தாத்தா எப்படி இருக்கிறார்?’’

‘‘சென்ற ஆண்டு காலமாகிவிட் டார்!’’என்றார்.

எனக்கு பேரனை நினைத்து பெருமைப்படுவதா, தாத்தாவை எண்ணி வருத்தப்படுவதா என்ற குழப்பம் வெகு நேரம் நீடித்தது.

- நினைவுகள் படரும்...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024