Sunday, April 1, 2018

ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன 9 எலுமிச்சைப் பழங்கள்' - விழுப்புரம் அருகே விநோதம்..!

ஜெ.முருகன்

தே.சிலம்பரசன்

பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சைப் பழங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன விநோத சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.




விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமம் இரட்டைக் குன்றில் அமைந்திருக்கிறது ரத்தினவேல் முருகன் கோயில். இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடம் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து பூஜை நடக்கும். அந்தப் பத்து நாட்களும் கருவறையில் இருக்கும் வேலில் எலுமிச்சைப் பழங்கள் குத்தப்படும். அப்படி குத்தப்பட்ட எலுமிச்சைப் பழங்களை மிகவும் பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள் கோயில் நிர்வாகிகள். பத்து நாட்கள் கோயில் பூஜை முடிந்ததும் அந்த எலுமிச்சைப் பழங்கள் பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படுவது வழக்கம்.



இந்த எலுமிச்சைப் பழங்களை வீட்டில் வைத்திருந்து நில சம்பிரதாயங்களைச் செய்தால் குழந்தைப்பேறு, சொத்துக்கள், தொழில்களில் முன்னேற்றங்கள் கிடைப்பதோடு கிடைக்கும் கடன் தொல்லைகளும் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. அதனால் இந்தப் பழங்கள் ஆயிரக்கணக்கில் ஏலம் எடுக்கப்படும். சென்ற வருடம் நடந்த ஏலத்தில் 9 பழங்களையும் 68 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர் பொதுமக்கள். யார் வேண்டுமானாலும் இந்தப் பழத்தைப் பெற்று பயனடையலாம். ஆனால் ஊர் நிர்வாகிகள் விடும் இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

அதன்படி கடந்த 21.03.2018 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த வருடத்தின் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. வழக்கம் போல ஊர் நாட்டமையான பாலகிருஷ்ணன் என்பவர் ஆணி செருப்பின் மீது ஏறி நின்றுகொண்டு முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடக்கி வைத்தார். அப்போது முதல் நாள் பழம் 35 ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாம் நாள் பழம் 8,500 ரூபாய்க்கும், மூன்று மற்றும் நான்காம் நாள் பழங்கள் தலா 8,100 ரூபாய்க்கும், ஐந்தாம் நாள் பழம் 8,500 ரூபாய்க்கும், ஆறாம் நாள் பழம் 8,100 ரூபாய்க்கும், ஏழாம் நாள் பழம் 9,500 ரூபாய்க்கும், எட்டாம் நாள் பழம் 8,100 ரூபாய்க்கும், ஒன்பதாவது நாள் பழம் 8,500 ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 900 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலம் எடுக்கக் கூடிய மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றால் இந்த நிகழ்வைக் காணவும் உள்ளூர் வெளியூர் மக்கள் குவிந்திருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024