காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களும் போராட்டத்தில் குதிப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
'காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய பா.ஜ., கூட்டணி அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சியினர் போராட்டம் ஒரு புறம் இருக்க,
தமிழ்நாடு அனைத்துவணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முழு கடையடைப்பு போராட்டமும் நாளை நடத்தப்பட உள்ளது.
'தி.மு.க., வரும் 5ம் தேதி நடத்தும் முழு அடைப்பு அன்றே வணிகர் சங்கமும் கடையடைப்பு நடத்த வேண்டும்' என்ற தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை வணிகர் சங்கங்கள் ஏற்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் நாளை 21 லட்சம் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அடைக்கப்படும்.
அதேபோல தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்களும் நாளைய கடையடைப்பில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரிய ஓட்டல்கள் மூடியிருக்கும். மேலும் தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் சார்பில் சாலை மறியல், ரயில் மறியல், விமான நிலையங்கள் முற்றுகை மற்றும் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
இப்படி பல்வேறு தரப்பினரும் நாளை நடத்தும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பால் முகவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
அரசியல் கட்சிகள் தனி ஆவர்த்தனம்:
* 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என சங்கத் தலைவர், நாசர் அறிவித்துள்ளார்
* 'ஏப்., 4ல் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார்
* 'ஏப்., 4ல் கையெழுத்து இயக்கமும், ஏப்., 6ல் திருச்சியில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும்' என த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்
* பா.ம.க., சார்பில் 11ம் தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது
* ஏப்., 6ல் தே.மு.தி.க., போராட்டம் நடத்துகிறது
* தி.மு.க., கூட்டணி கட்சிகள் 5ம் தேதி 'பந்த்' நடத்துகின்றன.
இப்படி தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் தனி ஆவர்த்தனம் செய்வதால் காவிரி பிரச்னையில் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு உருவாகவில்லை. இது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
''தமிழக விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவளிக்க வேண்டும்''
-விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்
- நமது நிருபர் -
No comments:
Post a Comment