Wednesday, April 4, 2018

அரசுப் பள்ளி தரம் குறைவு, உண்மையா? -தி இந்து தமிழ் நாளிதழ்


மாணவர்களை உலுக்கியெடுக்கும் நீட் தேர்வு, ஊழல் விவகாரத்தில் பிடிபடும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரால் தண்டிக்கப்படும் மாணவர்கள், மாணவர்களால் தாக்கப்படும் ஆசிரியர்கள், சி.பி.எஸ்.இ. கேள்வித் தாள் கசிவு இப்படிக் கல்வி தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளில் பெரும்பாலானவை பதற்றத்தையே அளிக்கின்றன.

எங்க இருந்தாலும் படிச்சிடும்!

அதிலும் கல்வி ஆண்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட இந்நேரத்தில் அடுத்து எங்கு, என்ன படிப்பது என்ற தலைப்பு விவாதத்துக்கு வரும். பிளஸ் டூவரை தனியார் பள்ளியில் கணித-கணினி அறிவியல் பிரிவில் மிகச் சிறப்பாகப் படித்த மாணவர் ஒருவர் தன்னுடைய மேற்படிப்பை கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை ஐ.ஐ.டி. போன்ற அரசு கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளக் கனவு காணக்கூடும். ஆனால், இடைநிலைவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவர் ஒருவர் மேல்நிலைப் படிப்பைத் தமிழக அரசுப் பள்ளி ஒன்றில் படிக்க விரும்புவாரா?

அரசுப் பள்ளியில் அதிலும் மாநில அரசுப் பள்ளியில் படிப்பதென்பது கவுரவக் குறைச்சல், அப்படியே அதில் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் சோபிக்க முடியாது என்ற பயம்தான் உடனடியாக மனதில் உதிக்கும். “கடன் வாங்கியாவது என் பசங்களை தனியார் பள்ளியில படிக்க வெச்சிடுவேன். பிற்காலத்துல ‘எனக்காக நீ என்ன செஞ்ச’னு அவங்க கேட்டுட கூடாதுல்ல!” என்று ஏழ்மையில் இருக்கும் பெற்றோர் சொல்லக் கேட்டிருப்போம். அதையும் மீறி வேறு வழியின்றி மகனையோ மகளையோ ஏதோ அரசுப் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டால், “படிக்கிற புள்ள எங்க இருந்தாலும் படிச்சிடும்” என்று ஊர் உலகத்துக்கும் தனக்கும் சமாதானம் சொல்லிக்கொள்வார்கள்.

இப்படி அரசுப் பள்ளிகள் குறித்து நம் மனதில் படிந்து கிடக்கும் அவநம்பிக்கையைப் போக்கும் முயற்சியில், ‘அனைவருக்கும் உகந்த பள்ளி அரசுப் பள்ளியே!’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது ‘சமகல்வி இயக்கம்’.

உடனடி தாக்குதல்

சென்னை, வேலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மாவட்டத்துக்கு இரண்டு அரசுப் பள்ளிகள் வீதம் 18 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு இது. ஒப்பீட்டுக்காக 17 தனியார் பள்ளிகளின் நிலையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. கற்றலுக்கான வாய்ப்புகளின் தரம், அரசு அதற்காக எடுக்கும் முயற்சிகள் குறித்து 25 தலைப்புகளின் கீழ் இதில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை, மாணவர்களுக்கான கல்வி கற்கும் சூழல், உள்கட்டமைப்பு வசதிகள் என்ற அடிப்படையில் இந்தப் பகுப்பாய்வை அமைந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் குறைபாடு மற்றும் பொறுப்பின்மை, சுகாதாரச் சீர்கேடு ஆகியவைதான் அரசுப் பள்ளிகளின் தரத்தை உடனடியாகக் கேள்விக்குள்ளாக்குபவை. இதற்கு மாறாக அனைத்துப் பாடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் கல்வியியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களே பணியாற்றுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ், அறிவியல், கணிதம் பாடங்களில் 100 சதவீதம் தகுதிபெற்ற நிரந்தர ஆசிரியர்கள் அரசு ஊதியம் பெறுகிறார்கள்.

அவர்களுக்கு ஆசிரியர்கள் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாணவர்களைக் கையாளும் திறன், குழந்தை உரிமைகளும் உளவியலும், தேர்வுக்குத் தயாராகும் உத்திகள் போன்ற பன்முகத்திறன்களை வளர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், தனியார் பள்ளிகளிலோ 48 சதவீத ஆசிரியர்கள் ரூ. 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே மாதச் சம்பளம் பெறுகின்றனர், பணிப் பாதுகாப்பு இன்றி இருக்கின்றனர். இது நிச்சயமாகக் கல்வி கற்பித்தலில் அவர்களுடைய ஈடுபாட்டையும் பங்களிப்பையும் பாதிக்கிறது.

உடனடி தேவை

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரலாறு, வணிகவியல், பொருளியல், சமூகவியல் பிரிவுகளில் போதிய எண்ணிக்கை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அதிலும் 100 சதவீதப் பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், ஆங்கில மொழிப் பாடம், கணினிப் பாடங்களைக் கற்பிக்க மிகக் குறைவாக அல்லது பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. இதர பாட ஆசிரியர்கள்தாம் அந்தப் பணிகளையும் கூடுதலாக ஏற்றுக்கொண்டு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக 50 சதவீதம் பள்ளிகளில் அறிவியல் பாடத்துக்கு 5 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றிவருவது கவலை அளிக்கிறது. நீட் கட்டாயமாக்கப்பட்ட சூழலில் மருத்துவம், அறிவியல் சார்ந்த படிப்புகளை படிப்பதில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது இதில் தெரியவருகிறது.

இதில் ஒருபுறம் ஆசிரியர் பற்றாக்குறை வெளிப்பட்டாலும் கூடுதலாக பணிச் சுமையைச் சுமக்கும் நிலை சில ஆசிரியர்களுக்கு இருப்பதும் வெளிப்படுகிறது. அதிலும் ஆங்கிலமும் கணினி அறிவியலும் பன்னாட்டு பணிச் சந்தைக்குள் அடியெடுத்துவைக்க அத்தியாவசியமாகிவிட்ட காலகட்டத்தில் அப்பாடங்களுக்கு உடனடியாகத் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அனேகருக்குத் திறக்கும் கதவு

அரசுப் பள்ளிகளின் அடுத்த சிக்கல் மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரம். 1:30 என்பதே தமிழ்நாடு அரசுக் கல்வி விதிமுறைகளின் அடிப்படையில் பொதுவான மாணவர்- ஆசிரியர் விகிதம். ஆனால், பெருவாரியான மேல்நிலை வகுப்புகளில் கிட்டத்தட்ட 60 மாணவர்கள் இருப்பது தெரியவருகிறது. இதனால் மாணவர்களிடம் போதுமான கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு குறையும், கற்பிக்கும் தரத்தில் எதிர்மறையான தாக்கம் உண்டாகும்.

ஆனாலும், இதன் மூலம் அரசுப் பள்ளிகள் தொடர்பான இன்னொரு கட்டுக்கதை மறுக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துவருவதாக ஒரு பொய் பரப்பப்பட்டுவருகிறது. ஆனால், 67 சதவீதம் அரசுப் பள்ளிகளில் 500-2000 வரையிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பயில்கின்றனர்.

குறிப்பாகப் பட்டியலின மாணவர்கள் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் சந்தேகத்துக்கு இடமின்றி அரசுப் பள்ளிகளில்தான் படித்துவருகின்றனர். அதேபோல 94 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெறும்போது 60 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்கள் எந்த ஊக்கத்தொகையும் பெறவில்லை என்பதும் தெரியவருகிறது.

நுண்ணுணர்வும் சமூக அக்கறையும்

வகுப்பறை, ஆய்வகம், நூலகம், விளையாட்டுத் திடல், கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை அவை இருப்பதாகப் போகிறபோக்கில் சொல்வதில் அர்த்தம் இல்லை. பராமரிப்பு, பயன்பாட்டு நிலை, செயலாக்கத் திறன் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம்தான் அவற்றின் தரத்தை நிர்ணயிக்க முடியும். அந்த வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் சராசரிக்கும் மேலாகச் செயல்படுவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

அதேநேரத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகளின் எண்ணிக்கை கட்டாயமாக உயர்த்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 83 சதவீத அரசுப் பள்ளிகளில் தரைத்தளத்தில் சாய்தள வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இத்தகைய நுண்ணுணர்வும் சமூக அக்கறையும் பெருவாரியான தனியார் பள்ளிகளில் இல்லை.

‘மாணவர் பருவத்தில் அரசியல் தேவை இல்லை’ என்ற அறிவுரைக்குள்ளேயே இளைஞர்களை மழுங்கடித்து இயந்திரங்களாக மாற்றும் அரசியல் ஒளிந்துகொண்டிருக்கிறது. தங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தித் தங்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்குச் சட்டப்பூர்வமாக உள்ளது. அதைச் சாத்தியமாக்க மாணவ அமைப்புகள் அவசியம். இதற்கான வாய்ப்பும் 56 சதவீத அரசுப் பள்ளிகளில் மட்டுமே இருப்பது தெரியவருகிறது.

‘என்னதான் முழங்கினாலும் படிப்பது மதிப்பெண்ணுக்குத்தானே’ என்பவர்களுக்கு, அரசுப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருப்பது இதில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வெறும் 18 அரசுப் பள்ளிகளிலும் 17 தனியார் பள்ளிகளிலும் மட்டுமே நடத்தப்பட்ட ஆய்வு இது என்றாலும் அரசுப் பள்ளிகள் மீது அபாண்டமாகவும் கண்மூடித்தனமாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இது ஒரு புறம் களைந்திருக்கிறது. அதேவேளையில் அரசு கல்வி அதிகாரிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் அனைவரின் பங்கேற்போடு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கல்வியின் தரத்தை நெறிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

செய்தி:தி இந்து தமிழ் நாளிதழ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024