தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால், மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், எதிர்மறை கருத்துக்கள் பரப்புவதை பார்த்து, கடும் கோபம் அடைந்துள்ளனர். அவசியமற்ற போராட்டங் களால், அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதால், வெறுப்படைந்துள்ள மக்கள், அரசு கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் போராட்டம் நடத்துவது, சமீப காலமாக, 'பேஷன்' ஆகி வருகிறது. எதற்கு போராட்டம் நடத்த வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் ரோட்டை மறிக்க இறங்கி விடுகின்றனர்.
தாமதம்
காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு தாமதம் செய்வதை எதிர்த்து, மாநில அரசு, உச்ச நீதிமன்றம் சென்றுஉள்ளது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசை கண்டித்ததுடன், செயல் திட்டம் சமர்ப்பிக்க, கெடு விதித்துள்ளது.காவிரி பிரச்னையில், நம் உணர்வை வெளிப்படுத்த, அனைவரும் இணைந்து, அமைதி வழியில் போராடினால் வரவேற்கலாம்.
ஆனால், ஒவ்வொரு கட்சியினரும், தங்க ளுடைய செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனிப்பட்ட முறையில், கடையடைப்பு, பந்த், பஸ் உடைப்பு, மறியல், நடைபயணம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என, பல்வேறு போராட்டங்களை நடத்து கின்றனர்.காவிரி போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட்
போட்டி நடத்த, எதிர்ப்பு தெரிவித்து போராடினர். பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தாக்கினர். அதைத்தொடர்ந்து, பிரதமர் வருகையை எதிர்த்து, கறுப்புக் கொடி காட்டினர். தற்போது, கவர்னருக்கு எதிராக போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
பாதிப்பு
திடீர் போராட்டங்களால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது; பதற்றம் ஏற்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால்,அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதற்கிடையில், சமூக வலைதளங்களில், போராட்டக்காரர்களை துாண்டும் விதமாக, சிலர் பிரச்னைக்குரிய கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதற்கு பலர் எதிர்வினையாற்ற, தேவையற்றபிரச்னை வெடிக்கிறது.
ஏதாவது ஒரு விதத்தில், எதிர்மறை கருத்துக்களை பரப்பி, பிரச்னையை துாண்டி விடுவ தையே, சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுவும், மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.சிலர் தங்களுடைய கருத்துக்கு, யாரும் எதிர் கருத்தே கூறக்கூடாது என, நினைக்கின்றனர். நாகரிகமற்ற விதத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அடங்கிய, 'மீம்ஸ்' போட்டு, அசிங்கப்படுத்துகின்றனர்.
அதுபோன்றவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்காமல், 'ஆண்மை இருந்தால், முகவரி யோடு விமர்சியுங்கள்' என, அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுவது, அரசின் இயலா மையை தான் காட்டுகிறது.எனவே, சமூக வலைதளங்களில், தேவையின்றி, எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் மீதும், மக்களை பாதிக்கும் விதமான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீதும், இனிமேலாவது, அரசும், போலீசும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த மாநிலத் தின், ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில், 'நாங்களும் இருக்கிறோம்' என, மக்களிடம் காட்டிக்கொள்ள, பெரிய கட்சிகள் மட்டுமின்றி, துக்கடா கட்சிகளும், போராட்டத் தில் குதிக்கின்றன. திடீரென,புதுப்புது பெயர்களுடன், பல அமைப்புகள் வீதிக்கு வருகின்றன. இந்த சுயநல போராட்டத்தால், மக்களிடம், அவர்களுக்கான செல்வாக்கு நிச்சயம் குறையும்.
-அரவிந்த், பட்டுக்கோட்டை
இன்றைக்கு போராட்டம் நடத்தி, தங்களை பெரிய ஆளாக காட்டினால், நாளை, 'கல்லா' கட்டலாம் என்ற எண்ணத்தில் தான், பலரும் போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். இது போன்றவர் களை நம்ப மாட்டார்கள். போராட்டங்களால், தாங்கள் படும் அவதியை மறக்க மாட்டார்கள்.
-இம்ரான், திருவாரூர்
போராட்டம் என்றால், மதிப்பு, மரியாதை இருந்த காலம், மலையேறி வருகிறது. நியாய மான காரணத்திற்கு போராடலாம். எதற் கெடுத்தாலும் போராட்டம் என்பது சரியான நடைமுறையல்ல. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுகிறது. இதுபோன்ற செயல்களுக்கு, அரசு ஊக்கம் அளிக்கக்கூடாது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், கீழ்ப்பாக்கம், சென்னை
தமிழகத்தில் நடக்கும் கலவர போராட்டங் களால், முதலீட்டாளர்களுக்கு, தமிழகத்தின் மீதான, நம்பிக்கை போய் விட்டது. அதனால், இங்கு வர வேண்டிய முதலீடுகள், சத்தமில்லாமல், மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு.
-செந்துார்பாண்டி, துாத்துக்குடி
அரசியல் கட்சிகள், அடிக்கடி அர்த்தமற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால்,மக்களின் அடிப்படை பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன.
-அன்வர், நாகை- நமது நிருபர் -
No comments:
Post a Comment