Saturday, April 21, 2018

கருணைக்கொலைக்கு முன்பே உயிரிழந்தது யானை ராஜேஸ்வரி!

மு.ஹரி காமராஜ்


கருணைக்கொலைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருந்த நிலையில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த 40 வயது பெண் யானை ராஜேஸ்வரிக்கு ஒரு காலில் காயம் ஏற்பட்டதால் எழுந்துகொள்ளவே முடியாமல் அவதிப்பட்டு வந்தது. படுத்தபடியே இருந்ததால் உடலெங்கும் புண் உண்டாகி உண்ணாமலும் உறங்காமலும் கண்ணீர் வடித்தபடி இருந்தது. நாளுக்கு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய யானையைப் பார்த்துப் பொதுமக்கள் வருந்தினர். சுமார் இரண்டு மாதமாகத் தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகாததால், இந்த யானையைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றமும் 48 மணிநேரத்தில் யானையின் உடல் நலனைச் சோதித்து அறிக்கை அளித்தபிறகு சட்ட விதிகளுக்கு உட்பட்டு கருணைக்கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்றது.



இந்தத் தீர்ப்பை தமிழகமே அதிர்ச்சியோடு நோக்கியது. பலரும் அந்த யானை தானாகவே இயற்கை வழியில் இறந்து போக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். யானை குணமடைய கோயிலில் பூஜைகளும் பிரார்த்தனைகளும்கூட நடந்தன. இந்நிலையில் எவருக்கும் தன்னால் எந்தப் பழியும் வந்துவிடாத வகையில் இன்று ராஜேஸ்வரி யானை இயற்கையாகவே மரணமடைந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் பக்தர்கள் மட்டுமன்றி எல்லோருமே இந்தச் செய்தியைக் கேட்டு கவலை கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024