Sunday, April 8, 2018

"ஒலிபெருக்கி தேவையில்லாத கர்ஜனை!".. 'இசை முரசு' நாகூர் ஹனிபா நினைவுகள்
ர.முகமது இல்யாஸ்




‘உடன்பிறப்பே! கழக உடன்பிறப்பே! அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும், பொன்னான கலைஞர் கண்ணாக மதிக்கும் உடன்பிறப்பே!’ என்ற பாடல் தி.மு.க. கூட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியவுடன், கரை வேட்டியுடனும் தோளில் கறுப்பு சிவப்புத் துண்டுடனும் உற்சாகமாகத் தொண்டர்கள் ஓடிவரும் காட்சியைக் காணாத தமிழ்நாட்டுத் தெருக்கள் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஏழு தசாப்தங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த சிம்மக்குரலுக்குச் சொந்தக்காரர் ‘இசை முரசு’ நாகூர் ஹனிபா. ‘அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ போன்ற தி.மு.க-வின் பிரசாரப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவர் நாகூர் ஹனிபா. ஆனால், அவரை தி.மு.க. பிரசார பாடகர் என்று சுருக்கிவிட முடியாது.

திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நாகூர் ஹனிபா ஒவ்வோர் ஊர் மேடைகளிலும் பாடியிருக்கிறார். அவரது பாடலை, தந்தை பெரியார் ரசித்துக் கேட்டிருக்கிறார். நாகூர் ஹனிபாவின் சிம்மக்குரலைச் சுட்டிக்காட்டி, ‘‘ஹனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை’’ எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கும் அந்தக் காலத்திலேயே ஒரு ரூபாய் பரிசும் அளித்து இருக்கிறார். பெரியாரிடம் பாராட்டும் பரிசும் வாங்கும் அரிய காட்சியை அன்றைய திராவிட இயக்கத் தோழர்கள் வியந்து இருக்கிறார்கள்.



இஸ்மாயில் முஹம்மது ஹனிபா, 25 டிசம்பர் 1925-ல் நாகூரில் பிறந்தவர். திருமண நிகழ்ச்சிகளில் பாடிப் பழகிய ஹனிபா, தன்னுடைய 15-ஆவது வயதிலேயே தனியாளாக இசைக் கச்சேரி நடத்தியவர். அந்த நிகழ்ச்சிக்கு 25 ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் ஹனிபா. 1937-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, நாகூர் வந்த ராஜாஜியை எதிர்த்து நான்கு பேர் கறுப்புக் கொடி காட்டினர். 13 வயதே ஆன ஹனிபாவும் அவர்களுள் ஒருவர்.

பின்னாள்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பாரதிதாசனின் பாடல்களான, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ முதலானவற்றை தம் கணீர்க் குரலால் பாடினார் ஹனிபா. ‘குடி அரசு’ இதழின் தீவிர வாசிப்பாளரான ஹனிபா, பெரியாரின்மீது பற்றுக்கொண்டு திராவிட இயக்கப் பாடல்களைப் பரப்பத் தொடங்கினார். பெரியார் பற்றிப் பல பாடல்களைப் பாடினார் ஹனிபா. ``பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா தூங்கிக்கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார். தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா-வே!'' என்று அவர் பாடிய பாடல்தான் முதன்முதலில் பெரியார் பற்றி இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்ட பாடல்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியவுடன் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயல்பட்டார். 1953-ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களின் வறுமையைப் போக்க தி.மு.க., தமிழ்நாடு முழுவதும் கைத்தறி துணிகளை விற்றது. அப்போது, அண்ணாவுடன் திருச்சிக்குக் கிளம்பினார் ஹனிபா. திருச்சி மக்களிடம் கைத்தறி துணியை விற்க, ஒலிபெருக்கி இல்லாமலேயே தன் வெண்கலக் குரலால் பாடி, மக்களைக் கவர்ந்தார் ஹனிபா.

அதே ஆண்டு, கோவையில் ஒரு மாநாடு நடந்தது. அண்ணா நடத்திவந்த ‘நம் நாடு’ நாளிதழில்.... அன்றைய நாள், ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடல் வெளியாகியிருந்தது. அந்த மாநாட்டில் கருணாநிதியின் வேண்டுகோளின் பெயரில், அந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடினார் ஹனிபா. அவர், இசையமைப்பதிலும் வல்லவர் என்பதை அந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. அண்ணா மறைந்தபோது, ‘பட்டுமணல் மெத்தையிலே... பூ மணக்கும் வேளையிலே... உறங்குகிறாய் உறங்குகிறாய் அண்ணா' என்ற பாடலைப் பாடினார் ஹனிபா. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் ஹனிபா. தேர்தல் அரசியல் ஹனிபாவுக்குக் கைகூடவில்லை என்றாலும், கருணாநிதி ஆட்சியில் தமிழக வக்பு வாரியத்துக்குத் தலைவராக இருந்தார் நாகூர் ஹனிபா.



நாகூர் ஹனிபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இஸ்லாமிய வழக்கங்களையும், வரலாற்றையும் அழகுத் தமிழில் பட்டிதொட்டியெங்கும் சேர்த்தன ஹனிபாவின் பாடல்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், ஹனிபாவின் பாடல்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். உதாரணமாக, ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’ என்ற பாடலில், பிலால் என்ற நபித்தோழர் அடிமையாக இருந்த வாழ்க்கையைப் பற்றிப் பாடியுள்ளார் ஹனிபா. ‘‘அது, தம்மைக் கண்கலங்கவைக்கும் பாடல்’’ எனப் பல மேடைகளில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

65 ஆண்டுகள் தொடர்ந்து பல மேடைகளில் பாடி சாதனை படைத்தவர் ஹனிபா. நாகூர் ஹனிபா என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் பாடல் – ‘இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்பதுதான். மிக எளிமையான நடையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் சாதி, மதம் கடந்து அனைவராலும் பாடப்படுகிறது.

விட்டல்தாஸ் மகராஜ், மதுரை ஆதீனம் முதலான மதக் குருக்களும் இந்தப் பாடலைப் பொதுவெளியில் பாடி ஹனிபாவின் மத நல்லிணக்கப் பணியை வெளிபடுத்தியிருக்கின்றனர். இஸ்லாமியப் பாடல்களும் இயக்கப் பாடல்களும் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பாடியவர் ஹனிபா. 1961-ஆம் ஆண்டு, ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில், டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலைப் பாடினார். 1992-ஆம் ‘செம்பருத்தி’ திரைப்படத்தில், இளையராஜா இசையில், ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலும், 1997-ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில், ‘உன் மதமா... என் மதமா? ஆண்டவன் என்ன மதம்?’ என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.



தன் குரல்வளத்தால் தமிழ்ச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த நாகூர் ஹனிபா 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி 89-ஆவது வயதில் மரணமடைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணீர் மல்க, ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த ஒரு மாநாடும் நாகூர் ஹனிபாவுடைய இசையில்லாமல், தொடங்கியதும் இல்லை; முடிந்ததும் இல்லை. ஹனிபா பாடிப்பாடி மக்களைக் கவர்ந்த காட்சியை, அந்த மக்களில் ஒருவனாக நான் ரசித்து இருக்கிறேன். என் ஆருயிர் சகோதரனை இழந்து தவிக்கிறேன். ஹனிபா பாடிய பாடல்கள் என்றென்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வாழ்க நாகூர் ஹனிபா!’’ என்றார்.

அந்த இசைக்கலைஞரின் நெருங்கிய நண்பர் கருணாநிதி சொன்னதில் உண்மை இருக்கிறது. திராவிட இயக்கம் இருக்கும்வரை அந்த ‘இசை முரசு’ நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024