கணவர் மீதான காதலால் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த ராணுவ அதிகாரி!
ஞா. சக்திவேல் முருகன் Chennai:
தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் தன்னுடைய கணவனை இழந்தாலும் மனம் தளராமல் பயிற்சி பெற்று ராணுவத்தில் அதிகாரியாகப் பதவியேற்றிருக்கிறார் ஸ்வாதி. இவர், மகாராஷ்டிரா மாநிலத்தின் பத்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாட்ரா பகுதியில் போகார்வாடி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் சந்தோஷ். அவருடைய தந்தை, வீடுதோறும் பால் விநியோகிப்பவர். இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்ட சந்தோஷ், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தேர்வு எழுதி இந்திய ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்.
துடிப்புடன் செயல்பட்டவருக்கு, தீவிரவாத எதிர்ப்புப் படையின் 41-வது ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படைப் பிரிவில் கமாண்டிங் ஆபீஸர் பணி கிடைத்தது. காஷ்மீர் மாநிலத்தில் இரவு-பகல் பாராமல் தீவிரவாதிகள் ஊடுருவல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் கண்காணிப்பு வேலையில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறார் கர்னல் சந்தோஷ். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுத்தபோது, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இவரின் சிறந்த சேவையைப் பாராட்டி 2016-ம் ஆண்டில் ஷாரியா சக்ரா விருது வழங்கியிருக்கிறது மத்திய அரசு.
2003-ம் ஆண்டு சொந்த ஊரில் ஆசிரியையாக வேலைபார்த்துவந்த ஸ்வாதியைத் திருமணம் செய்திருக்கிறார் சந்தோஷ். இவர்களுடைய காதல் வாழ்க்கையின் பரிசாக இரண்டு குழந்தைகள். எட்டு வயதில் பையன் சுயராஜ்யா. புனேவில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். 14-வயது மகள் கார்டிகி, டேராடூனில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.
உயிருக்கு உயிராக நேசித்த சந்தோஷ் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்ட ஸ்வாதி, தானும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினார். ராணுவ அதிகாரி பதவிக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று, சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பயிற்சியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 39. பயிற்சியில் ஸ்வாதி சிறப்பாகச் செயல்பட்டதாக சிறந்த பயிற்சி விருதையும், இரண்டு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்.
தற்போது, புனேவில் அம்மோனியம் வெடிப்பொருள் ஆலையில் லெஃப்டினன்ட் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஸ்வாதி. பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர ஊக்கமளிக்கும் வகையில், இவரது வாழ்க்கை முறையை சமூக அறிவியல் பாடத்தில் தனிப்பாடமாகவே சேர்க்கப்பட்டிருக்கிறது.
பாடப்புத்தகத்தில் இடம்பிடித்தது தொடர்பாக ஸ்வாதி பேசியபோது, ``சந்தோஷ், முதலில் இந்திய ராணுவத்தைத்தான் முழுமையாகக் காதலித்தார். அதற்கு அடுத்துதான் என்னைக் காதலித்தார். என் கணவர் ராணுவ உடையைப் பெரிதும் மதித்தார். அவருடைய வீரமரணத்துக்குப் பிறகு ராணுவப் பணியால் ஈர்க்கப்பட்டு நானும் இந்தப் பணியில் சேர்ந்தேன். அவருக்காக, என்னுடைய சாதனைகளை அர்ப்பணிக்கிறேன். ராணுவ உடையை தினமும் அணியும்போது சந்தோஷ் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இந்த உடை எனக்கு உணர்வுபூர்வமானது மட்டுமல்ல, பொறுப்பும் பொறுமையும் மிக்கதாகவும் நினைக்கிறேன். என் வாழ்க்கைநிலை பற்றி பாடப் புத்தகத்தில் சேர்த்திருப்பதால், ஒரு குழந்தையேனும் ராணுவத்தில் சேர்ந்தால் மகிழ்வேன். வாழ்க்கை என்பது வாய்ப்புகளும் சோதனைகளும் நிறைந்தவைதாம். சக்கரம்போலவே மாறி மாறி நமக்கு வரவே செய்யும்" என்கிறார்.
ஸ்வாதிக்கு ஒரு ராயல் சல்யூட் கொடுப்போம்!
No comments:
Post a Comment