அசத்தல்! சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை
ஐந்து நவீன வசதிகள் விரைவில் அறிமுகம்
dinamalar 22.04.2018
புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களை நிறுத்தி பணம் செலுத்தும் நடைமுறைக்கு பதிலாக, ஐந்து நவீன வசதிகளை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மொபைல் போன், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், எளிதாக, சுங்கக் கட்டணத்தை செலுத்தும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.
நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நீண்ட துார சாலை வழி பயணங் கள் எளிதாகி, நேரம் மிச்சமானது. ஆனால், வழியெங்கும் வரும் சுங்கச் சாவடிகளில் நிறுத்தி நிறுத்தி, சுங்கக் கட்டணம் செலுத்து வது, தங்கள் பயண நேரத்தை அதிகரிப்பதாக, பயணியர் தெரிவித்தனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், கடுமை யான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஐந்து நவீன திட்டங்களை செயல்படுத்த உள்ளது.இவை, டில்லி - மும்பை, டில்லி - சண்டிகர், டில்லி - கோல்கட்டா மற்றும் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை களில், முதல்கட்டமாக பரிசோதிக்கப்பட உள்ளன.
'மொபைல் ஆப்'
இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 'மொபைல் ஆப்' எனப்படும், மொபைல் போன் செயலியை, விரைவில் அறிமுகப்படுத்த
முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ் சாலையில் பயணம் செய்வோர், அந்த செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில், பெயர், வாகன எண் உட்பட, கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்கள் உடனடியாக சரிபார்க்கப் பட்டு, அந்த செயலி செயல்படத் துவங்கும்.
இதில், இரு வகையாக சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த முடியும். முதலாவதாக, உங்கள்வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்த செயலியில் உள்ள, 'இ - வாலட்'டில் சேமித்து வைக்க வேண்டும்.
வெளியூர் பயணம் புறப்படுவதற்கு முன், நீங்கள் செல்லும் இடத்தை, அந்த செயலியில் குறிப்பிட் டால், வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளன, மொத்தம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என, தெரிந்து விடும். அதை புறப்படு வதற்கு முன், மொத்தமாக செலுத்தி விடலாம்.ஒவ்வொரு சுங்கச்சாவடியை நெருங்கும் போதும், உங்கள் மொபைல் போனுக்கு, 'க்யூ.ஆர். கோட்' எனப்படும், சங்கேத குறியீடு அனுப்பப்படும்; அதை, சுங்கச் சாவடியில், 'ஸ்கேன்' செய்து, செல்ல வேண்டும்.
இரண்டாவது, இந்த செயலியை, யூ.பி.ஐ., எனப்படும், மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பணப் பரிவர்த்த னைக்கான நடைமுறையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, சுங்கக் கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.
தனி வரிசை
இது மட்டும் அல்லாமல், 'வை - பை' அல்லது, 'ப்ளூடூத்' தொழில்நுட்ப உதவியுடன், வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு மூலம், சுங்கக் கட்டணத்தைசெலுத்தும் முறையும் பரிசோதிக்கப் பட உள்ளது. இந்த வசதியை பெற விரும்பும் வாகனங்களுக்கு, தனி வரிசை ஒதுக்கப்படும்.இது தவிர, தைவான் போன்ற நாடுகளில் உள்ள தானியங்கி முறையும் பரிசோதிக்கப்பட உள்ளது. இதில், சுங்கச்சாவடிகளே இருக்காது.
நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,
தானியங்கி ஸ்கேனிங் கருவி வைக்கப்படும். அனைத்து வாகனங்களிலும், 'சென்சார்' பொருத்தப்படும்.ஸ்கேனிங் கருவியை வாகனம் கடந்து செல்லும் போது, 'சென்சார்' உதவியுடன், சுங்கக் கட்டணம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும். 'நம் ஊரில் இருக்கும் வாகன எண்ணிக்கையை ஒப்பிடும் போது, இது சற்று கடினமான முயற்சி' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
'தரமான சேவை பெற செலவு செய்யலாமே'
'நவீன முறையை செயல்படுத்த, அதிகம் செல விட வேண்டியிருக்கும். இவ்வளவு தொகை செலவு செய்வதற்கு, சுங்கக் கட்டண முறை யையே ரத்து செய்ய முடியாதா...' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரியிடம், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு வாய்ப்பே இல்லை. நாம் நிறைய நெடுஞ்சாலைகள் அமைக்க வேண்டிஉள்ளது; அதற்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகின்றன.ஆனால், நம்மிடம் அதற்கான நிதி இல்லை.
நம்மிடம், ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கான நெடுஞ்சாலைப் பணிகள் உள்ளன. ஆனால், நம் ஆண்டு பட்ஜெட் தொகை, 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. தரமான சேவைகளுக்கு, மக்கள் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment