Saturday, April 7, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தொடர் போராட்டம்; மற்றவர்கள் கேலி செய்வதை எனக்கான எனர்ஜியாகவே எடுத்துக்கொள்கிறேன்: டிராபிக் ராமசாமி சிறப்புப் பேட்டி

Published : 06 Apr 2018 19:24 IST

நந்தினி வெள்ளைச்சாமி



காவிரிக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் டிராஃபிக் ராமசாமி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமும் போராடிக் கொண்டிருக்கிறது. சாலை மறியல், ரயில் மறியல், கடையடைப்பு, வேலைநிறுத்தம் என எல்லா வடிவங்களிலும் போராட்டக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்படியிருக்கும்போது, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பந்தல் அமைத்து அமைதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் சமூக ஆர்வலரும், மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவருமான டிராபிக் ராமசாமி.

தன்னுடைய ஜீப் வாகனம் மீதேறி டிராபிக் ராமசாமியும், அவருடைய மாணவி ஃபாத்திமா பாபுவும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஜீப் வாகனத்தில் அமர்ந்துதான் போராடுவேன் என்று விடாப்பிடியாக இருந்தவர் நேர்காணலுக்காக இறங்கி வந்தார்.

தன் உண்ணாவிரதப் போராட்டம், திமுகவின் போராட்டம், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசின் அணுகுமுறைகள், கமல், ரஜினி அரசியல் வருகை என பல்வேறு கேள்விகளை டிராபிக் ராமசாமியிடம் முன்வைத்தோம். எதற்கும் அசராமல் அவர் கொடுத்த பதில்கள் இதோ:

காவிரிக்காக பல விவசாய அமைப்புகள், மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அவர்களுடன் இணைந்து போராடாமல் தனியாக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்?

மக்கள்தான் என்னைத் தேடி வர வேண்டும். காவிரி விவகாரத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அதனால்தான் மக்களைக் காப்பாற்ற நானே போராட்டத்தில் இறங்கியுள்ளேன். பல அமைப்புகள் சுய கவுரவம் பார்ப்பதால் என்னைத் தேடி வர மறுக்கின்றனர். 'மக்களால் நான்; மக்களுக்காக நான்' என்பதை நிரூபித்துவிட்டேன். ஏழு கோடி மக்களும் என்னுடன்தான் உள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழக மக்களை ஏமாற்றும் நாடகத்தை தமிழக ஆட்சியாளர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், ஆட்சி செய்பவர்கள் அனைவரும் நடிகர் கும்பலில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுதான் தமிழகத்தின் நிலைமை.

உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கான நாள் வரை அமைதிகாத்து வந்த தமிழக அரசு அதன்பிறகுதான் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பதை கேலிக்கூத்து என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். மத்திய அரசு முதலில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதன்பின்னரே தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் எப்படி இருக்க வேண்டும், யார், யாரெல்லாம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் மத்திய அரசுக்கு என்ன விளக்கம் வேண்டும்? 2016-ம் ஆண்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இப்போதும் அமைக்கவில்லை.

தமிழக அரசு தொடுத்திருக்கும் மனு மீது வரும் 9-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. அப்போது நல்ல முடிவை உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என நம்புகிறேன்.

மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பாஜக, காவிரி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

மத்திய அரசு செயல்படவும் இல்லை. தமிழக அரசை செயல்படவும் விடவில்லை. இந்த அரசுக்கு வரும் 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என நம்புகிறேன். பாஜக 50 முதல் 60 சீட்டுகள் வென்றாலே அதிகம். இல்லையென்றால் தேர்தலில் ஏதேனும் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக முயற்சிக்கும்.

காவிரி விவகாரத்தில் நேற்று (வியாழக்கிழமை) திமுக முன்னெடுத்த போராட்டம் குறித்து?

திமுக காலத்தின் கட்டாயத்தால் போராட்டம் நடத்தத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் போராட்டம் வெற்றிதான். பலரும் மனப்பூர்வமாக பங்கேற்றிருக்கின்றனர். ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. போராட்டம் என்பது நான் நடத்துவதுபோன்று மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

மக்கள் தன்னெழுச்சியாக திரளாகப் போராடிக் கோண்டிருக்கையில் நீங்கள் தனியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதால் ஏதேனும் மாற்றம் வரும் என நம்புகிறீர்களா?

நான் முன்னெடுக்கும் போராட்டம் காந்தி வழியிலான அமைதிப் புரட்சி. 7 கோடி தமிழக மக்கள் என்னுடன் தான் உள்ளனர். இத்தகைய போராட்டங்களால் நான் பல வெற்றிகளை கண்டிருக்கிறேன்.

உங்களுடைய போராட்டத்தை சிலர் கேலி செய்கின்றார்களே? விமர்சிக்கிறார்களே? பப்ளிசிட்டிக்காக போராடுவதாகச் சொல்கிறவர்களுக்கு என்ன சொல்லப் போறீங்க?

இதில் என்ன பப்ளிசிட்டி உள்ளது. நான் ‘ஒன் மேன் ஆர்மி’. என்னுடைய பல போராட்டங்களில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். மீன்பாடி வாகனத்தை ஒழித்திருக்கிறேன். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடுகிறேன். இதெல்லாம் என்னுடைய சாதனைதான். மக்கள் மட்டுமல்லாமல் விஏஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளே என் பக்கம்தான் உள்ளனர். மற்றவர்கள் என்னைக் கேலி செய்வதை எனக்கான எனர்ஜியாகவே எடுத்துக் கொள்கிறேன்.

உங்கள் மீது பல தாக்குதல் நடைபெற்றிருக்கின்றன. அதையும் மீறி எப்படி போராடுகின்றீர்கள்?

கடவுள் தான் என்னைப் போராடத் தூண்டுகிறார்.

கோரிக்கை நிறைவேறும் வரை அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றீர்களா?

தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீது தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வேன்.

9-ம் தேதி நீங்கள் நினைத்த தீர்ப்பு வரவில்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் என்னவாக இருக்கும்?

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் போன்று தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் தொடர் போராட்டம் என்னுடைய தலைமையில் நடக்கும்.

முதல்வர், துணை முதல்வர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முதல்வரும் துணை முதல்வரும் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். நடிப்பவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள். தமிழக அரசின் ஆட்சியாளர்கள் தங்களையே ஏமாற்றிக் கொண்டுள்ளனர். அதிமுகவினர் தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்ற பாஜகவுடன் கைகோத்துள்ளனர். மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு இல்லை.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழக பிரச்சினைகளை அணுகும் விதம், முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

திமுக தலைவர் கருணாநிதியைவிட நிர்வாகத் திறமை கொண்டவர் மு.க.ஸ்டாலின்.

திமுக, அதிமுக என எல்லாக் கட்சிகளையும் விமர்சிக்கிறீர்கள். எல்லாருடைய கட்-அவுட், பேனர்களையும் கிழிக்கின்றீர்கள். எந்தக் கட்சியை நீங்கள் மாற்றாக முன்வைப்பீர்கள்?

கட் அவுட் கலாச்சாரத்திலிருந்து விலகி பாமக தற்போது ஓரளவுக்கு மாற்றத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ராமதாஸ் சில விஷயங்களில் நல்ல வழியில் திரும்பிக் கொண்டிருக்கிறார். திமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கட் அவுட் கலாச்சாரத்தை விட வேண்டும்.

உங்கள் மக்கள் பாதுகாப்புக் கழகத்தின் அடுத்தகட்டப் பயணம் என்ன?

மக்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ள, சமூக பிரச்சினைகளை கையிலெடுத்து போராடுகின்ற 100 சமூக ஆர்வலர்கள், நல்லவர்களை தேர்ந்தெடுத்துள்ளேன். அவர்களை எனது கட்சி சார்பாக அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைப்பேன்.

நடிகர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார்கள். என்ன நினைக்கிறீர்கள் அதைப்பற்றி?

கமல், ரஜினி எல்லாரும் அவர்களுடைய சினிமாத் துறையை சீர்படுத்தட்டும். அதன்பிறகு மக்கள் பிரச்சினைகளை கையிலெடுக்கட்டும். கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்பவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை. மக்களைக் காப்பாற்றுவதற்கு பதவி தேவையில்லை.

உங்களைப் பற்றி திரைப்படம் எடுக்கிறார்களே...

என்னைப் போன்ற சாதாரண மணிதனை 2-3 கோடி பணம்போட்டு திறமையான இயக்குநர் ஒருவர் மற்றொரு இயக்குநரை வைத்து படம் எடுப்பதுதான் சாதனை. என்னுடைய கதாபாத்திரத்தை எடுக்கத் துணிவதே சரித்திரம். வில்லங்கம் ராமசாமின்னுதான் என்னை சொல்வார்கள். அந்த வில்லங்கத்தையே படமாக எடுக்க துணிந்ததற்கு இயக்குநருக்கு தலை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024