Saturday, August 11, 2018

படித்தவன் பாவம் செய்தால்...

By ப. இசக்கி | Published on : 11th August 2018 01:35 AM |
 
இன்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான ஊழல்களிலும், முறைகேடுகளிலும் மெத்தப் படித்த கல்விமான்களின் பங்கு அதிகரித்து வருவது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாது அவமானமாகவும் இருக்கிறது.

ஆட்சியில் ஊழல், நிர்வாகத்தில் ஊழல் என்றிருந்த நிலை மாறி, தற்போது கடவுளைக் கண்டு வழிபடும் கோயில்களில் ஊழல், கல்லாமையை நீக்கும் கல்விக் கூடங்களில் ஊழல் என, நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஊழல் ஊடுருவியிருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

1948-இல், அப்போது இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நம் நாட்டு ராணுவத்துக்கு 200 ஜீப்புகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் வழக்கமான நடைமுறைகளை மீறியது என்றும், அதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் ஊழலாக குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ண மேனன் படித்தவர்தான்.

அதனைத் தொடர்ந்து, 1950-களில் முந்த்ரா' ஊழல், 1980-களில் போபர்ஸ்' ஊழல், இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்த 2ஜி ஊழல், நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என பரபரப்பாக பேசப்பட்ட எல்லா ஊழல்களும் பல ஆயிரம் கோடி ரூபாய் தொடங்கி சில லட்சம் கோடி ரூபாய் வரையிலான ஊழல்களாகும்.
இந்த ஊழல்கள் எல்லாவற்றிலும் முதன்மையாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், அவர்களுடன் ஒரு சில அதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டதுண்டு. எனினும், பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையாகவும், அரசின் சட்ட திட்டங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும் இருந்தனர். சில அதிகாரிகள், ஆட்சியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தாமாகவே அவர்களிடமிருந்து விலகிக் கொண்டதுமுண்டு.

ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. ஊழலுக்கு ஒத்துழைக்கக் கூடியவராக மட்டுமல்லாது, ஊழலுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து தங்களுக்கு கீழே பணி அமர்த்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஆலோசனைகளை சொல்லி ஆட்சியாளர்களின் மனதில் இடம்பிடித்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இவர்கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்கின்றனர்.

நாடு முழுவதும், கடந்த 2017 ஜூன் வரையில் சுமார் 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 16,875 பேர். தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் 18,780 பேர். அரசியல்வாதிகள் 115 பேர். இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் மீது மட்டும் 339 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தானே?
தமிழ்நாட்டிலும் அரசியல்வாதிகளைப் போலவே அரசு அதிகாரிகளும் ஊழல்களில் திளைப்பது அதிகரித்து வருகிறது. தலைமைச் செயலர் முதல் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் வரை ஊழல் புகார்களுக்கு இலக்காகி வருகின்றனர்.

இப்போது ஊழல்வாதிகள் கோயில்களையும் விட்டுவைக்கவில்லை. கோயில் சிலைகள் திருட்டு, சுவாமி சிலைகள் செய்ததில் முறைகேடு, கோயில் நிதியில் ஊழல் என அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முறைகேடுகள் ஓர் ஆரம்பம்தான். இன்னும் ஆழமாக விசாரித்தால் பெரும் பூதம் கிளம்பும்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். முறைகேடு புகார்களுக்கு ஆளாகி இருப்பவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தான்.

கோயில்கள் மட்டுமல்லாது, கல்வித்துறையிலும் குறிப்பாக உயர்கல்வி நிலையங்களான பல்கலைக்கழகங்களின் ஊழல் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான ஊழல் நடந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 2006 முதல் துணைவேந்தர் பதவி என்பது கல்வி, அனுபவம், திறமைக்கு அல்லாது அரசியல், சாதி மற்றும் பண பலம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பட்டியலிடப்படுகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அண்ணா பல்கலைக்கழகம் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. கோவையில் முன்பு இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆர். ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முதல் துணைவேந்தர் இவர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏழு பேர் மீது ஊழல் தடுப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்தோ அல்லது முறைகேடுகள் தொடர்பாகவோ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளனர்.
ஒரு துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தபோது சுமார் ரூ. 20 கோடிக்கு சொத்து ஆவணங்களும், நான்கு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

துணைவேந்தர்கள் மீதான முறைகேடுகள் அனைத்தும் பேராசிரியர் பணி நியமனங்கள், தளவாடச் சாமான் கொள்முதல், உறுப்பு கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல் போன்றவற்றில் நிகழ்ந்தவைகள் ஆகும். இப்போது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்கு ஆளான அனைவருமே படித்தவர்கள்தான்.

நாட்டில் ஊழலை ஒழிக்க 1988-இல் ஊழல் தடுப்புச் சட்டம்' இயற்றப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே முறைகேடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க இந்திய குற்றவியல் சட்டமானது 1860 முதல் நடைமுறையில் உள்ளது.
எனினும், ஊழலை ஒழிக்க முடியவில்லை. எனவே, ஊழலை ஒழிக்க, லஞ்சம் பெறுவோரை மட்டுமல்லாது கொடுப்போரையும் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாவது படித்தவர்கள் செய்யும் பாவம் ஒழியுமா என்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024