பயமுறுத்தும் சாலை விபத்துகள்
By எஸ். ஸ்ரீதுரை | Published on : 03rd August 2018 01:28 AM |
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில், வெகுவேகமாக வந்த ஒரு சொகுசு கார் மோதியதில் ஆறு பேர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் கோவை நகரை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகள் பாதுகாப்பானவைதானா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்பது திருவள்ளுவரின் வாக்காகும். நேற்று உயிருடன் இருந்தவர் இன்று உயிருடன் இல்லை என்பதே இவ்வுலக வாழ்வின் சிறப்பு என்ற கருத்துடைய இக்குறள் மனித வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக்கூறுகின்றது.
அன்றாடம் நாம் கேள்விப்படும் சாலை விபத்துக்களோ, சென்ற விநாடி இருந்தவர் இந்த விநாடியில் உயிருடன் இல்லை என்ற புதிய விதியை உருவாக்கி வருகின்றன.
அதிக வேகம், அலட்சியம், சாலை விதிகளை மதியாமை போன்று எத்தனையோ காரணங்களால் சாலை விபத்துக்கள் நேர்கின்றன. விபத்துகள் எதிர்பாராமல் ஏற்படக்கூடியவையே. ஆயினும், விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவையே என்பதையும் வாகனங்களை இயக்குவோர் புரிந்து கொள்ள வேண்டும்.
சூழ்நிலைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. அம்பாசிடர்', பியட்' போன்ற கார்களை மட்டுமே நம் நாட்டுச் சாலைகள் பார்த்த காலம் ஒன்று உண்டு. எப்போதாவது அபூர்வமாக சில நவீன ரக கார்கள் கண்ணில் தென்படும். சென்ற தலைமுறையினரில் பலரும் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணம் கட்டிவிட்டு, வருடக் கணக்கில் காத்திருந்து வாங்கியவர்கள்தான்.
இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை, விதவிதமான வாகனங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ளவும், தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளவும் வழிவகை செய்துள்ளது.
வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிது என்ற காலம் போய், ஆளுக்கொரு ஸ்கூட்டர் அல்லது பைக் மற்றும் குடும்பத்துக்கு ஒரு கார் (குறைந்தபட்சம்) சொந்தம் என்ற நிலை உருவாகி விட்டது. யாருக்கும் யாருடனும் பேசுவதற்குக்கூட நேரமில்லை
.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலை இப்படி இருக்க, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் தேவைக்கு வானமே எல்லை என்றாகிவிட்டது.
அதிகபட்ச வசதிகள் மற்றும் அதிவிரைவுப் பயணம் என்ற குறிக்கோளுடன் வாகனங்களை வாங்க விரும்பும் இவர்களுக்கென்றே பல லட்சம் ரூபாய்களில் (சில கோடிகளில் கூட) இறக்குமதித் தயாரிப்புகள் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப இறக்குமதி வரிகளும் உண்டு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சமூக அந்தஸ்தின் குறியீடாகவே இத்தயாரிப்புகள் வாங்கப்படுகின்றன.
இளைஞர்களும், இளம்பெண்களும் இத்தகைய கார்களை ஓட்டும்போது ஆகாயத்தில் பறப்பது போன்று உணர்வார்கள். ஆனால், சட்டென்று பிரேக் பிடிக்க நேரும்போது வண்டி அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்காது. விபத்து நேரிடும்போது யாருக்குமே தப்பிக்க வழியிருக்காது.
சென்னையில் சினிமா நட்சத்திரங்கள் சிலரும் கோடீஸ்வர வீட்டு வாரிசுகளும் இத்தகைய விலையுயர்ந்த இறக்குமதி வாகனங்களை விரைவாக ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதையும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலை இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தர சாட்சியாகிவிட்டது. இச்சாலையில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை.
குடியிருப்புப் பகுதிகளிலேயே, வண்டியைக் கிளப்பி, சில விநாடிகளில் அறுபது எழுபது வேகத்தைத் தொடுபவர்கள் நம்மவர்கள். இந்நிலையில், நல்ல தரமான சாலைகளில், வெளிநாட்டு இறக்குமதி வண்டியை ஓட்டுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது நம்மால் யூகிக்கப்படக்கூடியதே. உண்மையிலேயே விரைவாக ஓர் இடத்தை அடையவேண்டிய தேவையில் இத்தகைய வண்டிகளில் பயணிக்கக் கூடியவர்களும் உண்டு. தாம் நிர்வகிக்கும் தொழிலில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்க முடியாத நபர்களை நாம் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை.
அதே நேரம், இத்தகைய வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் (உரிமையாளரே ஓட்டினாலும் சரி) மிகமிகத் திறமையான ஓட்டுநர்களாக இருப்பது முக்கியம். சாலை விதிகளைத் தாங்கள் மதிப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டில் சாலைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் (சாலையைக் கடக்கும் பாதசாரிகள் உட்பட) சாலை விதிகளை முழுவதுமாக மதிக்காதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டவர்களாக இருத்தல் மிகமிக முக்கியம்.
மது அருந்திவிட்டு இவ்வாகனங்களை ஓட்டக் கூடாது என்பதைத் தனியே கூறத் தேவையில்லை. கோவையில் ஏழு உயிர்களை வாங்கிய காரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. உடல்நிலை சரியில்லாததால், தனக்குச் சற்றே மயக்கமாக இருந்ததாக அவர் கூறியதாகவும் ஒரு செய்தி உலா வருகின்றது. இவற்றில் எது உண்மை என்பது முழுமையான விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.
ஓட்டுநர்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களும் அவர்கள் சரியாக உணவருந்தியிருக்கிறார்களா, போதிய ஓய்வு எடுத்துவிட்டு வண்டியை இயக்க வந்திருக்கிறார்களா, ஏதாவது அச்சம் அல்லது கவலையுடன் இருக்கின்றார்களா என்பதுடன் அவர்கள் போதைப் பொருள் பழக்கமுள்ளவர்களா போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா வாகன ஓட்டிகளுக்கும் இவை பொருந்தும் என்றாலும், மின்னல் வேக இறக்குமதி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இந்தக் காரணிகள் வெகுவாகப் பொருந்தும். மத்திய, மாநில அரசுகளும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, பள்ளி - கல்லூரி வாகனங்கள், அரசு விரைவுப் பேருந்துகள் போல, இத்தகைய வெளிநாட்டு சொகுசு வண்டிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.
நம் நாட்டின் மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் இவற்றைக் கணக்கில் கொண்டு, எந்த வண்டியும் எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் விரையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால்தான் விலைமதிப்பு மிக்க மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
No comments:
Post a Comment