முதுமையில் உதவும் உரிமைகள்!
By பி.கே. குருவிளா | Published on : 04th August 2018 01:11 AM |
முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்பது ஒரு காலத்தில் வளர்ந்த நாடுகளில் மட்டும் நிலவும் விவகாரமாகப் பார்க்கப்பட்டது. இப்போது இந்தியாவும் அந்தப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியவரத் தொடங்கியுள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் முதியோரின், அதாவது 60 வயதைக் கடந்தவர்களின் விகிதம் கடந்த 1971-ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருந்தது. அது 2007-இல் 7.5 சதவீதத்தைத் தொட்டது. வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் முதியவராக இருப்பார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க புள்ளிவிவரம், பிறரைச் சார்ந்திருப்போர் விகிதாசாரம் பற்றியது. அதாவது, பணிக்குச் செல்வோருக்கும் - முதுமையால் பணிக்குச் செல்ல இயலாமல் பிறரைச் சார்ந்திருப்போருக்கும் இடையேயான விகிதாசாரம் என்பது இதன் பொருள்.
இந்தியாவில், சென்ற 2001-ஆம் ஆண்டில் பிறரைச் சார்ந்திருப்போர் விகிதம் 11.9 சதவீதமாக இருந்தது. வரும் 2050-ஆம் ஆண்டில் இந்த விகிதாசாரம் 28.2 சதவீதமாக உயரும். அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையினர் வருமானம் - சுய வாழ்வாதாரம் இன்றி பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த வகையினர் கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக இருப்பார்கள். மற்றொரு குறிப்பிடத்தக்க விவரம் - பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரிடையே ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதே சமயத்தில், மொத்த மக்கள்தொகையில் இளைய வயதினரில் பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஒரு பெரும் நெருக்கடியான நிலையை உருவாக்கப் போகிறது.
சென்ற 1956-ஆம் ஆண்டிலேயே ஹிந்து சட்டத் திருத்தத்தின்போது, ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. அதன்படி,முதுமைப் பருவம் அடைந்த பெற்றோரைப் பேணிப் பராமரிப்பது, மகன்கள் மற்றும் மகள்களின் கடமையாகும். அதன் பிறகு 1973-இல் குற்றவியல் சட்ட நடைமுறையில் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்கீழ், வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர் நீதிமன்றத்தை அணுகிமுறையிடலாம். ஆனால், தங்கள் வாரிசுகளுக்கு வசதி இருந்தும் தங்களின் பராமரிப்புக்கு நிதி உதவி மறுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றத்தில் முதியோர் நிரூபிக்க வேண்டும். இதன் பிறகு 2007-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம்' ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.
இந்த சட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களைப் பேணுவதும் பராமரிப்பதும் அவர்களுடைய பிள்ளைகளின் கடமை மட்டுமல்ல, அவர்களின் பேரன், பேத்திகள் மற்றும் வாரிசுதாரர்களின் கடமையும் என்பது கட்டாயமானது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உள்பட அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்பது இதில் குறிப்பிடத்தக்கஅம்ச
மாகும்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும், கோட்ட அளவில் முதியோர் பரமாரிப்பு குறித்த புகார்களுக்கான தீர்ப்பாயங்களை அமைத்துள்ளன. மாவட்ட அளவில் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களை அணுகுவதைக்காட்டிலும், இந்தத் தீர்ப்பாயங்களை அணுகி புகார் அளிக்கும் நடைமுறையும் மனு தாக்கல் செய்யும் நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை மனுக்களையோ புகார் மனுக்களையோ தாக்கல் செய்யலாம்.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன்' சட்டத்தைத் தவிர, ரிவர்ஸ் மார்ட்கேஜ்' என்கிற, வீட்டின் மீதான மறு அடைமானம் மூலம் கடன் தொகை திரட்டும் திட்டமும் தேசிய ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டன.
மறு அடைமானம் திட்டத்தின் கீழ், ஒரு மூத்த குடிமகன் தனது வீட்டை வங்கியில் அடைமானம் வைத்து, தனது ஆயுள் காலம் வரை, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு தொகையைப் பெறலாம். ஒருவர் புதிதாக வாங்கும் வீட்டுக்கு கடன் பெறுவது என்பதற்கு நேர் எதிரான முறையில், அடைமானம் வைத்த வீட்டுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஈடுத் தொகை பெறும் முறை இது.
இதன் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை வீட்டு அடைமானத் தொகை பெற இயலும். மிக அவசரத் தேவைக்கு ரூ. 15 லட்சத்தை ஒரே தவணையாகப் பெற முடியும். வீட்டின் உரிமையாளரான முதியவர் தனது வாழ்நாளில் இந்தக் கடனை திருப்பி அடைக்க வேண்டியதில்லை. இதனிடையே அவர் அந்த வீட்டை விற்கவும் முடிவு செய்யலாம். அவ்வாறு விற்பனை செய்ய முடிவு செய்தால், கடன் தொகை போக மீதித் தொகையை அவர் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெயரில் சொத்து இருக்கும் பட்சத்தில், வீட்டின் கடைசி உரிமையாளர் காலமாகும் வரை, கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலை எழாது. இறுதி உரிமையாளர் காலமான பின்னர், வாரிசுகள் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தி வீட்டை தங்கள் பெயரில் வாங்கிக் கொள்ளலாம்.
முதுமைக் காலத்தில் உதவுவதற்காக உருவான மற்றொரு திட்டமான தேசிய ஓய்வூதிய திட்ட'த்தில் (என்.பி.எஸ்.) இணைவதற்கு முதுமை வரை காத்திருக்க வேண்டியதில்லை. இளமையில் பணி காலத்தில் ஒரு நபர் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கணக்கைத் தொடங்கினால், அவர் வேறு எந்த நிறுவனத்துக்கு மாறினாலும், தொடர்ச்சியாக ஒரே என்.பி.எஸ். கணக்கை வைத்திருந்து, அதில் ஓய்வு காலத்துக்கான தொகையைச் செலுத்தி வரலாம். ஓய்வூதியத் திட்டம் இல்லாத தனியார் துறை ஊழியர்கள், தங்கள் முதுமை கால வருவாயைத் திட்டமிட்டுக் கொள்ள இது மிகவும் உதவும். அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து, கணக்குத் தொடங்கி, தங்கள் பணி காலம் முழுவதும் அதைப் பராமரித்து, பலன் பெற முடியும்.
அந்தக் கணக்கைத் தொடங்கிய நபருக்கு 60 வயது நிறைவடையும்போது, அவரது கணக்கில் செய்துள்ள முதலீட்டின் அடிப்படையில் அவர் ஆயுள் காலம் வரை ஓய்வூதியம் பெறலாம். பணி-ஊதிய பாதுகாப்பற்றோரில் சிலருக்கு தற்போது இந்தத் திட்டம் சிறு ஓய்வூதியத் தொகையை அளித்து வருகிறது என்றாலும், இந்தத் திட்டம் இன்னும் பரவலான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.
இந்தத் திட்டங்களைத் தவிர, வங்கி சேமிப்புக் கணக்கு, வைப்புத் தொகை போன்றவற்றில் முதியோருக்கு என அதிக வட்டி விகிதம், பல விதமானக் கட்டணங்களில் அவர்களுக்கு சலுகை நடைமுறையில் உள்ளன. மேலும், ரயிலில் படுக்கை வசதியில் சலுகை - முன்னுரிமை, பேருந்துகளிலும் பிற போக்குவரத்து வசதிகளிலும் முதியோருக்கு இருக்கை - முன்னுரிமை உள்ளிட்ட சில சலுகைகள் அளித்து, முதியோர் நல்வாழ்வுக்கு வழிகோலப்பட்டுள்ளது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, முதியோரின் இலையுதிர்' காலத்தில் அவர்களுடைய மன நலன் குறித்து சிந்திக்க வேண்டியதும் முக்கியமல்லவா?
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தக் கருத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் ஆய்வுகளும் குவிந்துள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் விஷயம், பிணைப்பு' என்பதாகும். அதாவது, முதியோர் பிறருடன் தொடர்பு கொண்டிருப்பது, பிணைந்திருப்பதுதான் மிகவும் முக்கியம் என்கிறது. முதியோர் நலனில் அரசும் சமூகமும் சில நல்ல முயற்சிகளை எடுத்தாலும்கூட, தற்போதைக்கு அவை பலவீனமாகவே இருக்கின்றன. நமது நாடு மிகவும் பரந்து, விரிந்திருக்கிறது; பொருளாதார வளம் போதாது; இங்கு மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்பட முடியும்.
முதியோர் சுயமாக தங்களுக்கு என்று எதுவும் செய்து கொள்ள முடியாதா? தங்கள் வயதையொத்த அந்நியர்களுடன் - புதியவர்களுடன் நட்பைத் தேடி வளர்த்துக் கொள்வது என்பது அவர்களின் வாழ்வின் அந்திப் பொழுதில் நடக்கிற காரியமல்ல.
நமது வாழ்நாளின் துடிப்பான காலகட்டத்திலேயே, சமூகத்தின் ஏணிப்படிகளில் துள்ளியேறும் பருவத்திலேயே, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நட்புகளை வளர்த்துக் கொள்வதும் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதும் அவசியம். உதவி-ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய நாம் நேரம் ஒதுக்குவோமானால், பின்னாளில் அது நமக்குப் பெரும் வெகுமதிகளை அள்ளித் தரும்.
அனைத்து முதியோரும் தங்களுடைய உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. பெண்கள், படிப்படியாகத் தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பற்றி அறிந்து கொண்டு வருகின்றனர். அதே போல, ஓய்வு காலத்துக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்கள், தங்களது உரிமைகள் குறித்து அறிந்திருப்பதும், அவசியம் ஏற்படும்போது அவற்றால் பயன் பெறுவது முக்கியமாகும்.
முதுமைக் காலத்தில் புனித இடங்களுக்குச் சுற்றுலா செல்வோர், தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் சந்நியாசம் வாங்கிக் கொள்வோர் - இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான். எல்லா முதியோருக்கும் அந்த வழிமுறை சரியான தீர்வாக அமைந்துவிடாது. கட்டுரையாளர்:
மனநல மருத்துவர்.
No comments:
Post a Comment