Saturday, August 4, 2018

பழைய பெருமை பேச வேண்டாம்

By வாதூலன் | Published on : 04th August 2018 01:10 AM

  சில மாதங்களுக்கு முன்பு பெரியவர் ஒருவரின் சதாபிஷேக விழாவுக்குச் சென்றிருந்தேன். சொல்லப் போனால் அவர் அந்த வயதைப் போன வருடமே எட்டி விட்டார். ஆனாலும் மகன்கள் இரண்டு பேரும் இப்போதுதான் சேர்ந்து வர முடிந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்தேன்.

உறவினர் ஒருவரிடம் குடும்ப விஷயங்களை விசாரித்தபோது, அவர் ஓ காட்! எங்கள் குடும்பம் பாரத விலாஸ்... ஸாரி இன்டர்நேஷனல் வில்லா..' என்று தொடங்கி, தன் வாரிசுகள் எல்லாரும் அயல்நாட்டினரைத் திருமணம் புரிந்து கொண்டதைப் பெருமையாகவும் விரிவாகவும் சொல்லிக் கொண்டே போனார்.
சதாபிஷேக நாயகர், குறிப்பிட்ட சூழ்நிலையில் அந்தப் பேச்சை ரசிக்கவில்லையோ என்னவோ, குறுக்கிட்டு உரையாடலை திசை திருப்பினார். அந்த உறவினர் பெருமையாகப் பேசுவது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் வருத்தம் தோய்ந்திருந்ததைப் பேச்சில் கண்டுகொள்ள முடிந்தது. மனப் புண்ணை ஆற்றுவதற்கு ஒரு களிம்பு!

இதே மாதிரி அடிக்கடி கோயிலில் சந்திக்கும் சினேகிதி ஒருவர் என் மனைவியிடம் தன் பெயரனின் உடல் நிலையைப் பற்றிச் சொன்னார். என் அண்ணா 40 வருஷமாகப் பிட்ஸ்பெர்கில் இருக்கான். அங்கே கூட இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையாம்' என்றார் (பாவம், ஏதோ நரம்புத் தசைக் கோளாறாம்). அதாவது உலகத்தில் எங்குமே சிகிச்சை கிடைக்காத வினோத நோய் தங்கள் பெயரனைப் பிடித்துள்ளதாம். இத்தகைய மனோபாவமும், ஆழமான சோகத்தை உள்ளுக்குள் புதைத்து விட்டு, வெளியே பெருமையாகக் காட்டிக்கொள்ளும் ரகம்தான்.
இப்போது இந்தியாவிலேயே மருத்துவத்தில் அபார முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறுபது வயசு ஆயுளே அதிசயமாக இருந்தது முன்பெல்லாம். இப்போது நூறு வயது கூட வியப்பில்லை. என்னைவிட வயதான மனிதர் ஒருவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் வயதை கேட்டுக் கொள்ளுவார். எனக்கு எண்பத்தைந்து... பாரு, நீ ரொம்ப சின்னவன்' என்று கூறி இரு சக்கர வாகனத்தில் பெருமை பொங்க ஏறிக் கொண்டு போவார். நீண்ட காலம் நலமுடன் வாழ்வது என்பது இறைவன் அளித்த வரம் அல்லது இயற்கை தந்த அரும்கொடை.

ஆனாலும் ஒரு சில பெருமைகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அமைகின்றன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைக்குச் சென்ற போது என் மனைவியிடம் பரவாயில்லைம்மா, டயாபிடிஸ் எல்லாம் குறைஞ்சிருக்கு' என்றார். அதே தினம் எனக்கு அவர் மகனையும் பார்ப்பதாக நிச்சயித்திருந்தாலும், அவரைப் பார்க்க முடியவில்லை. அதைப் பற்றிக் கேட்டபோது, நகரிலுள்ள பிரபல மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணினான். அந்த பேஷன்ட்ட பார்க்கப் போயிருக்கான்' என்றார். டாக்டருடைய முகத்தில் பெருமை ஜொலித்தது. மகன் தந்தைக்காற்றும் உதவி' என்று நினைத்துக் கொண்டேன்.
தொழில் பெருமைபோல, கலைப் பெருமை என்பதும் ஒன்றுண்டு. சென்ற டிசம்பர் சீஸனில், ஒரு கச்சேரிக்குப் போயிருந்தோம். எங்களுக்கு மூன்று வரிசை முன்பாக ஒருவர் உட்கார்ந்து கொண்டு ஆ! பலே! அப்படிப் போடு' என்று தொடையில் தாளம் போட்டுக் கொண்டு, தானும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் பாடகரின் தகப்பனார் என்ற உண்மை, கச்சேரி முடிந்த பின்தான் தெரிய வந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்களைத் தன் குரல் வளத்தால் கட்டிப்போட்டு மகிழ்விப்பது எளிதான செயலா என்ன? தன் மகனைப் பற்றிய அந்த மனிதரின் பெருமை நியாயமானதாகவே தோன்றியது.

செய்தொழில், கலை போன்றவற்றில் பெயரெடுத்திருப்பவரின் முதுகில் தட்டிக் கொடுப்பது அந்த நபரை மேலும் உற்சாகப்படுத்த உதவும்தான். ஆனால், வியாபாரத்தில் இந்தத் தன்மை சில சமயங்களில் எதிர்மறையாக மாற்றிவிடும்.

அண்மையில் ஒரு நிகழ்வு. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டே போனார். அவரின் தாயார் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்லியபடியிருந்தார். அவன் சூப்பர் இன்டெலிஜென்ட் மாமி' போன்ற அடைமொழிகள் வேறு. உள்ளபடியே அவன் பெயர் பிரபல நாளேடுகளில் நல்லபடியாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
ஆனால், போகப் போக நிலைமை முற்றிலும் மாறியது. வெற்றிப் பாதையில் விரைந்து செல்கையில் எங்கேயோ சறுக்கியது. விளைவு? இன்று சிக்கலில் மாட்டிக் கொண்டு வழக்குரைஞர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறான். இப்போதும் அவன் பெயர் ஏடுகளில் வருகிறது. ஆனால் வேறுவிதமாக! பெற்றோரும் உற்றாரும் முக்கியமான வேளைகளில் அறிவுரை சொல்லி, வேகத்தைக் குறைக்கும் வேகத்தடையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இன்றைய நாளில் பழைய பாரம்பரியப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க யாரும் தயாரில்லை. நூறு ரூபாய் சம்பளத்தில் மூன்று பேரைக் கட்டிக் காத்தேன்'... 1960-லேயே எங்களுக்கு ரெண்டு கார் இருந்தது' போன்ற பெருமைகள் வீண்.

ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அதை உணராமல், பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டே பொழுதைக் கடத்துகிறார்கள். மொழி, மதம், குடும்பம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொன்று. அவர்கள் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் எதார்த்த நிலைமையை உணராது செயல்பட்டால்? மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலே மகிமை இல்லை' என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் பாடியிருக்கிறாரே?

இன்றைய அரசியலில் மிக தூக்கலாகத் தெரிவது இரண்டு தன்மைகள்தான். முதலாவது, குறைந்துவரும் சகிப்புத் தன்மை; இரண்டாவது அதிகரித்துவரும் ஊழல். என்றைக்கு முன்னது அதிகரித்து, இரண்டாவது குறைகிறதோ அன்றுதான் இந்தியக் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad  Amisha.Rajani@timesofindia.com 22.09.2024  Hyder...