அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்
dinamalar 5.8.2018
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும்பாலானோரிடம் வரவேற்பையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் சேலத்தில் நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் போன்றவற்றை, கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது: எட்டு வழி சாலை அமைப்பதை எதிர்த்து, தி.மு.க., - பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுக்கின்றனர். அரசியல் ஆதாயம் தேட, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியினர், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பர். இந்தியாவில் அதிக போராட்டம் நடந்த மாநிலம், தமிழகம். ஆட்சியை கலைக்க பார்த்தனர்; களங்கம் கற்பிக்க பார்த்தனர். அனைத்தையும் முறியடித்தோம். அரசு ஊழியர்களை குத்தி விட்டு, வேடிக்கை பார்த்தனர். நன்றாக சிந்தித்து பாருங்கள்...
ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 82 ஆயிரம் ரூபாய், சம்பளம் வாங்குகிறார். நம்ம வீட்டு பையன், மண்டி போட்டு படித்து,எம்.இ., முடித்து, வேலையில் சேர்ந்தால், 10 ஆண்டு கள் தாண்டினால் கூட, 50 ஆயிரம் சம்பளத்தை தாண்டுவதில்லை. அவர்களுக்கு, 160 நாட்கள் விடுமுறை. எட்டாம் வகுப்பு வரை, 'பாஸ், பெயில்' கிடையாது. இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு போராடினால், யார் ஏற்றுக் கொள்வர்? கடந்த ஆண்டு மட்டும், 14 ஆயிரத்து, 719 கோடி ரூபாய், சம்பள உயர்வு வழங்கி உள்ளோம். இவ்வளவு பணத்தை வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவது, எந்த வகையில் நியாயம்? அதிகமாக ஊதிய உயர்வு தரப்பட்டுள்ளது. 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர், 60 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். என்னுடைய, பி.ஏ., 65 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார்; தற்போது, 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இன்னும் என்ன கொடுக்கிறது? எல்லா பணத்தையும் இவர்களுக்கு கொடுத்தால், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்; இதை நீங்கள் புரிந்து கொண்டு, மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். தி.மு.க., ஆட்சியிலிருந்த போது, போக்குவரத்து பணிமனைகளை அடமானம் வைத்தனர். அவர்கள் வைத்த கடன் சுமையை, நாம் சுமக்கிறோம். தற்போது, என்னை சந்தித்து, 'அரசுக்கு ஆலோசனை சொல்கிறேன்' எனக்கூறி, பெரிய புத்தகத்தை கொடுக்கின்றனர். அதை, அவர்கள் ஆட்சியில் செய்திருக்கலாமே! நமக்கு ஒன்றும் தெரியாதது போல, நமக்கு ஆலோசனை கூறுகின்றனர்.
நான் இரவு, 11:00 மணி வரை படிக்கிறேன். என் துறைகள் மட்டுமின்றி, மற்ற துறைகள் குறித்தும், தினமும் படிக்கிறேன். ஆட்சியை கவிழ்க்க வேண்டும்; கட்சியை உடைக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆ, ஊ என்றால், ஸ்டாலின், 'ராஜினாமா செய்' என்கிறார். இந்த நாற்காலி மீது, ஸ்டாலினுக்கு அதிக ஆசை; மக்கள் கொடுத்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. இது, பொது மக்களிடம் வரவேற்பையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment