Saturday, August 11, 2018


சென்னையின் சாலையோரக் கடைகளில் மட்டன், சிக்கன் பெயரில் பரிமாறப்படும் கன்றுக்குட்டி இறைச்சி: அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி தகவல்

Published : 10 Aug 2018 17:48 IST

 சென்னை

 

ஆய்வு நடத்தும் உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

சென்னையின் சாலையோரக் கடைகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி என்ற பெயரில் கன்றுக்குட்டியின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்குச் சமீபத்தில் புகார் ஒன்று வந்தது. அதில் கன்றுக்குட்டி இறைச்சி குறித்த வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட கடை சென்னை பெரிய மேடு, நேவல் ஹாஸ்பிட்டல் சாலையில் இருப்பதை அறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அந்தக் கடையில் மிகப்பெரிய ப்ரீசர் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியையும், ஆட்டுக் கால்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் அவை ஆட்டிறைச்சியோ, கோழி இறைச்சியோ அல்ல இளம் கன்றுக்குட்டியின் இறைச்சி எனத் தெரியவந்தது.

மாட்டிறைச்சியை ஆட்டிறைச்சி போன்று காண்பிக்க சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்திருந்தனர். மேலும் அரவை இயந்திரத்தில் நன்கு அரைத்த நிலையிலும் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது. க

டை உரிமையாளர்களிடம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.



ஆட்டிறைச்சி போல் காணப்படும் இளம் கன்றுக்குட்டிகளை வாணியம்பாடியிலிருந்து இறைச்சிக்காக வெட்டப்பட்டு அவை சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த இறைச்சி பேருந்துகள் அல்லது வேன் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு வாங்கி அவற்றை மேற்சொன்ன முறையில் சிறுதுண்டுகளாக ஆட்டிறைச்சிபோல் வெட்டி பின்னர், பாக்கெட்டுகளில் அடைத்து சாலையோரக் கடைகளுக்கு விற்கின்றனர்.

ஆட்டிறைச்சி கிலோ ரூ.600க்கு வாங்கினால் லாபமில்லை என்பதால் இதுபோன்ற கன்றுக்குட்டி இறைச்சியை ரூ.220க்கு வாங்கிச் செல்லும் சாலையோரக் கடைக்காரர்கள் அவற்றை பிரியாணியிலும், மற்ற அசைவ உணவுகளிலும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்று தயார் செய்து விற்கின்றனர்.

இதையடுத்து, 300 கிலோ கன்றுக்குட்டி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்றுக்குட்டி இறைச்சியை பெரியமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பல சாலையோரக் கடைகளுக்கு விற்க வைத்திருந்த இறைச்சிக் கடையின் உரிமையாளர் முகமது உமர், அவரது தந்தை ஸப்ருல்லா மீதும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் கண்முன் காணும் உணவு குறித்த புகார்களை 9444042322 என்ற உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கன்றுக்குட்டிகளை இறைச்சிக்கு வெட்டக் கூடாது, மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் அரசு ஒதுக்கிய இறைச்சிக் கூடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும் என்பது சட்டமாகும். இவற்றை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

மறதியும் தேவைதான்!

மறதியும் தேவைதான்!  நிவாற்றல் மிகவும் தேவைதான்; ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் தேவைதான் என்பதைப் பற்றி... மறதியும் தேவைதான் முனைவர...