Tuesday, April 17, 2018

விடைத்தாள் திருத்தும்போது மாரடைப்பால் உயிரிழந்த தலைமையாசிரியர்! - ஈரோடு அருகே சோகம்

17.04.2018



கோபிசெட்டிபாளையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவை அடுத்த புஞ்சை புளியம்பட்டி காயிதே மில்லத் வீதியைச் சேர்ந்தவர், ஏசுராஜா (53). இவர், புஞ்சை புளியம்பட்டியிலுள்ள கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவரும் நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில், மதிப்பெண் சரிபார்க்கும் அதிகாரியாக ஏசுராஜா இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் சுமார் 4.15 மணியளவில் மதிப்பெண் சரிபார்க்கும்போது திடீரென ஏசுராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட, வலியால் துடித்துச் சரிந்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுசெய்யும்போதே ஏசுராஜாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஏசுராஜாவின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் உடலை அவர்களது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். உயிரிழந்த ஏசுராஜாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். இன்னொரு மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணியின்போது பள்ளிக்கூடத்திலேயே, தலைமையாசிரியர் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024