Tuesday, April 24, 2018

மனசு போல வாழ்க்கை-2 : எத்தனை விதமாய் எண்ணங்கள்!

Published : 31 Mar 2015 12:52 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 


நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:

காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!

எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை

“ஏன் இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:

கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?”

பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!”

அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!

சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?

ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்

“ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? “ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.

எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.

அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!

ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். “சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”

அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”

எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.

ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!

“நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?

“அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.

உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High Court

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High ...