Tuesday, April 24, 2018

மனசு போல வாழ்க்கை-1 : முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்!

Published : 24 Mar 2015 13:28 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!

படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?

மன அமைப்பு

நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.

உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.

மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள். அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.

என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.

சுடுதண்ணீர் சிகிச்சை

ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான பலனையும் அடைவர்.

அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும் எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.

நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என் தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத மகத்தான மாறுதல் அது.

ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.

பெரும் கண்டுபிடிப்பு

நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல் வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர் அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் நெருப்பில் நடக்கிறார்கள்.

கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.

மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

இரண்டும் நிஜங்கள்

பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான்.

இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.

“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”

இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும்.

“என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.

எண்ணமே வாழ்வு

நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.

“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!

எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?

உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.

கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:

“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”



தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...