Tuesday, April 24, 2018

மனசு போல வாழ்க்கை- 3: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே!

Published : 07 Apr 2015 14:30 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன் 

தி  இந்து 



நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.

ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.

மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!”என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “ எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.

அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!



தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...