Thursday, April 12, 2018

டிஜிட்டல் போதை 29: செல்ஃபி: சுய(ம்) நலமா?

Published : 07 Apr 2018 10:55 IST

வினோத் ஆறுமுகம்




ஒரு நல்ல போட்டோவுக்காக நீங்கள் என்ன விலை தருவீர்கள்? இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் அதிகபட்ச விலையை, அதாவது உயிரையே தருகிறார்கள். சுற்றுலாத் தலங்களில் சமீபகாலமாகக் காவல்துறைக்குப் பெரும் தலைவலியாக இருப்பது செல்ஃபி மரணங்கள்தாம். ஒரு நல்ல செல்ஃபி எடுத்து, தனது ஃபேஸ்புக்கிலோ இன்ஸ்டாகிராமிலோ பகிர்ந்து சில லைக்குகள் வாங்கும் ஆர்வத்தில் அல்லது வெறியில் மதியிழந்து இவர்கள் மரணமடைகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் செல்ஃபி மோகம் காரணமாக இத்தகைய பலிகள் அதிகரித்து வருவதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பக்கம் மரணம் பயமுறுத்துகிறது என்றால், உளவியல் ஆய்வாளர்களோ செல்ஃபி வெறியால் நார்சிஸம் (சுயமோகம்), சைக்கோபாத் (ஆளுமைக் கோளாறு) போன்ற மனநோய்கள் அதிகமாகி வருவதாகக் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகப் பதின் வயது இளைஞர்கள் தங்கள் படங்கள் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தும் வினைகள், எதிர்வினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.

உளவியல் காரணம் என்ன?

அமெரிக்காவில் ஒரு வகுப்பறையில் ஆசிரியரும் ஒரே ஒரு மாணவரும் மட்டும் இருந்தார்கள். அந்த ஆசிரியர் கர்ப்பமாக இருந்தார். திடீரென்று அந்த ஆசிரியருக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கே இருந்த மாணவன் செய்த முதல் காரியம் செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுதான்!

இந்தச் செய்தியை மறுநாள் பிரசுரித்த பத்திரிகைகள் ஆங்கிலத்தில் ‘செல்ஃபி’ஷ்’ (சுயநல செல்ஃபி) எனத் தலைப்பிட்டிருந்தன. ஒருவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தபோது, அதை செல்ஃபி எடுத்த அந்த மாணவனின் மனநிலை என்ன? அவன் ஏன் அப்படிச் செய்தான்? உளவியல்ரீதியாக இதற்குக் காரணம் இருக்கிறது.

பதின் வயது என்பது ஒருவருக்குச் சுய அடையாளத்தை உருவாக்கும் பருவம். நான் யார், இந்த உலகில் என் அடையாளம் என்ன என்று மனது சிந்திக்கத் தொடங்கும். அது மட்டுமல்ல. பதின் பருவம் என்பது தன் இணையைத் தேடும் பருவமும்கூட. தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மத்தியில், இந்த இரு காரணங்களுக்காக எதையாவது செய்து தம் இருப்பைப் பதின் வயதினர் உறுதிசெய்வது வழக்கம்.

படமாகவே காட்டும் ஆர்வம்

ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது தன் இருப்பை உணர்த்துவது, அதாவது, ‘ஏய்… நான் அங்கேதான் இருந்தேன்!’ என்று சொல்ல முனைவதுதான் செல்ஃபி மோகத்துக்கு அடிப்படை. அநாவசியத் தகவல் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், தான் ஒரு தகவலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல, ‘நான் அந்த இடத்திலேயே இருந்தேன்’ என்று செல்ஃபி நிரூபிப்பதால், கூடுதலாகத் தன் மீது மற்றவர்களின் கவனத்தைக் குவிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

அண்ணா சாலையில் பேருந்து பள்ளத்தில் விழுகிறது, அதை செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் மற்றவர்களின் கவனம் தன் மீது திரும்பும் என்ற ஒரு அற்ப மகிழ்ச்சி. இது போன்ற பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காட்சிப் பொருளா நாம்..?

அடுத்து, செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு இன்னொரு முக்கியக் காரணம், ‘என்னை இப்படி ஏற்றுக்கொள்வாயா?’ என்று பிறரின் அங்கீகாரத்துக்காக ஏங்குகிற மனநிலை. இது மற்றவர்கள் முன் நம்மைக் காட்சிப் பொருளாக்கும் மனநிலை. இது ஒருவரின் சுயகவுரவத்தைக் கூட்ட மேற்கொள்ளும் நடவடிக்கை. அழகான இடத்திலோ ஒரு பிரபலத்துடனோ செல்ஃபி எடுத்து மற்றவர்கள் முன் தன்னைக் காட்சிப் பொருளாகப் பகிர்வது. அது பெறும் ‘லைக்’குகளைக் கொண்டு தன்னுடைய சுயகவுரவம் அதிகரித்துவிட்டதாக நம்பிக்கொள்வது.

அப்படி மற்றவர்கள் ‘லைக்’ செய்யவில்லை என்றால், மனச்சோர்வு கொள்கிறார்கள் இளைஞர்கள். இந்த செல்ஃபி மனச்சோர்வு என்பது இன்னொரு புதிய பிரச்சினை. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024