Thursday, April 12, 2018

மருத்துவ உலகின் காலாட்படை!

Published : 07 Apr 2018 10:54 IST


மு. வீராசாமி

 

உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7

‘திருமணமான பிறகு நன்றாகச் சாப்பிட வேண்டும். அதுவும் முக்கியமாகக் கருவுற்ற காலத்தில். அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்!’

- கனிவு மிகுந்த இந்த வார்த்தைகளை, அங்கே கூடியிருந்த கருவுற்ற தாய்மார்களிடையே மிகவும் நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் அந்தக் கிராம சுகாதார செவிலி. பொருளாதாரத்தில் பின்தங்கிய கருவுற்ற தாய்மார்களுக்கு, அரசு 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது. அதன் முக்கிய நோக்கமே, அந்தத் தாய்மார்கள் பிரசவ காலத்தில் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான். ஊட்டச்சத்துமிக்க உணவு, பழங்கள் சாப்பிடுவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், பலர் அதைச் சீட்டுப்பணம் சேமிப்பதற்கும் நகைநட்டு வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இது குறித்து, தாய்மார்களிடையே அந்தச் செவிலி பேசும்போது, “உங்களில் சிலர் அந்த மாதிரி செய்வதை நாங்கள் பார்க்கிறோம். இன்னும் சிலர் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இனி அப்படிச் செய்யாதீர்கள். அந்தப் பணத்தைக் கொண்டு கருவுற்ற காலத்தில் நன்றாகச் சாப்பிடுங்கள்” எனும்போது, அதில் சிறிது அக்கறையும் கண்டிப்பும் கலந்திருந்தன.
நலத்திட்டத் தூண்கள்

கருவுற்ற காலத்தில் நன்றாகச் சாப்பிட்டால்தான் ரத்த சோகை ஏற்படாது. இல்லையென்றால் கைகால் சோர்ந்துபோய், குழந்தை பிறப்பு காலத்தில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். வழக்கமாகச் சாப்பிடும் உணவைக் காட்டிலும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.

நேரப்படி சாப்பிடுவதும் செவிலியர் தரும் சத்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்வதும் முக்கியம். கருவுற்ற காலத்தில், தாய் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதும் அவசியம். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கருவுற்றது உறுதி செய்யப்பட்டவுடன் படுத்து உறங்கிக்கொண்டே இருக்காமல் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துகொண்டே இருப்பதும் முக்கியம். சுகப்பிரவசத்துக்கு இது உதவும்.

இந்தக் கருத்துகளை எல்லாம், உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்வதுபோல அந்தச் செவிலி சொல்லிக்கொண்டிருந்தார். இவரைப் போன்ற கரிசனம் மிக்க செவிலியரால்தான், பல கிராமங்களில் ‘தாய்-சேய் நலத் திட்டம்’ முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. அதனாலேயே இவர்களின் பணி, போற்றுதலுக்குரியது. இத்தகைய சுகாதாரப் பணியாளர்களை நாம் ‘மருத்துவ உலகின் காலாட்படை’ என்று சொல்லலாம்.

திடீர்ப் பிரச்சினைகள்

மருந்து என்பது நோயைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், சில நேரம் மருந்து விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. ஏன் மரணம்கூட ஏற்படலாம். மருத்துவ உலகில் இது தவிர்க்க முடியாது.

பக்க விளைவு என்றோ ஒவ்வாமை என்றோ அதற்குக் காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. பென்சிலின், அற்புதமான ஒரு ஆன்டிபயாடிக் மருந்து. பல நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக உச்சத்தில் இருந்தது. ஆனால், அதுவே ஒரு காலகட்டத்தில் மோசமான மரணங்களை உண்டாக்கி, மருத்துவ உலகை அச்சத்தில் ஆழ்த்தவும் செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்புகூட போலியோ சொட்டு மருந்து முகாமில் சில குழந்தைகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்தப் பிரச்சினை மாநிலம் முழுவதும் இங்கொன்றும் அங்கென்றுமாகப் பரவி மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பிரச்சினையைத் தைரியமாக எதிர்கொண்டு, பொறுமையாக மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி சொட்டு மருந்தைத் திறம்பட வழங்கியதில் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு அபரிமிதமானது.


இடைவெளி குறைப்பு

கிராம மக்களுக்கு ஆத்திர அவசரம் என்றால் அரசு மருத்துவனைதான் புகலிடம். அது கைகால் வலியாகட்டும், காய்ச்சல், வயிற்றுப்போக்காக இருக்கட்டும், அவர்களுக்கு எல்லாமே உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் கண் கண்ட கோயில்.

பெண்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்பு பின்னிப் பிணைந்தது. கருவுற்றது முதல் குழந்தைப்பேறுக்குப் பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதுவரை பெண்களுக்கும் சுகாதார நிலையங்களுக்கும் இடையேயான தொடர்பு, ஒரு தொடர் நிகழ்வாக இருக்கிறது.

பிரசவம் என்பது பெண்களைப் பொறுத்த வரையில் மறுபிறப்புப் போன்றது. இதனால்தான் கருவுற்ற தாய்மார்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நிகழ்வைச் சிறப்பாக நடத்துகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணங்களால், பெண்கள் பலருக்கு இந்த வாய்ப்பு பெரும்பாலும் அமைவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள இடைவெளியைப் போக்கவும் ஒரு இணக்கமான சூழலுக்கு வழிவகுக்கவும் இதுபோன்ற வளைகாப்பு நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன.

போற்றுவோம்

இப்போதும் உணவுப் பொருட்களில் கலப்படம் எவையும் செய்யப்பட்டுள்ளனவா? தரமானதாக இருக்கிறதா? காலாவதியான பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறார்களா? சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா? கொசு பரவுவதற்கு வாய்ப்பாகத் தண்ணீர் எங்கேனும் தேங்கி இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்ய சுகாதாரப் பணியாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த உலக சுகாதாரப் பணியாளர்கள் வாரத்தில் (ஏப்ரல் 8 முதல் 12 வரை) அவர்களின் பணியை நினைவுகூர்ந்து அங்கீகரிப்பதோடு, வாய்ப்புக் கிடைக்கும்போது போற்றவும் செய்வோம்.

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024