இந்து திருமணச் சட்டப்படி பெண்ணின் சம்மதம் பெறாத திருமணம் செல்லாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்
Published : 12 Apr 2018 08:25 IST
புதுடெல்லி
இந்து திருமணச் சட்டப்படி பெண்ணின் சம்மதம் பெறாத திருமணம் செல்லாது என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா அரசியல்வாதி ஒருவர் தனது மகளின் விருப்பத்துக்கு மாறாக, கட்டாயத் திருமணம் செய்துவைத்தார். இதையடுத்து கர்நாடகாவை விட்டு வெளியேறிய அப்பெண் தற்போது டெல்லியில் தங்கியுள்ளார். மேலும் டெல்லி மகளிர் ஆணைய உதவியுடன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
அவர் தனது மனுவில், மணப்பெண் சம்மதம் இல்லாத இந்து திருமணங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரினார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது இந்து திருமணச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒரு பெண்ணை ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ திருமணம் செய்துவைத்தால் அத்திருமணம் செல்லாது என்பது இந்து திருமணச் சட்டத்தில் ஏற்கெனவே தெளிவாக உள்ளது. எனவே புதிய உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. இது தொடர்பாக சிவில் நீதிமன்றங்களே உண்மையை ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்” என்று குறிப்பிட்டனர்.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டனர். வழக்கை மே 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment