Saturday, April 21, 2018

மருத்துவ மாணவர்களுக்கு 3 ஆண்டு பணி கட்டாயம்

Added : ஏப் 21, 2018 00:38

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகள் பணிபுரிவதை கட்டாயமாக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, மாணவர்கள் இடை நிற்றலை தடுக்கவும், புதிய விதிமுறைகளுக்கு, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மாநில சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேரும் போது, படிப்பை பாதியிலேயே கைவிட்டால், 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும், படிப்பை முடித்ததும், ஓராண்டு காலம், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணி புரிவதற்கும் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.எனினும், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எம்.பி.பி.எஸ்., படிப்பை இடை நிறுத்தும் மாணவர்களுக்கான அபராதத் தொகையை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கும், முதுநிலை படிப்பில் இருந்து இடை நிறுத்தும் மாணவர்களுக்கான அபராதத் தொகையை, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், அரசு அனுமதி அளித்துள்ளது.படிப்புக்கு பின், அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும்; இல்லாவிட்டால், 30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் விதிமுறைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024