Saturday, April 21, 2018

நீதிமன்ற உத்தரவுகள் தாமதம் : அறிக்கை அளிக்க நீதிபதிகள் குழு

Added : ஏப் 21, 2018 01:48

சென்னை: நீதிமன்ற உத்தரவுகள் கிடைக்க, காலதாமதம் ஆவதாக கூறப்படும் புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர், சரவணகுமார் தாக்கல் செய்த மனு:கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளில், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்; வழக்குகள் முடிவுக்கு வந்து, இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படும்.உத்தரவின் நகல்கள் பெற, நீதிமன்றங்களில் உள்ள, சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பிக்க வேண்டும். உத்தரவின் நகல்கள் கிடைப்பதில், காலதாமதம் ஏற்படுகிறது.நீதிமன்ற ஊழியர்களை கேட்டால், வழக்கு தொடர்பான ஆவணங்களை, கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களை குறிப்பிடுகின்றனர். போதிய அளவில், பீரோ, இரும்பு அலமாரிகள் இல்லை.நீதிமன்றத்தில், வழக்கு ஆவணங்கள் தரையிலும், மேஜையிலும் அடுக்கி வைக்கப்படுகின்றன. முறையான பாதுகாப்பு இல்லை. ஆவணங்கள் இருக்கும் அறை, காற்றோட்டமாக இல்லை. போதிய இடவசதி இல்லாததால், துாசு ஒவ்வாமையினால், பாதிப்பு ஏற்படுகிறது.உத்தரவுகள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி, பதிவாளர் ஜெனரல், உள்துறை செயலருக்கு மனுக்கள் அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனுவை, பைசல் செய்யும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.இந்தப் பிரச்னை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள், சத்தியநாராயணன், கிருபாகரன், சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பதிவாளர் ஜெனரல் உள்ளிட்ட பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை, முதல் பெஞ்ச் நியமித்தது.அறிக்கையை, ஜூன் மூன்றாம் வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024