Saturday, April 7, 2018

'மாஜி' துணைவேந்தரிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

Added : ஏப் 07, 2018 04:20

சென்னை:லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், ராஜாராமின் வங்கி லாக்கரில் இருந்து, 4 கிலோ தங்கத்தை, போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜாராம். இவர், 2013 - 16ல், சென்னை, அண்ணா பல்கலையின், துணை வேந்தராக பணியாற்றினார்.அப்போது, தகுதி இல்லாத, 54 பேருக்கு, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி வழங்க பரிந்துரைத்து உள்ளார்.அதற்காக, ஒவ்வொரு வரிடமும், 40 லட்சம்ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளார்.

புகார் வந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், தேனி மற்றும் சென்னையில் உள்ள, ராஜாராமுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.ராஜாராமிடம் பணம் கொடுத்து, பணியில் சேர்ந்த, ஜெயஸ்ரீ, ஹெலன் கலாவதி, பாலமுருகன், மந்தாகனி உள்ளிட்டோர் வீடுகளிலும், அண்ணா பல்கலையில், ராஜாராம் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் தேனி வங்கிகளில் உள்ள லாக்கர்களில், ராஜாராம் வைத்திருந்த, இரண்டு கிலோ தங்கக் கட்டிகள், 2 கிலோ நகைகள் என, நான்கு கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.ராஜாராம் மனைவி பெயரில், 22 பஸ்கள் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக, ராஜாராம் வாங்கி குவித்துள்ள சொத்து விபர பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024